(1433)

(1433)

விலங்கலால் கடல டைத்து விளங்கிழை பொருட்டு, வில்லால்,

இலங்கைமா நகர்க்கி றைவன் இருபது புயம்து ணித்தான்,

நலங்கொள்நான் மறைவல் லார்கள் ஒத்தொலி யேத்தக் கேட்டு

மலங்குபாய் வயல்தி ருப்பேர் மருவிநான் வாழ்ந்த வாறே,


பதவுரை

விளங்கு இழை பொருட்டு

விளங்குகின்ற ஆபரணங்களை அணியத்தகுந்தவளான பிராட்டிக்காக

விலங்கலால்

மலைகளினால்

கடல்

தெற்குஸமுத்ரத்தை

அடைத்து

அணை செய்து

(இலங்காபுரியிற் புகுந்து)

இலங்கை மா நகர்க்கு இறைவன்

(அந்த) அலங்கையென்னும் பெரியபட்டணத்திற்குத் தலைவனான இராவணனுடைய

இருபது புயம்

இருபதுதோள்களை

வில்லால்

(தனது) சார்ங்கத்தினால்

துணித்தான்

அறுத்தொழிந்த பெருமான்

(எழுந்தருளியிருக்கப்பெற்ற),-

நலம் கொள்

நல்லொழுக்கமுடையராய்

நால் மறை வல்லார்கள்

நான்கு வேதங்களிலும் வல்லவர்களான அந்தணர்கள்

ஓத்து ஒலி ஏத்த

வேதகோஷங்களைச் செய்து கொண்டிருக்க

கேட்டு

அவ்வொலியைக் கேட்டு

மலங்கு

மீன்களானவை

பாய்

அஞ்சித் துள்ளயோடப் பெற்ற

வயல்

கழனிகளையுடைத்தான

திரு பேர்

திருப்பேர்நகரை

மருவி நான் வாழ்ந்த ஆறு ஏ

அடைந்து நான் வாழ்ச்சி பெற்றவிதம் என்னே!.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

(நலங்கொள் நான்மறை இத்யாதி.) வைதிகர்கள் உரக்க வேதகோஷஞ் செய்வதைக் கேட்ட மீன்கள் தங்களை வெருட்டுஞ்சொற்களென்று ப்ரமித்துத் துள்ளியோடுகின்றனவாம் வயல்களில்.  குளக்கரையில் வைதிகப்ராஹ்மணர்கள் ப்ரஹ்மயஜ்ஞ ப்ரச்நம உச்சரிக்கும்படியான வைதிகலக்ஷமி விளங்கும் திவ்யதேசமென்று குறிப்பிட்டவாறு.

மலங்கு – மீன்களில் ஓர்வகைச்சாதி

 

English Translation

Making a bridge over the ocean with rocks, the Lord entered Lanka city to redeem the jewelled Sita, and severed the ten heads, and twenty arms of the Rakshasa. He resides where Vedic seers chant the Vedas adeptly. hearing which fish in the watered groves dance enchanted.  How easily have I attained him through chanting his names!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top