(1388)
வெருவாதாள் வாய்வெருவி வேங்கடமே வேங்கடமே எங்கின் றாளால்,
மருவாளா லென்குடங்கால் வாணெடுங்கண் துயில்மறந்தாள், வண்டார் கொண்டல்
உருவாளன் வானவர்த முயிராளன் ஒலிதிரைநீர்ப் பௌவங் கொண்ட
திருவாளன் என்மகளைச் செய்தனகள் எங்ஙனம்நான் சிந்திக் கேனே.
பதவுரை
|
(என் பெண் பிள்ளையானவள்) |
||
|
வெருவாதாள் |
– |
அஞ்சாதவளாய்க் கொண்டு |
|
வாய் வெருவி |
– |
வாய்பிதற்றுகின்றவளாய் |
|
வேங்கடமே வேங்கடமே என்கின்றாள்–; |
||
|
என்குடங்கால் மருவாள் |
– |
எனதுமடியில் பொருந்து கின்றிலள்; |
|
வாள் நெடு கண் துயில் மறந்தாள் |
– |
வாள்போன்று நீண்ட கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்; |
|
வண்டு |
– |
வண்டுபோலவும் |
|
ஆர் கொண்டல் |
– |
பூர்ண மேகம்போலவும் |
|
உரு ஆளன் |
– |
திருவுருவமுடையவனும் |
|
வானவர் தம் உயிர் ஆளன் |
– |
நித்யஸூரிகளுக்கு உயிராயிருப்பவனும் |
|
ஒலி திரை நீர் |
– |
கோஷிக்கின்ற அலைநீர் |
|
பௌவம் கொண்ட திரு ஆளன் |
– |
பொருந்திய கடலில் நின்றும் கொள்ளப்பட்ட பிராட்டியை ஆள்பவனமான எம்பெருமான் |
|
என் மகளை செய்தனகள் |
– |
எனது பெண்பிள்ளை திறத்துச்செய்தவகைகளை |
|
நான் எங்ஙனம் சிந்திக்கேன் |
– |
நான் நினைக்கத்தான் முடியுமோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இப்போது அழகிய மணவாளன் விஷயமாக ப்ராவண்யம் செல்லாநிற்க, திருவேங்கடமலையின் ப்ரஸ்தாவத்துக்குக் காரணமில்லையே; “வேங்கடமே வேங்கடமே யென்கின்றாளால”; என்றன்றோ மூலமிருக்கிறது; இது திருவரங்கப் பதிகமேயன்றித் திருவேங்கடப்பதிகமன்றே; அப்படியிருக்க, “வேங்கடமே வேங்கடமே” யென்கைக்கு நிதானமேது? என்று சங்கை பிறக்கக்கூடும்; கேண்மின்:- மேலுலகத்திலுள்ள ஸ்ரீவைகுண்ட திவய்நகரமே இம்மண்ணுலகில் திருவரங்கமாகவும், அவ்விடத்துள்ள விரஜாநதியே திருக்காவேரியாகவும், பரவாஸுதேவனே ஸ்ரீரங்கநாதனாகவும் அவதரித்ததாக மஹாரிஷிகளும் நம் பூருவர்களும் சொல்லுவர்கள்; பரமபதநாதன் திருவரங்கத்திலே வந்து புகுவதற்காக அங்கு நின்றும் பயணமெடுத்துவிட்டு எழுந்தருளுமடைவிலே திருவேங்கடமலையிலே சிறிது இளைப்பாற நின்று, பின்பு திருவரங்கத்திலே வந்து சாய்ந்திருளினதாக நிர்வஹிப்பதொரு புடையுண்டு: திருப்பாணாழ்வார் அருளிச்செய்த அமலனாதிபிரான் திவ்ய ப்ரபந்தத்தில் முதற் பாட்டில் “விண்ணவர்கோன் விரையார் பொழில் வேங்கடவன்” என்றார்; இதனால், விண்ணவர் கோனான தன்மையில் நின்றும் வேங்கடவனான தன்மைக்கு வந்தமை சொல்லிற்று. மேல் மூன்றாம் பாட்டில் “மந்திபாய் வடவேங்கடமலை வானவர்கள் சந்திசெய்ய நின்றான் அரங்கத்தரவினணையான்” என்றார்; இதனால் திருவெங்கடமலையில் நின்றும் திருவரங்கத்திலே வந்து பொருந்தினமை