(208)

(208)

செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்தஅக் காரம் நறுநெய் பாலால்

பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள் ளைபரி சறிவன்

இன்ன முகப்பன்நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்

உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.

பதவுரை

அசோதை நங்காய்!

செந்நெல் அரிசி

செந்நெல்லரிசியும்
சிறு பருப்பு

சிறு பயற்றம்பருப்பும்
செய்த

(சமையற் குற்றமொன்றும் நெராதபடி காய்ச்சித் திரட்டி நன்றாகச்) செய்த
அக்காரம்

கருப்புக்கட்டியும்
நறு நெய்

மணம் மிக்க நெய்யும்
பாலால்

பாலும் ஆகிற இவற்றாலே
பன்னிரண்டு திரு ஓணம்

பன்னிரண்டு திருவோணத் திருநாளளவும்

(நோன்புக்கு உறுப்பாகப் பாயஸ பக்ஷணாதிகளை)

அட்டேன்

சமைத்தேன்;
பண்டும்

முன்பும்
இ பிள்ளை

இப்பிள்ளையினுடைய
பரிசு

ஸ்வபாவத்தை
அறிவன்

(நான்) அறிவேன்;

(இப்போதும் அப்படியே)

எல்லாம்

(திருவோண விரதத்திற்காகச் சமைத்தவற்றை) யெல்லாம்
விழுங்கிட்டு

(ஒன்றும் மிகாதபடி) விழுங்கிவிட்டு

(அவ்வளவிலும் திருப்தி பெறாமல்)

நான் இன்னம் உகப்பன் என்று சொல்லி

‘நான் இன்னமும் உண்ண வேண்டியிரா நின்றேன்’ என்று சொல்லிக்கொண்டு
போந்த

(அவ்விடத்தை விட்டு) கடக்கவந்து
நின்றான்

(அந்யபரரைப்போல) நில்லாநின்றான்;

(இனி இவ்வாறு தீமை செய்யாதபடி)

உன் மகன் தன்னை

உன் பிள்ளையான இக்கண்ணனை
கூவிக்கொள்ளாய்

(உன்னருகில்) அழைத்துக்கொள்வாயாக;

(பிள்ளைகளைத் தீம்புசெய்ய வொட்டாதபடி பேணி வளர்க்கவேண்டியிருக்க, அப்படி வளர்க்காமல்)

இவையும்

இப்படி வளர்ப்பதும்
சிலவே

சில பிள்ளை வளர்க்கையோ?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- கீழ்ப்பாட்டில் கண்ணபிரான் தாயால் வருந்தி யழைக்கப்பட்டும் அவள் பாற் செல்லாமல் வேறொருத்தியின் வீட்டிலே புகுந்து,அவள் நோன்புக்கு உடலாகச் சமைத்து வைத்துள்ளவற்றை யடங்கலும் வாரிவிழுங்கிவிட்டு வேற்றுப்பொருளில் தேடுதலுற்றவன்போல அபிநயித்து வெளியே வந்து நிற்க, இத்தீம்பைக் கண்ட அவள் ஆற்றமாட்டாமல் யசோதை அருகில் வந்து முறைப்படுகின்றனர்.  அக்காரம் – திரட்டுப்பால் என்னலாம்.  (பன்னிரண்டு இத்யாதி).  ஒவ்வொரு திருவோணத்திருநாளிலும் வ்ரதாங்கமாகச் சமைக்க வேண்டியவற்றை அவ்வப்போதுகளில் சமைத்திடாமல் சக்திக்கேற்ப ஸாம்வத்ஸரிக வ்ரதங்கொண்டு அவ்விரதநாளில் பன்னிரண்டு திருவோணங்களிலுஞ் சமைக்க வேண்டியவற்றைச் சேர்த்துச் சமைத்தேன் என்று கருத்து.  அட்டேன் = அடுதல் – சமைத்தல்.  (பண்டு மித்யாதி.) வ்ரதாங்கமாக நாம் சமைக்கும் பக்ஷணாதிகளைத் தேவபூஜைக்கு முன்னமே இவன் வாரி விழுங்கிவிடுவன் என்பதை நான் பண்டே அறிவேன் என்றவாறு.  ‘இதுவும் ஒன்றே’ என்று ஒருமையாகக் கூறாமல் ‘இவையுஞ்சிலவே’ என்று பன்மையாகக் கூறினது.  நீ பிள்ளை வளர்க்கும் பரிசும் அவன் தீமைசெய்யுந் திறமும் நான்வந்து முறைப்படும் முறைமையமெல்லாம் சர்வ அழகியவாயிருக்கின்றன வென்ற கருத்தைக் காட்டும்.

English Translation

O Yasoda! For full twelve asterisms of the Srevanam fast, I have been cooking offerings of rice, lentils, jiggery, milk and Ghee. I knew it all along: he has been eating it all. He walked away saying he would be happy for more. Call your son here, is this any way to be?

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top