(1345)

(1345)

முடியுடை யமரர்க் கிடர்செயு மசுரர் தம்பெரு மானை,அன் றரியாய்

மடியிடை வைத்து மார்வைமுன் கீண்ட மாயனார் மன்னிய கோயில்,

படியிடை மாடத் தடியிடைத் தூணில் பதித்தபன் மணிகளி னொளியால்,

விடிபக லிரவென் றறிவரி தாய திருவெள்ளி யங்குடி யதுவே.

 

பதவுரை

முடி உடை அமரர்க்கு

கிரீடம் பூண்டிருக்கிற தேவர்களுக்கு

இடர் செய்யும்

துன்பங்களைச் செய்து கொண்டிருந்த

அசுரர்தம் பெருமானை

இரணியாசுரனை

முன் அன்று

முற்காலத்தில்

அரி ஆய் மடியிடை வைத்து மார்வைகீண்ட

நரசிங்கமாகி மடிமேல் வைத்துக்கொண்டு மார்பைக் கிழித்து முடித்தவனான

மாயனார் மன்னிய கோயில்–.

புடியிடை மாடத்து தூண் அடியிடையில் பதித்த

பூமியிலே உண்டான மாடங்களில் (நடப்பட்டிருக்கிற) தூணடியிலே அழுத்தியுள்ள

பல் மணிகளின் ஒளியால்

பலவகைப்பட்ட ரத்னங்களின் ஒளியாலே

விடி பகல் இரவு என்று அறிவு அரிது ஆய

விடியற்காலமென்றும் பகற்காலமென்றும் இராக்காலமென்றும் அறியக் கூடாமலிருக்கிற

திரு வெள்ளியங்குடி அதுவே–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

இத்தலத்தில் திருமாளிகைகள் எல்லாம் நவமணிகள் அழுத்தப் பெற்றிருத்தலால் அவற்றின் ஒளி இடைவிடாது விளங்காநின்றமையால் ‘இப்போது பகல், இப்போது இரவு’ என்று அறியக் கூடவில்லையென்பன பின்னடிகள்.  இங்ஙனே வருணித்தல் பொய்யுரையாகா தோவென்று சிலர் சங்கிப்பர்; இத்தலம் இப்படிப்பட்ட அதிசயம் வாய்ந்ததாக அமைய வேணும் என்னுமாவல் ஆழ்வார்க்கு உள்ளதாதலால் அதுதோன்ற இங்ஙனே அருளிச் செய்யப்பட்டதென்க.  ஆதராதிசயத்தினால் சிறப்பித்துக் கூறுதல் தகும்.

 

English Translation

The wonder-Lord who came as a man-lion to destroy the king of Asuras who gave misery to the gods, placed him on his lap and fore his chest, resides in the temple, -surrounded by mansions and pillars set with gems that make it difficult to say whether it is night or day, -of Tiruvelliyangudi, that is it!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top