சொல்லிற்று. மேலும், திருவேங்கடமுடையான் நின்ற திருக்கோலமாக ஸேவை ஸாதிக்கின்றமையால் ‘வெளிப் பயணத்துக்காக நிற்கிறாப்போலிருக்கிறது’ என்று தோற்றக் கூடியதாதலாலும், திருவரங்கத்தில் பள்ளகொண்ட திருக்கோலமாக ஸேவை ஸாதிக்கின்றமையால் ‘இனி எங்கும் போக நினைவில்லை’ என்று தோற்றக்கூடியதாதலாலும், பரமபதத்திலிருந்து வருமடைவிலே திருமலையிலேநின்று கோயிலிலேவந்து சாய்ந்தானென்று நிர்வஹிப்பதில் பொருத்தம் நன்கேயுள்ளது. ஆக, திருவரங்கத்துக்கும் மூலகந்தம் திருமலையாதலால் இப்போது திருவரங்கத்திலே ஆழ்வார்க்குண்டான ப்ராவண்யாதிசயம் அதற்கு வேர்ப்பற்றான திருமலையளவும் சென்றதனால் ‘வேங்கடமே வேங்கடமே’ என்றது பிரகிருதத்திற்குப் பொருந்தவற்றே, இதனைப் பெரியவாச்சான் பிள்ளை தமது வியாக்கியானத்தில் சுருங்க வருளிச்செய்த அழகு காண்மின் – “(வெருவாதாளித்யாதி.) பெரிய பெருமானுடைய, இங்குத்தை வரவாறே பிடித்து ஆற்றாமைக் குடலாம்படி காணும் பிறந்த ப்ராவண்யாதிசயம்.” என்பது வியாக்கியான ஸ்ரீஸூக்தி.
வெருவாதாள்வாய்வெருவி = வெருவுதல் – அஞ்சுதல்; சிறிதும் அஞ்சாமல் வேங்கடமே வேங்கடமேயென்று வாய் பிதற்றுகின்றாளாம்; கணவனுடைய ஊரின் பேரை வாய்விட்டுச் சொல்லுவதற்குக் கூச்சங்கொள்ளவேண்டியிருக்க, இவள் கூசாமல் சொல்லுகின்றாளே! இஃது என்ன ஸாஹஸம்!! என்கை. பௌவங்கொண்ட திருவாளன் என்மகளை = தன்னுடைய விலக்ஷணமான வடிவைக்காட்டி முன்பு திருப்பாற்கடலில் நின்றும் ஒரு பெண்பிள்ளையைக் கொள்ளை கொண்டான், இன்று ஸம்ஸாரக் கடலில் நின்றும் என் பெண்பிள்ளையைக் கொள்ளை கொண்டான். எப்போதும் இவனுக்குப் பெண்பிள்ளைகளைக் கொள்வதே பணி போலும்.
(இப்பெண் இப்போது தாய்வசத்தில் தானேயிருக்கிறாள், கொள்ளைகொண்டதாக எங்ஙனே சொல்லலாம்? என்னில், முன்னடிகளிற் கூறிய நிலைமைகளை விளைத்ததற்கு மேற்பட, கொள்ளை கொள்வதென்பது வேறொன்றுண்டோ? ஸம்ஸாரத்துக்கு ஆளாகாதபடி செய்யுமத்தனையே கொள்ளை கொண்டவாறாம்.)
எங்ஙனம் நான் சிந்திக்கேனே? = எம்பெருமானுடைய ஸ்வீகாரத்திற்கு இவள் இலக்காகப்பெற்ற பெருமை ஒருவரால் இன்னவிதமென்று சிந்திக்கக் கூடியதோ? நெடுநாளாக நடந்துவருகின்ற ஸம்ஸாரத்திலே இன்று இப்படிப்பட்ட பகவத் விஷயீகாரம் வாய்த்த தென்றால் இதற்குக் காரணம் அந்தப் பகவானும் இறியான்; இப்பெண்ணுமறியாள்; கரையிலே நிற்கிற நான் எங்ஙனே அறிவேன்? என்கிறாள்போலும் தாய்.
English Translation
“Venkatam, O! Venkatam O!” My daughter brazenly prates all day long. No more she’s on my lop and her long eyes have lost their sleep as well. “Bees-humming hue-of-cloud Lord of celestials, their life and breath” Lord Sri, how can I accept what he did to my daughter frail!
