(1208)
கள்வன்கொல் யானறியேன் கரியானொரு காளைவந்து,
வள்ளிமருங் குலென்றன் மடமானினைப் போதவென்று,
வெள்ளிவளைக் கைப்பற்றப் பெற்றதாயரை விட்டகன்று,
அள்ளலம் பூங்கழனி யணியாலி புகுவர்க்கொலோ.
பதவுரை
|
கள்வன் கொல்யான் அறியேன் |
– |
(வந்து அழைத்துக் கொண்டு போனவன்) திருடனோ? (அன்றி உடையவன் தானோ?) எனக்குத் தொயிவில்லை; |
|
கரியான் ஒரு காளை வந்து |
– |
கருநிறத்தவனான ஒரு யௌவன புருஷன் வந்து, |
|
வள்ளி மருங்குல் |
– |
கொடி போல் நுட்பமான இடையை யுடையளாய் |
|
என்தன் மடம் மானினை |
– |
இள மான் போன்றவளான எனது மகளை |
|
போத என்று |
– |
வா வா என்றழைத்து, |
|
வெள்ளி வளை கை பற்ற |
– |
வெள்ளை வளைகளணிந்துள்ள கையைப் பிடிக்க, (உடனே அவள்) |
|
பெற்ற தாயாரை இட்டு அகன்று |
– |
பெற்ற வளர்த்த தாயாகிய என்னையும் உபேக்ஷித்து விட்டொழிந்து(போய் விட்டாள்;) |
|
(இப்படி தம்பதிகளாகப்போன விவர்கள்) |
||
|
அள்ளல் அம் பூ கழனி அணி |
– |
சேற்று நிலங்களிலே அழகிய பூக்கள் நிறைந்த கழனிகளாலே அலங்கரிக்கப்பட்ட |
|
ஆலி |
– |
திருவாலியிலே |
|
புகுவர் கொலோ |
– |
சென்று சேருவர்களோ? |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- திருத்தாயார் சொல்லத் தொடங்கும்போதே “கள்வன் கொல்” என்று எம்பெருமானைத் கள்ளனாகச் சங்கித்துச் சொல்கிறாள். சாஸ்த்ரங்களில் சேதநனைக் கள்வனாகச் சொல்லியிருக்கிறது; கிம் தேந ந க்ருதம் பாபம் சோரேண ஆத்மாபஹாரிணா” என்றது. எம்பெருமானுக்கே உரிமைப்பட்டதான ஆத்மாவை ஸ்வசேஷமாகவும் அந்ய சேஷமாகவுங் கருதுகின்ற சேதநன் ஆத்மாபஹாரக கள்ளனெனப்படுகிறான். தன் உடமையைத் தான் கைக்கொள்ளுகிற எம்பெருமானைக் கள்வனென்று சொல்லத்தகாது. ஆயினும், “ யானே என்றனதே” (2883) என்றிருக்கும் அஹங்கார மமகாரங்கள் நெடுநாளாக சேதநனிடத்து ஆழந்திக்கிடக்கும் வாஸநையி னுறைப்பினால் தன்னுடைய கள்ளத் தனத்தை எம்பெருமான்மீது ஏறிடலாகுமென்பது தோன்றக் கள்வன்கொல் என்கிறது. “செஞ்சொற்கவிகாள்! உயிர்காத்து ஆட்செய்மின், திருமாலிருஞ்சோலை வஞ்சக்கள்வன் மாமாயன்” (3733) என்றதுங் காண்க.
