(2221)
சுருக்காக வாங்கிச் சுலாவினின்று ஐயார்
நெருக்காமுன் நீர்நினைமின் கண்டீர், – திருப்பொலிந்த
ஆகத்தான் பாதம் அறிந்தும், அறியாத
போகத்தா லில்லை பொருள்.
பதவுரை
|
ஐயார் |
– |
கோழையானது |
|
சுருக்காக வாங்கி |
– |
சரீரத்தைச் சுருங்க வலித்து |
|
சுலாவி நின்று |
– |
உடம்பு முழுவதும் சூழ்ந்து கொண்டு நின்று |
|
நெருக்காமுன் |
– |
(உயிர் போகும்போது கழுத்தளவிலே வந்து கூடி) நெருக்குவதற்கு முன்பே, |
|
திரு பொலிந்த ஆகத்தான் பாதம் |
– |
பிராட்டியாலேர விளங்குகின்ற திருமார்பையுடைய பெருமானுடைய திருவடிகளை |
|
நீர் நினைமின் |
– |
நீங்கள் சிந்தியுங்கோள்: |
|
அறிந்தும் |
– |
பகவத் விஷயத்தை அறிந்தவர்களாயிருந்தும் |
|
அறியாத |
– |
அறியாதவர்களாகவே உங்களைச் செய்யவல்ல |
|
போகத்தால் |
– |
சப்தாதி விஷயங்களால் |
|
பொருள் இல்லை |
– |
ஒரு ப்ரயோஜனமுமில்லை. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- சிற்றின்பங்களில் ஆழ்ந்து திரிகின்ற விஷயப்ரவணர்களை விளித்து ‘நீங்கள் இப்படி விஷயபோகங்ள் செய்வதனால் சிறிதும் பலனில்லை; லக்ஷ்மீநாதனான எம்பெருமானுடைய திருவடிகளையே சிந்தித்திருங்கள்; ஆனால் நீங்கள் என்ன நினைக்கலாமென்றால்,எம்பெருமானைச் சிந்திப்பதற்கு இப்போது என்ன அவஸரம்? போகப்போகப் பார்த்துக்கொள்வோம் என்று நினைத்திருக்கலாம்; இவ்வழுக்குடம்பின் தன்மை உங்களுக்குத் தெரியாதோ? கோழையானது சரீரமெங்கும் சூழ்ந்து கொண்டு உடம்பைச் சுருங்கடித்து ஒன்றைச் சிந்திக்கவும் ஒன்றைச் சொல்லவும் முடியாதபடி திடீரென்று பண்ணிவிடும்; “ப்ராணப்ரயாணஸமயே கபவாதபித்தை: கண்டாவரோதநவிதௌ ஸ்மரணம் குதஸ்தே” = உயிர்போகுங்காலத்தில் கபம், வாயு, பித்தம் முதலியவற்றால் கழுத்து அடைபட்டுவிட்டால் உன்னைச் சிந்திக்கமுடியுமோ?” (முகுந்தமாலை) என்று ஞானிகளும் சொல்லிவைத்திருக்கிறார்கள்: நமக்கு இன்னமும் நீண்ட ஆயுள் இருக்கின்றதென்று நம்பியிருக்க இடமுண்டோ? இல்லை; ஆதலால் சிலேஷ்மம் வந்து கட்டி வருத்துவதற்கு முன்னமே திருமகள் கொழுநனுடைய திருப்பாதங்களைச் சிந்தித்து வாழுங்கள். நீங்கள் பற்றியிருக்கிற விஷயபோகங்கள் எப்படிப்பட்டவை யென்றால், பகவத் விஷயஜ்ஞாநம் சிறிது இருந்தாலும் அதனை உருமாய்க்குமவை; ஆகவே அப்படிப்பட்ட விஷயபோகங்களால் உங்களுக்கு அநர்த்தமே பலிக்குமே யன்றி வேறொரு நன்மையும் நேரிடாது என்று உபதேசித்தாராயிற்று.
ஐயார் = ‘ஐ’ என்று கோழைக்குப் பெயர்; ‘ஆர்’ விகுதி – இழிவு சிறப்பு. கலாவுதல் -சூழ்ந்து கொள்ளுதல்.
அறிந்துமறியாத போகத்தால் = விவேகிகளையும் அவிவேகிகளாகச் செய்யவல்ல விஷயபோகம் என்கை. அன்றியே; ‘விஷயபோகம் பொல்லாதது’ என்று தெரிந்துகொண்டாலும் அந்த அறிவின் பலனாக அதை விட்டுத் தொலைக்கணுமே; அப்படி விடமுடியாத போகம் – என்றும்பொருள் கூறுவர். இப்பொருளில், ‘அறியாத’ என்றது – அறிவின் காரியமான விடுகையைப் பெறமாட்டாத என்றபடி. மஹாகவிகளின் பிரயோகங்களில், சொல்மிகச் சுருங்கிப் பொருள் மிக விரிந்திருக்குமே.
English Translation
Suffice your life of mindless pleasure, -It is of no use! Before phlegm fills your chest and blocks your breath, contemplate the feet of the lord with sri on his chest. Know this for certain.
