(2336)

(2336)

பெரிய வரைமார்வில் பேராரம் பூண்டு,

கரிய முகிலிடைமின் போல, – தெரியுங்கால்

பாணொடுங்க வண்டறையும் பங்கயமே, மற்றவன்றன்

நீணெடுங்கண் காட்டும் நிறம்.

 

பதவுரை

பெரியவரை மார்வில்

பெரிய மலைபோன்ற திருமார்பிலே

பேர் ஆரம்பூண்டு

பெரிய ஹாரத்தை அணிந்துகொண்டு

திரியுங்கால்

உலாவினால்

கரிய முகிலிடை மின் போல

காளமேகத்திலே மின்னல் மின்னினாற் போன்றிருக்கும்!

மற்று

அன்றியும்,

அவன் தன்

அப்பெருமானுடைய

நீள் நெடு கண்

நீண்டு பரந்த திருக்கண்களினுடைய

நிறம்

நிறத்தை

பாண் ஒடுங்க வண்டு அறையும் பங்கயமே காட்டும்

பாட்டென்று பேர் பெற்றவையெல்லாம் ஒடுங்கும் படியாக (அதிமதுரமாக) வண்டுகள் இருந்து பாடப்பெற்ற தாமரைப்பூவே காட்டித்தரும்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- எம்பெருமானுடைய ஆபரணலங்காரத்திலும் கண்ணழகிலும் ஈடுபட்டு அநுபவித்துப் பேசுகிறார். இரண்டாமடியின் தனிச்சீர் ‘தெரியுங்கால்‘ என்றும் ‘திரியுங்கால்‘ என்றும் இரு வகைப்பாட முள்ளது. முந்தின் பாடத்தில், எம்பெருமான் பெரிய மலைபோன்ற தனது திருமார்பில் ரத்நஹாரத்தைச் சாத்திக் கொண்டிருக்கும்படியை அநுஸந்தித்தால் காளமேகத்திலே மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும். பிந்தின பாடத்தில் – எம்பெருமான் தனது திருமார்பிலே ரத்நஹாரத்தை யணிந்து கொண்டு உலாவத் தொடங்கினால் காளமேகத்தில் மின்னல் மின்னினாற்போலே யிருக்கும் என்பதாகக் கருத்தாகும். கரிய திருமார்புக்குக் காளமேகமும் ரத்நஹாரத்திற்கு மின்னலும் ஏற்றவுவமையாம்.

(பாணொடுஙக இத்யாதி) பாண் –இசைப்பாட்டு, அது ஒடுங்கும்படியாக (அதைவிட அதிக மதுரமாக) வண்டுகள் இசைபடப்பெற்ற தாமரைப்பூப் போலே அவனுடைய திருக்கண்கள் விளங்குகின்றன என்றவாறு.

 

English Translation

On his strong mountain-like chest, he wears long beautiful necklaces and gems, revealing his dark frame like a rain-cloud lit by a lightning.   His long red eyes are the hue of a bee-humming lotus.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top