(14)
ஓடு வார்விழு வார்உகந் தாலிப்பார்
நாடு வார்நம்பி ரான்எங்குற் றானென்பார்
பாடு வார்களும் பல்பறை கொட்டநின்று
ஆடு வார்களும் ஆயிற்றுஆய்ப் பாடியே.
பதவுரை
| ஆய்ப்பாடி |
– |
திருவாய்ப்பாடியானது, |
| ஓடுவார் |
– |
(ஸ்ம்ப்ரமித்து) ஓடுவாரும் |
| விழுவார் |
– |
(சேற்றிலே வழுக்கி) விழுவாரும் |
| உகந்து |
– |
உகப்புக்குப் போக்குவீடாக |
| ஆலிப்பார் |
– |
கோஷிப்பாரும் |
| நாடுவார் |
– |
(பிள்ளையைத்) தேடுவாரும் |
| நம் பிரான் |
– |
நமக்கு உபகாரகனான கண்ணன் |
| எங்கு தான் என்பார் |
– |
எங்கேதான் (இராநின்றான்) என்பாரும் |
| பாடுவார்களும் |
– |
பாடுவார்களும் |
| பல் பறை |
– |
பலவகை வாத்யங்கள் |
| கொட்ட |
– |
முழங்க |
| நின்று |
– |
அதற்குப் பொருந்த நின்று |
| ஆடுவார்களும் |
– |
கூத்தாடுவாருமாக |
| ஆயிற்று |
– |
ஆய்விட்டது. |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – கோகுலத்திலுள்ளாரெல்லாரும் தங்கட்குத் தலைவரான நந்தகோபர்க்குப் பிள்ளை பிறந்ததாகக் கேள்விப்பட்டு அளவற்ற ஆநந்தமடைந்து தாம் செய்வது இன்னதென்று தெரியாமல், சிலர் ஓடினார்கள்; சிலர் சேற்றிலே வழுக்கி விழுந்தார்கள்; சிலர் உரக்க கோஷம் செய்தார்கள்; சிலர் ‘நம் கண்மணி எங்கே?’ என்று குழந்தையைத் தேடினார்கள்; சிலர் பாடினார்கள்; சிலர் பறையடிக்க சிலர் அதுக்குத் தகுதியாகக் கூத்தாடினார்கள்; ஆகவிப்படி பஞ்சலக்ஷம் குடியிலுள்ளாரெல்லாரும் சொல்ல முடியாத கோலாஹலமாயிருந்தார்கள்.
க்ருஷ்ணஜநநத்தால் திருவாப்பாடியில் விகாரமடையாதார் ஒருவருமில்லையென்பார் ஆய்ப்பாடியே ஓடுவாரும். . . . ஆடுவாருமாக ஆயிற்றென்றார். ‘எங்குற்றான்’ என்ற பாடமும் கொள்ளத்தக்கதே.
English Translation
They ran and fell, then rose and greeted joyously, asking, “where is our Lord?” Singers, dancers and drummers everywhere thronged the cowherds’ hamlet.
