(1408)

(1408)

பண்டைநால் மறையும் வேள்வியும் கேள்விப் பதங்களும் பதங்களின் பொருளும்,

பிண்டமாய் விரித்த பிறங்கொளி யனலும் பெருகிய புனலொடு நிலனும்,

கொண்டல்மா ருதமும் குரைகட லேழும் ஏழுமா மலைகளும் விசும்பும்,

அண்டமும் தானாய் நின்றவெம் பெருமான் அரங்கமா நகரமர்ந் தானே.

 

பதவுரை

பண்டை நால் மறையும்

அநாதியாகவுள்ள நான்கு வேதங்களும்

வேள்வியும்

யாகங்களும்

கேள்வி பதங்களும்

கேட்டறியவேண்டிய வியாகரணமும்

பதங்களின் பொருளும்

அந்தந்த பதங்களினால் அறியப்படுகிற ஜீவஸமஷ்டியும்,

பிண்டம் ஆய் விரிந்த

(காரியப் பொருள்களுக்கெல்லாம் காரணமாய்க்கொண்டு) பிண்டரூபமாயிருந்து பிறகு விரிவுபெற்றவைகளான

பிறங்கு ஒளி அனலும்

மிக்க காந்தியையுடைய அக்நியென்ன

பெருகிய புனலொடு

த்ரவரூபமான ஜலமென்ன

நிலனும்

பூமியென்ன

கொண்டல்

மேகமென்ன

மாருதமும்

வாயுவென்ன

குரை கடல் ஏழும்

ஆரவாரிக்கின்ற ஸப்த ஸாசரங்களென்ன

ஏழு மா மலைகளும்

ஏழுகுல பர்வதங்களென்ன

விசும்பும்

ஆகாசமென்ன

(ஆகிய இவற்றோடு கூடின)

அண்டமும்

பிரமாண்டமும்

தான் ஆய் நின்ற எம்பெருமான்

‘தான்’ என்ற சொல்லுக்குள்ளே அடங்கும்படி தனக்கு ப்ரகாரமாயிருக்கப்பெற்ற எம்பெருமான்

அரங்கம் மா நகர் அமர்ந்தான் –

திருவரங்கம் பெரிய கோயிலில் எழுந்தருளியுள்ளான்,

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பண்டை நான்மறையும் தானாய் நின்ற வெம்பெருமான், வேள்வியும் தானாய் நின்ற வெம்பெருமான், கேள்விப் பதங்களும் தானாய் நின்ற வெம்பெருமான்… என்றிங்ஙனே யோஜிப்பது.  எம்பெருமானே பண்டை நான்மறையாக நிற்கையாவது என்னில்; நான்கு வேதங்களையும் தானே வெளியிட்டவன் என்கையும், நான்கு வேதங்களாலும் பிரதிபாதிக்கப்படுபவன் தானே என்கையுமாம்.

வேள்வியும் தானாய் நிற்கையாவது – அந்த வேதங்களில் சொல்லப்பட்டுள்ள யாகங்கள் எல்லாவற்றாலும் தானே ஆராதிக்கப்படுபவனாயிருக்கை.  வேதங்களில் பலபல தேவதைகள் யஜ்ஞங்களுக்கு விஷயமாகச் சொல்லப்பட்டிருந்தாலும் அந்தந்த தேவதைகளுக்கு அந்தர்யாமியான ஸ்ரீமந்நாராயணனே ஆங்காங்கு விவக்ஷரிதன் என்ற பரமைகாந்தி ஸித்தாந்தம் உணரத்தக்கது.

கேள்விப்பதங்களும் தானாய்நிற்கையாவது – வியாகரண சாஸ்த்ரத்திற்கு ப்ரவர்த்தகன் தானேயாயிருக்கை.  “பதரூபத்தாலும் அக்ஷரரூபத்தாலும் ச்ரவணம் பண்ணி யறியவேண்டும்படி யிருக்கிற வ்யாகரண சாஸ்த்ரமும்…..” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.

பிண்டமாய் விரிந்த உலகில், குடம் பானை மடக்கு முதலிய காரியப்பொருள்களுக்கு மூலகாரணம் மண்ணுண்டையாகும்; அதற்குப் பிண்டமென்று வடமொழிப்பெயர்; ஆகவே பிண்டமென்கிற சொல் காரணவஸ்தைக்கு வாசகமாக நிற்கும்.  முதலில் அவ்யக்தமென்கிற பெயரோடே காரணாவஸ்தமாயிருந்து, பிறகு மஹதாதி ரூபத்தாலே காரியப்பொருளாக விரியுந்தன்மையைச் சொன்னவாறு – “பிண்டமாய் விரிந்த” என்று.  அவை எவையென்னில், “பிறங்கொளியனலும்” என்று தொடங்கிச் சொல்லப்பட்டவை.  இவையெல்லாம் தனக்கு சரீரமாகும்படி தான் சரிரியாயிருக்கின்ற எம்பெருமான் நம்போல்வாருடைய கண்களும் குளிரும்படி விலக்ஷணமான திவ்ய மங்கள விக்ரஹத்தைப் பரிக்ரஹித்துத் திருவரங்கம் பெரியகோயிலிலே சாய்ந்தருளா நின்றான் என்றாராயிற்று.

 

English Translation

The timeless Vedas, the sacrifices, the Prasnas, the vyakaranas, their meanings, -the cause of all these, the sacred fire-altar, the holy waters of rivers, the Earth, the clouds, the wind, the seven oceans, the seven mountain ranges, the sky, the Universe, -the Lord stands as all these, and as the resident of Arangama – Nagar.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top