(1465)

(1465)

தீவாய் வல்வினை யாருட னின்று சிறந்தவர்போல்,

மேவா வெந்நர கத்திட உற்று விரைந்துவந்தார்,

மூவா வானவர் தம்முதல் வா மதி கோள்விடுத்த

தேவா, நின்னடைந் தேன்திரு விண்ணகர் மேயவனே.

 

பதவுரை

தீ வாய்

நெருப்பையுமிழ்கின்ற வாயையுடைய

வல்

கொடிய

வினையார்

பாவங்கள்

சிறந்தவர் போல்

பந்துக்கள் போன்று

உடன் நின்று

என்னோடு பிரியாமல் கலந்துநின்று

மேவா வெம் நரகத்து இட உற்று

பொருந்தாத கொடிய நரகத்திலே (என்னைத்) தள்ள முயன்று

விரைந்து வந்தார்

வெகுவேகமுடையனவா யிருக்கின்றன

மூவா

கிழத்தனம் முதலிய விகாரங்களற்ற

வானவர்தம் முதல்வா

தேவாதிதேவனே!

மதிகோள் விடுத்த தேவா

சந்திரனுடைய க்ஷயரோகத்தைப் போக்கினதேவனே!

திரு விண்ணகர் மேயவனே!- ;

நின் அடைந்தேன்-,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப்பாசுரத்தில் இரண்டாமடியில் நெடுநாளாகவே ஒரு பாடப்பிழை நேர்ந்துள்ளது; “மேவா வெந்நரகத்து இடருற்று என்றே பலரும் ஓதுவர்; இப்பாடம் பொருளற்றது; “இடவுற்று என்பது “இடருற்று“ எனப் பிழைபட்டது.  (அடியேனை) மேவா வெம் நரகத்துஇட (நரகத்திலே தள்ள) உற்று விரைந்து வந்தார் என்கை.  கீழ்ப்பாட்டில் “ஆறாவெந்நரகத்தடியேனை இடக்கருதி“ என்றாப்போலே.

கீழ்ப்பாட்டில் ஐவர் (பஞ்சேந்த்ரியங்கள்) எழுவாய்; இப்பாட்டில் வல்வினையார் (பாபராசிகள்) எழுவாய்.  வல் என்ற அடைமொழி – அப்பாவங்கள் அவசியம் அநுபவித்தேதீரவேண்டுமவை என்பதைக் காட்டும்.  தீவாய் என்னும் அடைமொழி அவற்றின் கொடுமையைக் காட்டும்.  பலவகைத் துன்பங்கள் யுண்டுபண்ணுகின்றன வென்றபடி.  சிறந்தவர் என்றது – உடன்பிறந்தோர் மக்கள் மனைவியர் முதலான உறவினரைச் சொன்னபடி.  அவர்கள் ஒருகாலும் விட்டு நீங்காதவாறுபோல் இக்கொடிய பாவங்களும் எப்போதும் விட்டுப்பிரியாமலிருந்து கொண்டு என்னை நரகத்திலே தள்ளப்பார்க்கின்றனவென்றாராயிற்று

 

English Translation

O Lord residing in Tiruvinnagar!  Pretending to be excellent friends, my wicked karmas only wall to send me to terrible hell.  O, the first-cause Lord of gods, the three-gods-one!  You rid the moon of his misery!  I have come to your feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top