(2167)

(2167)

நீயும் திருமகளும் நின்றாயால், குன்றெடுத்துப்

பாயும் பனிமறைத்த பண்பாளா, – வாயில்

கடைகழியா வுள்புகாக் காமர்பூங் கோவல்

இடைகழியே பற்றி யினி .

பதவுரை

குன்று

கோவர்த்தன மலையை
எடுத்து

வேரோடு பிடுங்கி யெடுத்து
பாயும் பனி மறுத்த

மேலேவந்து சொரிகிற மழையை மேலேவிழாமல் தடுத்த
பண்பாளா

குணசாலியே!
காமர் பூ கோவல்

விரும்பத்தக்க அழகிய திருக்கோவலூரில்,
வாசல் கடை

திருவாசலுக்கு வெளியே.
கழியா

வெளிப்பட்டுப் போகாமலும்
உள் புகா

உள்ளே புகாமலும்
இடைகழியே

நடுக்கட்டான இடை கழியிடத்தையே

(பொய்கை பூதம் பேய் என்ற நாங்கள் மூவரும் தங்கியிருந்ததனால்)

பற்றி

விரும்பிய இடமாகக் கொண்டு
நீயும் திருமகளும்

நீயும் பிராட்டியுமாக
இனி

இப்போது
நின்றாய்

நின்றருளினாய்;
ஆல்

ஆச்சரியம்!

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “பாவருந்தமிழாற் பேர்பெறு பனுவற் பாவலர் பாதிநாலிரவின், மூவருநெருக்கி மொழிவிளக்கேற்றி முகுந்தனைத் தொழுதநன்னாடு” என்று புகழ்ந்து கூறும்படி முதலாழ்வார்கள் [பொய்கையார், பூதத்தார், பேயார்] மூவரும் ஒருவரை யொருவர் சந்தித்து அந்தாதிபாடினதலம் திருக்கோவலூர் என்பது ப்ரஸித்தம். இவ்வரலாற்றுக்கு மூலமாயிருக்கும் இப்பாட்டு.

பிரானே! நானும் மற்றையாழ்வார்க ளிருவரும் ஓடித் திரியும் யோகிகளாய் க்ராமை கராத்ரமாய் ஸஞ்சரித்துப் போருகையில் உனது ஸங்கல்பத்தாலே திருக்கோவலூரில் நெருக்கமானதொரு இடைகழியிலே வந்துசேர, அங்கே நீ திருமகளோடு வந்து புகுந்து நெருங்கினாயே இஃது என்ன திருவருள்! என்று ஈடுபடுகின்றார்.

திருக்கோவலிடைகழியில் நெருக்குண்ட முதலாழ்வார்கள் மூவரும் ஸ்ரீமந்நாராயணனுடைய நீலமேக ச்யாமலமான திருமேனியையும் காளமேகத்தில் மின்னற்கொடி பரந்தாற்போன்ற திருமகளாரையும் நெஞ்சென்னு முட்கண்ணாலே கண்டு அநுபவித்தபடியை இவ்வாழ்வார் இங்கு வெளியிட்டருளினராயிற்று. [இவ்வரலாற்றின் விரிவு இவரது சரித்திரத்திற் காணத்தக்கது]

குன்றெடுத்துப் பாயும்பனிமறுத்த பண்பாளா! = கல்மழை காக்கக் கோவர்த்தனமெடுத்து நின்றவக்காலத்து இடையரிடைச்சிகளோடும் பசுக்கூட்டங்களோடும் நெருக்குண்டு நின்றாற்போலே யன்றோ எம்மோடு நெருக்குண்டிருந்தாயென்ற குறிப்பு. ‘பனி மறைத்த’ என்றும் சிலர் பாடமோதுவர்.

வடமொழியில் ‘தேஹளீ’ என்னப்பட்டும், உலகவழக்கில் ‘ரேழி’ என்னப்பட்டும் வருகிறஸ்தானமே இடைகழிக்கு வெளியிலே ஸம்ஸாரிகளும், உள்ளே உபாஸகனான ரிஷியுமா யிருக்கையாலே அநந்யப்ரயோஜநரான இவ்வாழ்வார்கள் மூவரும் நின்றவிடமே எம்பெருமான் தான்  உவந்து சாருமிடமாகப் பற்றினானென்ப.

கீழ்ப்பாட்டில் ஆழ்வார் தமது திருவுள்ளத்தைக் குறித்து ‘நீ அவனை சாக்ஷாத்கரித்து அநுபவிக்கப் பெற்றாயில்லை’ என்று சொன்னது பொறுக்கமாட்டாமல் இவரிருந்த விடத்திலே எம்பெருமான் பிராட்டியுந் தானுமாகவந்து நெருக்க, அதைக் கண்டு அனுபவிக்கிறார் என்று இப்பாட்டுக்கு அவதாரிகை கூறுதல் பரமரஸம், “ இவர் தம்முடைய திருவுள்ளத்தைக் குறித்து ‘ஸாக்ஷாத் கரித்திலையிறே’ என்னைத் தரியானிறே அவன்” என்ற பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியான ஸ்ரீஸூக்தியின் போக்யதையும் அநுபவிக்கத்தக்கது. முன்னேநடந்த திருக்கோவலிடைகழிநெருக்கத்தை எம்பெருமான் மீண்டும் அநுபவிப்பித் தருளினன் போலும்.

English Translation

In the flower groves-surrounded beautiful kovai nagar, -O Benevolent Lord who lifted a mount and stopped the rains!, -You and the lotus dame Lakshmi have come to grace us in the vestibule of a house, neither outside nor inside what a wonder!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top