(2190)

(2190)

அன்றதுகண் டஞ்சாத ஆய்ச்சி யுனக்கிரங்கி,

நின்று முலைதந்த இன்நீர்மைக்கு, அன்று

வரன்முறையால் நீயளந்த மாகடல்சூழ் ஞாலம்,

பெருமுறையா லெய்துமோ பேர்த்து.

 

பதவுரை

அன்று

(பூதனை பிணமாக விழும்படி நீ முலையுண்டு அவளுயிரை முடித்த) அக்காலத்தில்

அதுகண்டு

முலை கொடுத்த அவள் செத்துக்கிடந்த அச் செய்தியைக் கண்ணாலே பார்த்தும்

அஞ்சாத

‘முலை கொடுக்கிற நாமும் ஒருகால் செத்துப் போவோமோ!’ என்று பயப்படாத

ஆய்ச்சி

யசோதைப் பிராட்டியானவள்

நன்று

தரித்து நன்று

அந்தப் பூதனையின் (விஷத்திற்கு மாற்றாக)

உனக்கு இரங்கி முலை தந்த

உன்னிடத்துப் பரிவு கொண்டு முலை கொடுத்த

இ நீர்மைக்கு

இந்தப் பெருங் குணத்திற்கு,

அன்று நீ வரன்முறையால் அளந்த மா கடல் சூழ் ஞாலம்

முன்பு நீ சிறந்த உறவினாலே அளந்து கொண்ட கடல் சூழ்ந்த இவ்வுலகமானது

பெருமுறையால் எய்துமோ

இன்னது பெரியதென்று பார்க்கும் முறையில் ஒப்பாகப் பொருந்துமோ?

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- முலை கொடுக்கவந்த பேய்ச்சியானவள் பிணமாய் விழுந்துகிடந்தபடியைப் பார்த்த யசோதை  ‘இதென்ன உத்பாதம்!’ என்றுவெருண்டோட வேணுமேயல்லது, அணுகிவந்து முலைகொடுத்திருக்ககூடாது; 1. “பேய்ச்சி முலையுண்ட பின்னையிப்பிள்ளையைப் பேசுவ தஞ்சுவனே” என்று அஞ்சிக் காதவழியோட வேண்டியிருக்கவும். 2. “பேய்ச்சி பாலுண்ட பெருமானைப் பேர்ந்தெடுத்து ஆய்ச்சி முலைகொடுத்தாளஞ்சாதே” என்னும்படி அச்சமின்றி அணுகிவந்து உன்னை எடுத்தணைத்து முலைகொடுத்த பெருங்குணத்தை நோக்குங்கால், முன்பு நீ உலகளந்த அரிய பெரிய காரியத்திற்காட்டிலும் இக்காரியமே மிகப்பெரிதென்று சொல்லலாம்படி யிருக்கின்றதென்கிறார்.  இத்தால் – யசோதைப் பிராட்டிக்குக் கண்ணபிரானிடத்துள்ள அன்பு அளவற்றதென்று வியந்து கூறினாராயிற்று.

வரன்முறையால் நீ அளந்த =  ‘வரம்‘ என்னும் வடசொல் (மகர னகரப் போலியினால்) ‘வரன்‘ என்று கிடக்கிறது.  ‘சிறந்ததான‘ என்றுபொருள்.  சிறந்த முறையானது ஸ்வஸ்வாமிபாவ ஸம்பந்தம்.  உலக முழுவதும் தன்னுடைய ஸொத்தாயும் தான் அதற்கும் ஸ்வாமியாயு மிருக்கையாகிற சிறந்த ஸம்பந்த மிருக்கையாலேயன்றோ தன்னை யழியமாறியும் அளந்துகொள்ள நேர்ந்தது.

அளந்தமாகடல் ஞாலம் – முலைதந்த இந்நீர்மைக்குப் பெருமுறையால் எய்துமோ? = நீ மாகடல் சூழ் ஞாலத்தையளந்த மஹாகுணமானது யசோதை அஞ்சாமல் முலைதந்த மஹா குணத்திற்கு ஈடாகமாட்டாது என்றவாறு அதாவது யசோதை முலைதந்த நீர்மையை ஒரு தட்டிலும் நீயளந்த மாகடல் சூழ் ஞாலத்தை ஒரு தட்டிலும் வைத்து நறுத்துப்பார்த்தால் 3.“த்ரைலோக்யராஜ்யம் ஸகலம் ஸீதாயா முப்நுயாத் கலாம்” (மூவுலகுங்கூடியும் ஸீதைக்கு ஓரளவும் ஈடாகாது) என்றாற்போலே அஜகஜாந்தரமாயிருக்குமென்பதாகக் கொள்ளலாம்.

பெருமுறையால் எய்துமோ பேர்த்து = பெருமுறையாவது – இது பெரிதா? அது பெரிதா? என்று ஆராயும் வகை; அப்படி ஆராயுமிடத்து ஒப்பாகுமோ? என்கை.  “பேர்த்து” என்பதற்குப் பொருள் விசாரிக்க வேண்டா; வார்த்தைப்பாடு என்று கொள்ளலாம்.

 

English Translation

Even then the cowherd dame yosada grieved for you and gave you her breast to suck without fear. Can the whole ocean-girdled Earth you measured and took be a return for her love?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top