(1390)

(1390)

மானாய மென்னோக்கி வாநெடுங் கண்ணீர்மல்கும் வளையும் சோரும்,

தேனாய நறுந்துழா யலங்கலின் திறம்பேசி யுறங்காள் காண்மின்,

கானாயன் கடிமனையில் தயிருண்டு  நெய்பருக நந்தன் பெற்ற

ஆனாயன், என் மகளைச் செய்தனகள் அம்மனை மீரறிகி லேனே. .

 

பதவுரை

மான் ஆய மென் நோக்கி

மானின் நோக்குப் போன்ற அழகிய நோக்கை உடையளான என் மகள்,

வாள் நெடு கண் நீர் மல்கும்

ஒளி பொருந்திய நீண்ட கண்கள் நீர் நிரம்பப் பெற்றிருக்கின்றாள்;

வளையும்

(இவளது) வளைகளும்

சோரும்

(கையில் நின்று) நழுவாநின்றன;

தேனாய

தேனைக்கொண்ட

நறு துழாய்

மணம்மிக்க திருத்துழாயினாலாகிய

அலங்கலின்

மாலையினுடைய

திறம்

பரிசுகளை

பேசி

சொல்லிக்கொண்டு

உறங்காள்

உறக்கமற்றிருக்கின்றாள்;

காண்மின்

(இந்நிலைமையைக்) கண் கொண்டுபாருங்கள்;

கான் ஆயன்

காட்டிலே திரியுமவனும்

கடி மனையீல்

காவலுள்ள வீடுகளிலும்

தயிர் உண்டு

தயிரை உட்கொண்டு

நெய் பருக

நெய்யைக் குடிக்கும்படியாக

நந்தன் பெற்ற

நந்தகோபர் பெற்ற

ஆன் ஆயன்

கோபாலக்ருஷ்ணனுமான பெருமான்

என் மகளை செய்தனகள்

என் பெண்பிள்ளையைப் பண்ணின படிகளை

அம்மனைமீர் அறிகிலேன்–.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இப் பெண்பிள்ளையின் கண்ணழகை நான் என்சொல்வேன்!; இக்கண்ணழகிலே யீடுபட்டு அப்பெருமான் ஊணுமுறக்கமும் இல்லாமல் வருந்த வேண்டியிருக்க, அவன் திறத்திலீடுபட்டு இவள் வருந்துகிறாளே, திருமலையருவிபோலே கண்களில் நீர் தாரை தாரையாகப் பெருகுகின்றமை காண்மின்; கைவளைகள் கழன்றொழிவது காண்மின்; ‘பெண்ணே! படுக்கையிற் கடந்து உறங்கு; உறங்கினாயாகில் கண்ணீர்ப் பெருக்கு மாறும்; என்று நான் சொன்னாலும், என்பேச்சைச் சிறிதும் செவியேற்காது “எம்பெருமான் அணிந்துள்ள திருத்துழாயின் தேன்வெள்ளத்தை என்சொல்வேன்! அதன் செவ்வியை என்சொல்வேன்! அதன் தொடையழகை என்சொல்வேன்! அதன் குளிர்த்தியை என்சொல்வேன்! அதன் பரிமளத்தை என்சொல்வேன்!” என்றிப்படி அவனது திருத்துழாயின் திறங்களை வாய்வெருவிக் கொண்டிருக்கின்றாளே யன்றிச் சிறிதும் கண்ணுறங்கப் பெறுகின்றிலன்.  இவளை இப்பாடுபடுத்தினவன் கோபாலகிருஷ்ண னென்கிறாள் பின்னடிகளில்.

 

English Translation

See, her fawn-like sharp eyes are in tears, her bangles do not remain.  All night long she talks of cool nectared Basil and loses her sleep.  Forester, stealing the curds and Ghee from the closed houses of maids, Nanda’s son, how can I accept what he did to my daughter frail!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top