(2356)

(2356)

சார்ந்தகடு தேய்ப்பத் தடாவியகோட் டுச்சிவாய்

ஊர்ந்தியங்கும் வெண்மதியி னொண்முயலை, – சேர்ந்து

சினவேங்கை பார்க்கும் திருமலையே, ஆயன்

புனவேங்கை நாறும் பொருப்பு.

 

பதவுரை

தடாவிய

பரப்பையுடைத்தான

கோடு

சகரங்களினுடைய

உச்சி வாய்

உச்சயிலே

அகடு தேய்ப்ப

கீழ்வயிறு உராயும்படியாக

சார்ந்து

கிட்டி

ஊர்ந்து இயங்கும்

மெல்ல ஸஞ்சரிக்கின்ற

வண் மதியின்

அழகிய சந்திரனிடத்துள்ள

ஒண் முயலை

அழகிய முயலை,

சினம் வேங்கை

கோபத்தை யுடைத்தான வேங்கைப் புலியானது

சேர்ந்து

கிட்டி

பார்க்கும்

(அதைப் பிடித்துக் கொள்ளவும்விட்டுப் போகவும் மாட்டாமல்) எப்போதும் பார்த்தபடியே நிற்கப் பெற்ற

ஆயன்

கண்ணபிரானுடையதாய்

புனம் வேங்கை நாறும்

தன்னிலத்தில் வளர்ந்து செழிப்புற்ற வேங்கைமரங்கள் கமழப் பெற்றதான

பொருப்பு

மலை

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- திருமலையை அநுபவிக்கிறார். திருமலையின் சிகரம் சந்திரமண்டலத்தளவும் ஓங்கியிருக்கின்ற தென்பதை ஒரு அதிசயோக்தியினால் வெளியிடுகிறார் சந்திரனிடையே கறுப்பாகத் தோன்றுவதைக் கவிகள் பலவிதமாகக் கூறுவதுண்டு. மான் என்பர் சிலர், முயல் என்பர் சிலர் மற்றும் பல்வகையுங் கூறுவர். ‘முயல்‘ என்ற கொள்கையைப் பின்பற்றி இப்பாசுரமருளிச் செய்யப்படுகிறது. ஆகாசத்திலே திரிகின்ற சந்திரன் திருமலையின் சிகாநுனியில் தனது கீழ்வயிறு தேயும்படியாக இதில் ஸம்பந்தப்பட்டுக் கொண்டே செல்லுகின்றன்னாம், அப்போது அவனது மடியிலிருக்கின்ற முயலைத் திருமலைமீது திரிகின்ற வேங்கைப்புலி கண்டு அதனைத் தான் உணவாகக் கொள்ளக்கருதி, பிடித்துக்கொள்ளவும் மாட்டாமல் விட்டுப் போகவும் மாட்டாமல் உறுத்துப் பார்த்தபடியே நிற்கின்றதாம். இப்படிப்பட்ட திருமலை வேங்கைமலர்களின் வாஸனை வீசப்பெற்றதாய்க் கண்ணபிரா னெழுந்தருளியிருக்குமிடமான திருமலையாம்.

 

English Translation

The strong mountain of venkatam rises with peaks that scrape the Moon and angry tigers pounce to catchthe hare on it, it is the abode of the cowherd Lord.  The fragrance of wild vengai trees waft all over the mountain.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top