(1320)

(1320)

அண்டர் கோனென் னானையென்றும் ஆயர் மாதர் கொங்கைபுல்கு

செண்ட னென்றும், நான்மறைகள் தேடி யோடும் செல்வனென்றும்,

வண்டு லவுபொழில் கொள்நாங்கை மன்னு மாய னென்றென்றோதி,

பண்டு போலன் றென்மடந்தை பார்த்தன் பள்ளி பாடுவாளே.

 

பதவுரை

என் மடந்தை பண்டு போல் அன்று

என் பெண்ணானவள் (இப்போது) முன்போலல்ல; (என்ன செய்கின்றாளென்னில்;)

அண்டர் கோன் (என்றும்)

பிரமாண்டத்திலுள்ளா ரெல்லார்க்கும் ஸ்வாமியென்று சொல்லிக்கொண்டும்

என் ஆனை என்றும்

எனக்கு ஆனை போன்றவன் என்று சொல்லிக்கொண்டும்

ஆயர் மாதர் கொங்கை புல்கு செண்டன் எனறும்

இடைப்பெண்களுடைய முலைகளோடே அணையும் இயல்வுடையவனென்று சொல்லிக்கொண்டும்

நால் மறைகள் தேடி ஓடும் செல்வன் என்றும்

நான்கு வேதங்களும் தேடிக்கொண்டுபின் தொடரப் பெற்ற ஸ்ரீமான் என்று சொல்லிக்கொண்டும்

வண்டு உலவு பொழில் கொள் நாங்கை மன்னு

வண்டுகள் உலவுகின்ற சோலைகளையுடைய திருநாங்கூரில் நித்யவாஸம் பண்ணுகிற

மாயன் என்று என்று ஓதி

ஆச்சர்யபூதன் என்று பலகால் சொல்லிக் கொண்டும்

பார்த்தன் பள்ளி பாடுவாள்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- ‘அன்டர்’ என்று தேவர்களுக்கும் இடையர்க்கும் பெயர்.  அண்டத்துக்குட்பட்டா ரெல்லாரையுஞ் சொல்லும்.  இரட்டுற மொழிதலால் – இடையர்கட்குத்தலைவன், தேவர் கட்குத்தலைவன் என்ற இரண்டு பொருளையுங்கொண்டு, ஸௌலப்யத்திலும் பரத்வத்திலும் எல்லை காணமுடியாதவன் என்பதாகக் கொள்ளலாம்.

ஆயர் மாதர் கொங்கைபுல்கு செண்டன் – அவனிடத்தில் நான் இவ்வளவு காதல் கொண்டிருக்கச் செய்தேயும் இடைச்சிகளோடு புணருவதிலேயே அவனுக்கு நோக்கமென்று பிரணய ரோஷந்தோற்றச் சொல்லுகின்றாளென்க.  ‘செண்டு’ என்று ஸ்வபரவத்துக்கும்பெயர்.

நான்மறைகள் தேடியோடுஞ் செல்வன் – வேதங்களெல்லாம் அவனுடைய பெருமைகளை எல்லை கண்டு சொல்லி முடித்துவிடவேணுமென்று முயன்றும் “யதோவாசோ நிவர்த்தந்தே, அப்ராப்யமநஸா ஸஹ” என்கிறபடியே அவனைப் பின்தொடர்ந்தோடி இளைத்து மீள்வனவாதலால் அவற்றுக்குப் பிடிகொடாமல் அபரிச்சிந்ந் வைபவனாயிருப்பவன்.

பண்டுபோலன்று – நேற்றுவரையில் மற்ற உலகத்துப் பெண்களைப்போலே பந்தம் அம்மானையும் பாவையும் பைங்கிளியுங்கொண்டு போதுபோக்கிக்கிடந்த இவள் இன்று இப்படி விகாரப்பட்டுப் பார்த்தன் பள்ளி பாடத் தொடங்கி விட்டாள் என்கிறாள்.  அன்றியே, இதற்கு முன்பும் இவள் பார்த்தன்பள்ளி பாடினவளே யாகிலும் அப்போதெல்லாம் இப்படி அநுராகந்தோற்றப் பாடினாளல்லள்; இப்போதோ விலக்ஷணமாகப் பாடுகின்றாள் என்கிறாளாகவுமாம்.

 

English Translation

“Lord of Earth, adorable, the elephant-bull among the dames!” “Lord who runs amuck to hear the chanting of the Vedas four!” “Bees in groves abound in Nangai, -ancient place of worship, his!” She’s now no more like the old, my daughter sings of Parttan-Palli, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top