(2415)

(2415)

குறிப்பெனக்குக் கோட்டியூர் மேயானை யேத்த,

குறிப்பெனக்கு நன்மை பயக்க, – வெறுப்பனோ

வேங்கடத்து மேயானை மெய்வினைநோ யெய்தாமல்,

தான்கடத்தும் தன்மையான் தாள்.

 

பதவுரை

கோட்டியூர் மேயானை

திருக்கோட்டியூரில் நித்யவாஸம் பண்ணுமவனும்

வேங்கடத்து மேயானை

திருமலையில் நித்ய வாஸம்பண்ணுமவனுமான பெருமானை

ஏத்த

துதிப்பதற்கு

எனக்கு குறிப்பு

எனக்கு ஆசை

நன்மை பயக்க

(எம்பெருமானை இடைவிடாது அநுபவிப்பதனாலுண்டாகும்) பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்கு

எனக்கு குறிப்பு

எனக்கு குதூஹலம்,

மெய் வினை

சரீர ஸம்பந்தத்துக்கு அடியான கருமங்களும்

நோய்

வியாதிகளும்

எய்தாமல்

வந்து சேராதபடி

தான் கடத்தும் தன்மையான

தானே அவற்றைப் போக்கியருளும் ஸ்வபாவத்தை யுடையனான அப்பெருமானுடைய

தான்

திருவடிகளை

வெறுப்பனோ

மறந்திருப்பனோ.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருக்கோட்டியூர் திருவேங்கடம் முதலான பல திருப்பதிகளிலே எனக்காக வந்து ஸந்நிதிபண்ணி ஸுலபனாயிருக்குமெம்பெருமான் திருவடிகளை மறந்திருக்க என்னால் முடியுமோவெண்கிறார். திருக்கோட்டியூரிலும் திருமலையலும் சென்று எம்பெருமானுக்குப் பல்லாண்டு பாடவேண்டுமென்றும் அவனை இடைவிடாது அநுபவித்து ஆத்மாவுக்கு நன்மையை விளைத்துக் கொள்ள வேணுமென்றும் ஆசை கொண்டிருக்கிறேன். எவ்விதமான கருமங்களும் துக்கங்களும் எனக்கு வந்து கிட்டாதபடி செய்து என்னைக் காத்தருள்கின்ற அப்பெருமானுடைய திருவடிகளை நான் எப்படி உபேக்ஷித்திருக்கமுடியும் – என்றாராயிற்று.

மூன்றாமடியில் “வெவ்வினைநோய்“ என்றும் பாடமாம்.

 

English Translation

I priase the lord of Tirukkottiyur, but do I love the Lord of Venkatam any less/ He knows to free me from the clutches of bodily sicknesses and fulfill my desires. His feet are my refuge.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top