கள்வன்கொல் யானறியேன்= ‘கள்வனே வந்தான்’ என்று உறுதியாகச் சொல்ல வா எழ வில்லைபோலும்; ஸர்வ ஸ்வாமியானவன் தன் உடமையைக் கைக்கொண்டு போனானாகையாலும், பிரகாசமாகவே கொண்டுபோனா னாகையாலும் கள்வன்கொல் யானறியேன்” என்று உல்லேகிப்பதுபோலச் சொல்லலாயிராநின்றது. இங்ஙனே திருத்தாயார் தெருவிலே ஓடிவந்து “கள்வன்கொல் யானறியேன்” என்று கதறினவாறே இங்குமங்குள்ளா ரடங்கலும் திரண்டு வந்துசேர்ந்து ‘அம்மா! இஃது என்ன அநியாயம்; கள்வனா வந்துவிட்டான்? யார்அவன்? அவன் கவர்ந்து சென்ற பொருள் யாது?’ என்று பேராரவாரமாய் வினவ, மேலே சொல்லுகிறாள் கரியனொருகாளை வந்து என்று தொடங்கி. நீலமேக நிறத்தனாய் இளம்பருவமுடையனான வொருவன் என்னகத்தினுள்ளே புகுந்து என்மகளை ‘புறப்படு, புறப்படு’ என்று சொல்லிக் கையைப் பிடித்திழுத்துக் கொண்டு போகின்றான் காண்மின் என்கிறாள்.
வயலாலி மணவாளன் பரகால நாயகியைக் கவர்ந்து சென்றதாகச் சொல்லுகிறவிது, பலருமறிய ப்ரகாசமாகக் கவர்ந்து சென்றமையைச் சொல்லுகிறதோ? அன்றி, ரஹஸ்மயமாகக் கவர்ந்து சென்றபடியைச் சொல்லுகிறதோ? என்னில்; மகளைத் தாய் அணைத்துக்கொண்டு கிடக்கையில் ஏகாந்தமாக வந்து கவர்ந்து சென்றதாகப் பிள்ளையமுதனார் நிர்வஹித்தனராம். அதை பட்டர் கேட்டருளி ‘அங்ஙனம் வேண்டா: பலருங் கண்டுகொண்டிருக்கையில் தீவட்டிக் கொள்ளைக் கள்ளர் கொள்ளை கொண்டு போமாபோலே கொண்டுசென்றதாக நிர்வஹியிப்பது எளிது’ என்றருளிச்செய்தாராம்.
வயலாலிமணவாளன் தானே வந்து அழைத்துக்கொண்டு போகையாலே ‘திருவாலிக்கே சென்று சேர்ந்தாள்’ என்று உறுதிப்பாடாகச் சொல்லலாமே; அப்படி செல்லாது, “அணியாலி புகுவர் கொலோ” என்று ஸந்தேஹமாகச் சொல்லுவானேன்? என்னில்; கேண்மின்; -திருவாய்மொழியில் “உண்ணுஞ் சோறுபருகு நீர்’ (3293) என்கிற திருவாய்மொழியின் நடையும் இத்திருமொழியின் நடையும் ஒருபுடை ஒத்திருக்கும். அத் திருவாய்மொழியில் நம்மாழ்வாராகிற தலைமகள் (பராங்குசநாயகி) தானாகவே எம்பெருமானுறையுமிடமான திருக்கோளுரை விசாரித்துக்கொண்டு புறப்பட்டுப் போவதாகச் சொல்லப்படுகிறது; இத் திருமொழியில், எம்பெருமானே வந்து அழைத்துக்கொண்டு செல்வதாகச் சொல்லப்படுகிறது: இவ்வளவே வாசி. ஆளவந்தாருடைய கோஷ்டியிலே இவ்விரண்டு திருப்பதிகங்களையும் பற்றி விசாரம் நடந்தது. உண்ணுந் சோறு திருவாய்மொழியிலும் மகள் தாயை விட்டுச் சென்றாள்; கள்வன்கொல் திருமொழியிலும் மகள் தாயைவிட்டுச் சென்றாள்; இவ்விருவருள் எந்த மகளுக்கா அதிகம் கவலைப்படவேண்டுவது? என்று விசாரம் நிகழ்ந்தது. அப்போது அங்கிருந்த முதலிகள்- “பரகாலநாயகி தனித்துச் செல்லவில்லை; ‘நெடுமால் துணையாப் போயின பூங்கொடியாள்’ என்கையாலே தலைவனாகிற துணையோடே சென்றிருக்கிறாள்; ஆகையாலே அவளைபற்றிக்கவலைப்படவேண்டியுற்றுள்ளது” என்றார்கள்; அதற்கு