(2107)
எழுவார் விடைகொள்வார் ஈன்துழா யானை,
வழுவா வகைநினைந்து வைகல் – தொழுவார்,
வினைச்சுடரை நந்துவிக்கும் வேங்கடமே, வானோர்
மனச்சுடரைத் தூண்டும் மலை.
பதவுரை
|
எழுவார் |
– |
(தாங்கள் விரும்பின ஐச்வரியம் கிடைத்தவுடனே எம்பெருமானைக்) கைவிட்டுப் போகின்ற ஐச்வர்யார்த்திகளும் |
|
விடை கொள்வார் |
– |
(தாங்கள் விரும்பின கைவல்யமோக்ஷம் கைப்பட்டபின் எம்பெருமானைத் திரும்பிப்பாராமல்) விடைப்பெற்றுக் கொண்டு போமவர்களான கைவல்யார்த்திகளும் |
|
ஈன் துழாயானை வழுவா வகை நினைந்து வைகல் தொழுவார் |
– |
இனிய திருத்துழாயை அணிந்தவனான திருமாலை ஒருநாளும் விட்டு நீங்காதபடி சிந்தித்து எப்போதும் அநுபவிப்பவர்களான முமுக்ஷூக்களுமாகிய இம் மூவகை அதிகாரிகளுடைய |
|
வினை சுடரை |
– |
(அவரவர் வேண்டுகின்ற பலன்களுக்குத் தடையான ) தீவினையாகிய நெருப்பை |
|
நந்துவிக்கும் |
– |
அணைக்கின்ற |
|
வேங்கடமே |
– |
திருவேங்கடமலையே |
|
வானோர் |
– |
நித்ய ஸூரிகளுடைய |
|
மனம் சுடரை |
– |
ஹ்ருதயமாகிற விளக்கை |
|
தூண்டும் |
– |
தூண்டி ஜ்வலிப்பிக்கின்ற |
|
மலை |
– |
மலையாகும். |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- கீழ்ப் பல பாசுரங்களில் விபவாவதார சேஷ்டிதங்களைப் பேசி அநுபவித்த ஆழ்வார், என்றைக்கோ கழிந்த அவ்வதாரங்களின் திருக்குணங்கள் இன்றைக்கும் நன்கு விளங்குமாறு * பின்னானார் வணங்குஞ் சோதியாக ஸேவை ஸாதித்தருள்கின்ற அர்ச்சாவதாரங்களையும் அநுபவிக்க ஆசைகொண்டு, 1. தென்னனுயர் பொருப்பும் தெய்வவடமலையும் என்னுமிவையே முலையா வடிவமைந்த” என்கிறபடியே பூமிப்பிராட்டிக்குத் திருமுலைத்தடங்களாகச் சொல்லப்பட்டுள்ள இரண்டு திருமலைகளுள் திருவேங்கடமலையிலே திருவுள்ளஞ் சென்று அவ்விடத்தைப்பேசி அநுபவிக்கிறாரிப்பாட்டில். எம்பெருமானிலுங்காட்டில் எம்பெருமானோடு ஸம்பந்தம்பெற்ற பொருள்களே பரம உத்தேச்யமென்று கொள்ளுகிறவர்களாகையாலே திருவேங்கடமுடையான் வரையில் போகாமல் அவனுடைய ஸம்பந்தம் பெற்றதான திருமலையோடே நின்று அநுபவிக்கிறார்.
திருமலை எப்படிப்பட்டதென்றால் ப்ரயோஜநாந்தரங்களை விரும்புமவர்களோடு அநந்யப்ரயோஜநரோடு வாசியற எல்லாருடைய வினைகளையும் போக்கிப் பலனைப் பெறுவிக்குமது; இதனையே மூன்றடிகளில் அருளிச்செய்கிறார்.
எழுவார் என்றால் எழுந்துபோகிறவர்களையும் சொல்லும்; மேன்மேலும் ஆசைப்பெருக்கமுடையவர்களையும் சொல்லும். இரண்டு படியாலும், ஐச்வர்யார்த்திகளைச் சொல்லுகிறது இங்கு, ‘எங்களுக்கு ஐச்வர்யத்தைத் தரவேணும்’ என்று பிரார்த்தித்து அது கைப்பட்டதும் எம்பெருமானைவிட்டு எழுந்துபோகிறவர்கள் என்றாவது, ஐச்வரியம் வேணுமென்று மேலே மேலே பிரார்த்திக்குமவர்கள் என்றாவது கொள்க. இவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது- ஐச்வர்ய ப்ராப்திக்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து ஐச்வர்ய விருப்பத்தை நிறைவேற்றுகை.
விடை கொள்வார் என்றால் விட்டு நீங்குகிறவர்கள் என்கை; ஸந்தர்ப்பம் நோக்கி இங்கே கைவல்யார்த்திகளைச் சொல்லுகிறது. அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – ஆத்மாநுபவத்திற்கு விரோதியான பாவங்களைத் தொலைத்து கைவல்யா நுபவத்தை நிறைவேற்றுகை.
ஈன்துழாயானை வழுவரவகை நினைந்து வைகல் தொழுகிறவர்கள் – பரமைகாந்திகளான பகவத்பக்தர்கள்; அவர்களுடைய வினைச்சுடரை நந்துவிக்கையாவது – மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கும்படியான தீவினைகளைத் தொலைத்து முத்தியளிக்கை. ஆக, வேண்டுவோர் வேண்டின படியே அநிஷ்ட நிவ்ருத்தியையும் இஷ்டப்ராப்தியையும் செய்விக்கவல்லது திருவேங்கடம் என்றதாயிற்று.
[வினைச்சுடரை நந்துவிக்கும்]- பாவங்களை நெருப்பாக ரூபித்துக் கூறினமைக்கு இணங்க “நந்துவிக்கும்” எனப்பட்டது; நந்துவித்தல்- (நெருப்பை)அணைத்தல்.
[வானோர்மனச் சுடரைத் தூண்டும்மலை.] – ஒரு நெருப்பை அணைக்கும்; ஒரு நெருப்பை அபிவிருத்தி செய்யும் என்று சமத்காரமாக அருளிசெய்கிறார். வானோர் மனச்சுரடைத் தூண்டுகையாவது- பரமபதத்திலே பரத்வகுணத்தை அநுபவித்துக்கொண்டிருக்கிற நித்யஸூரிகளை , இங்குவந்து ஸெளலப்ய ஸெளசீல்யாதி குணங்களை அநுபவிக்குமாறு உத்ஸாஹமூட்டுதலாம். திருவேங்கடமலையின் தன்மை இப்படிப்பட்டதென்று அநுஸந்தித்தாராயிற்று
English Translation
Offering worship in Tiruvenkatam, those who constantly think of the Tulasi-garland Lord will be rid of their load of karmas. Even the celestials’ hearts are roused by the hill.
