(1116)

(1116)

பொன்குலாம் பயலை பூத்தன மெந்தோள் பொருகயல் கண்துயில் மறந்தாள்,

அன்பினா லுன்மே லாதரம் பெரிது இவ்வ ணங்கினுக் குற்றநோ யறியேன்,

மின்குலா மருங்குல் சுருங்கமேல் நெருங்கி வீங்கிய வனமுலை யாளுக்கு,

என்கொலாம் குறிப்பி லென்னினைந் திருந்தாய் இடவெந்தை யெந்தை பிரானே.

 

பதவுரை

இடவெந்தை யெந்தை பிரானே!-;

(இப்பெண்பிள்ளையினுடைய)

மெல் தோள்

மென்மைதங்கிய தோள்களானவை

பொன் குலாம் பயலை புத்தன

பொன்னிறமென்று சொல்லத்தக்க பசலை நிறத்தைக் கொண்டன;

பொரு கயல் கண் துயில் மறந்தாள்

ஒன்றோடொன்று போர் செய்கிற இரண்டு மீன்கள் போன்ற கண்களிலே உறக்கத்தை மறந்துவிட்டாள்;

உன் மேல்

உன் விஷயத்திலே

அன்பினால்

ஆசையினாலே

ஆதரம் பெரிது

ஆதரவு பெருகிச் செல்லுகின்றது;

இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன்

இப்பெண்ணுக்கு உண்டான வியாதியை அறிகின்றே னில்லை;

மின் குலாம் மருங்குல் சுரங்க

மின்னல்போன்று கொண்டாடத்தக்க இடையானது துவளும்படியாக

மேல் நெருங்கி

மார்பின்மேலே ஒன்றோடொன்று நெருக்கமுற்று

வீங்கிய

வளர்ந்துவாராநின்ற

வனம் முலையாளுக்கு

அழகிய முலைகளையுடையளான இம்மகளுக்கு

என் ஆம் கொல்

என்ன ஆகுமோ!

குறிப்பில் என் நினைந்திருந்தாய்

(இவளைப்பற்றித்) திருவுள்ளத்தில் என்ன நினைத்திருக்கிறாய்?.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- பசலை நிறத்தைப்பற்றி குறுந்தொகையில்; ஒரு செய்யுளுண்டு.  அதாவது– “ஊருண்கேணி யுன்டுறைத் தொக்க பாசியன்றேபசலை, காதலர் தொடுவுழித் தொடுவுழி நீங்கி விடுவுழி விடுவுழிப் பரத்தலானே.”  (399.) என்பதாம்.  ஊரிலுள்ள ஜனங்களாலே நீருண்ணப் பெறுகிற கேணியினுள்ளே படர்ந்து கிடக்கும் பாசி போன்றது பசலைநிறம்;  தண்ணீரில் நாம் கை வைத்தோமாகில் கைபட்ட விடங்களில் பாசி நீங்கும்;  கையை எடுத்துவிட்டோமாகில் அவ்விடமெல்லாம் பாசி மூடிக்கொள்ளும்;  அதுபோல, கணவனுடைய கைபடுமிடங்களில் பசலைநிறம் நீங்கும்;  அணைத்த கை நெகிழ்த்தவாறே அப்பசலைநிறம் படரும்;  ஆதலால் பாசிபோன்றது பசலைநிறம் என்றபடி.  (தொடுவுழித் தொடுவுழி – தொட்டவிடங்கள்தோறும்.  விடுவுழி விடுவுழி–விட்ட விடங்கள் தோறும்.  பரத்தலான்-வியாபிக்கிறபடியினாலே.)

(இவ்வணங்கினுன்குற்ற நோயறியேன்.) எம்பெருமானே! இவளுக்கு இப்படிப்பட்ட மனோவியாதியுண்டானது உன்னுடைய கடாக்ஷ்த்தில் ஆசைப்பட்டா? புன்முறவலில் ஆசைப்பட்டா! திருமேனியோடணைய ஆசைப்பட்டா? என்று நிச்சயிக்க மாட்டுகிறிலேன் என்றவாறு.

மூன்றாமடியின் உள்ளுறை பொருளாவது:- “என்றனளவன்றால் யானுடைய வன்பு” என்னுமாபோலே ஆச்ரயத்தினளவல்லாத பக்திப்பெருங் காதலையுடையேன்.  என்றவாறு.  (குறிப்பில் என்னினைந்திருந்தாய் இடவெந்தை யெந்தைபிரானே!) ‘தாய் உதவுவள், தமப்பன் உதவுவன், உறவினர் உதவுவர்;  நமக்கென்ன? என்று நினைத்திருக்கிறாயோ? இப்படியாகில் நீ பரமபதத்தைவிட்டு இந்நிலத்திலே வந்து திருவிடவெந்தையிலே ஸந்நிதிபண்ணியிருப்பது பிரயோஜநமற்றதாகுமிறே என்றவாறு.

 

English Translation

She has lost her bangle pair, become pale and senseless, her warring fish-like eyes never close, O! Her love for you swells, I cannot decipher what is ailing my precious daughter. Her twin breasts are swollen, her lightning-waist has shriveled more; what is going to happen, how will lit end? Now tell me what do you intend to do with her, Idavendai Endai, my Lord, O!

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top