ஆளவந்தார்- ‘இப்படி சொல்லலாலாது; பராங்குச நாயகி தனியே சென்றாளாகிலும் தான் நினைத்தவிடத்தினிற்போய்ச் சேரவேணுமென்னும் ஆவலினால் எப்படியாவது விரைவிற்சென்று சேர்ந்துவிடுவள்; வழியில் தங்கி அபாயங்களுக்கு கோளுரே” (3293). என்று ஸம்சயமின்றி நிச்சயித்துச் சொல்லப்பட்டது அங்கு; ஆகையாலே அவளைப் பற்றிக் கவலைப்பட வேண்டிற்றில்லை. பரகால நாயகியும் அப்படி தனியே சென்றிருப்பாளாகில் அவளும் தனக்கு உத்தேச்யமான திருவாலியிலே சென்ற சேர்ந்தே திருவள்; “திடண்ணமென்னிளமான் புகுமூர் திருவாலியே” என்று தாயும் நிச்சயம்படக் கூறியிருப்பள்; அவளைப்பற்றியும் கவலைப்பட வேண்டாதிருக்கும். அங்ஙனன்றியே தம்பதிகளாய்ச் செல்லுகையாலே நாயகனுடைய வடிவழகிலே ஈடுபட்டு நாயகி பைத்தியம்பிடித்தும், நாயகியின் வடிவழகிலே ஈடுபட்டு நாயகன் பைத்தியம் பிடித்தும் இப்படி இருவரும் பித்தம் தலைக் கொண்டவர்களாய்ப் போக நேருமாகையாலே உத்தேச்யமான திருவாலியிலேயே சென்று சேருவர்களென்று உறுதியாகச் சொல்வதிற்கில்லை; திருவாலியிற் சென்று சேருவர்களோ? அன்றியே பரஸ்பரம் பித்துக்கொள்ளிகளாய்ச் சென்று லங்கை போன்ற விரோதிகளிருப்பிடங்களிலே சென்று சேருவர்களோ! என்று சங்கித்துக் கவலைப்படவேண்டியிருக்கிறது; இது தோன்றவே ‘அணியாலி புகுவர்கொலோ?’ என்று ஸந்தேஹம்படச் சொல்லியிருக்கிறது காண்மின்-என்றருளிச் செய்தாராம். ஆகவே இத் திருமொழியில் ஒவ்வொரு பாசுரத்திலும் “ஆலி புகுவர்கொலோ” என்று ஸந்தேஹமாகவே சொல்லியிருப்பது பொருந்தும். பெரியாழ்வார் திருமொழியில் “நல்லதோர்தாமரைப் பொய்கை நாண்மலர்மேல் பனிசோர, அல்லியுந்தாது முதிர்ந்திட்டு அழகழிந்தாலொத்தாலோ, இல்லம் வெறியோடிற்றாலோ என் மகளை யெங்குங் காணேன், மல்லரை அட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்கார்கொலொ” (297) என்று-இருவருஞ் சேர்ந்து பிச்சேறிக் கம்ஸநகரமாகிய மதுரையிற் புகுவார்களோ? அன்றி அதற்கு அருகிலுள்ள திருவாய்ப்பாடியிற் புகுவார்களோ? என்று உடன் போக்கிற் சென்ற தலைவியைக்குறித்துத் தாய் ஐயப்பட்டுச் சொன்னதும் இங்கு நினைக்கத்தக்கது. காளை- “காளையே எருது பாலைக்கதிபன் நல்லிளையோன் பேராம்” என்பது நிகண்டு. வள்ளி- ‘வல்லீ’ என்னும் வடசொல் விகாரம். மடமான் – உவமையாகுபெயர். ‘போதரு’ என்பது போத என்று குறைந்திருக்கின்ற தென்னலாம். மூன்றாமடியில், “இட்டகன்று, விட்டகன்று” என்பன பாடபேதங்கள்.
English Translation
Was he a thief? I do not know. A dark bull-youth came to my slender-waisted fawn-eyed daughter saying, “Come!”, and held her bangled hand in his. Leaving me, her mother, she left. Would they have entered the beautiful Tiruvali surrounded by lotus-filled lakes and fields? O, Alas!
