(1722)

(1722)

தொழுநீர் வடிவில் குறளுருவாய் வந்து தோன்றி மாவலிபால்,

முழுநீர் வையம் முன்கொண்டமூவா வுருவி னம்மானை

உழுநீர் வயலுள் பொ ன்கிளைப்ப ஒருபால் முல்லை முகையோடும்

கழுநீர் மலரும் கண்ணபுரத் தடியேன் கண்டு கொண்டேனே.

பதவுரை

தொழும் நீர்

கண்டவாறே வணங்கவேண்டும் படியான நீர்மையையுடைய
வடிவின்

வடிவு கொண்ட
குறள் உரு ஆய்

வரமந ரூபியாய்
வந்து தோன்றி

அவதரித்து
மாவலிபால்

மஹாபலியினிடத்தில்
முன்

முன்பொருகால்
முழுநீர் வையம்

கடல் சூழ்ந்த வுலகத்தை
கொண்ட

இரந்து பெற்ற
மூவா உருவின்

விகாரமற்ற ரூபத்தையுடையனான
அம்மானை

ஸர்வேச்வரனை,
உழு நீர்

(எப்போதும்) உழுவதையே இயல்வாகவுடைய
வயலுள்

வயல்களிலே
பொன் கிளப்ப

பொன் விளையப் பெற்றதும்
ஒருபால்

வேறு சில இடங்களில்
முல்லை

முல்லைமலர்களும்
முகையோடும்

கருமுகைமலர்களும்
கழுநீர்

செங்கழுநீர்ப்பூக்களும்
மலரும்

மலரப் பெற்றதுமான
கண்ணபுரத்து

திருக்கண்ணபுரத்திலே

அடியேன் கண்டு கொண்டேன்-.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- மூவாவுருவினம்மானை = இரவும் பகலும் லோகரக்ஷணமே செய்யாநிற்கச் செய்தேயும் ஒன்றுஞ் செய்யாதானைப் போன்று இன்னமும் இளகிவரும் உருவத்தையுடையவன்; ஜகத் ரக்ஷண குதூஹலத்தில் கிழத்தன மடையாதே கீழ்நோக்கிப் பிராயம் புகுமவன் என்க.

திருக்கண்ணபுரத்தின் வயல்வளமும் தோட்டவளமும் பின்னடிகளிற் சொல்லப்படுகின்றன.  வயலுள் பொன் விளைவதாகச் சொன்னது உபசாரம்; “இராமழை பெய்த வீர வீரத்துள், பனைநுகங்கொண்டு யானையேர் பூட்டி, வெள்ளி விதைத்துப் பொன்னே விளையினும், வேண்டேன் பிறந்தகத் தீண்டிய வாழ்வே” என்றதிற்போல.  பொன்போன்ற நெற்களின் விளைவைச் சொன்னவாறு.

English Translation

Donning the mantle of a venerable Vedic student, the eternal Lord appeared as a manikin and went to Mabali, then took the Earth and oceans from him.  I know he is in kannapuram, surrounded by fertile fields and groves where Mullai, Karumugil and Senkolunir flowers blossom profusely.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top