(1096)
தொண்டாயர் தாம்பரவு மடியினானைப் படிகடந்த தாளாளற் காளாயுய்தல்
விண்டானை, தென்னிலங்கை யரக்கர்வேந்தை விலங்குண்ண வலங்கைவாய்ச் சரங்களாண்டு,
பண்டாய வேதங்கள் நான்கும்ஐந்து வேள்விகளும் கேள்வியோ டங்கமாறும் கண்டானை,
தொண்டனேன் கண்டுகொண்டேன் கடிபொழில்சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே.
பதவுரை
|
தொண்டு ஆயார் தாம் |
– |
அடிமைப்பட்டவர்கள் |
|
பரவும் |
– |
துதிக்கப்பெற்ற |
|
அடியினானை |
– |
திருவடிகளை யுடையவனும், |
|
படி கடந்த தாள் ஆளற்கு ஆள் ஆய் உய்தல் விண்டானை தென் இலங்கை அரக்கர் வேந்தை |
– |
பூமியை யளந்த திருவடிகளை யுடையனான தனக்கு ஆட்பட்டு உஜ்ஜீவிப்பது தவிர்ந்தவனான இராவணனை |
|
விலங்கு உண்ண |
– |
மிருகங்கள் தின்னும்படி |
|
வலம் கைவாய் |
– |
வலத்திருக்கையாலே |
|
சரங்கள் ஆண்டு |
– |
அம்புகளைப்பிரயோகித்தவனும், |
|
பண்டு ஆய |
– |
நித்யமான |
|
நான்கு வேதங்களும் |
– |
நாலு வேதங்களையும் |
|
ஐந்து வேள்விகளும் |
– |
பஞ்சமஹா யஜ்ஞங்களையும் |
|
கேள்வியோடு |
– |
ஸ்மிருதிகளையும் |
|
அங்கம் ஆறும் |
– |
ஆறு அங்கங்களையும் (பிரவர்த்திப்பித்தவனுமான எம்பெருமானை |
|
தொண்டனேன் |
– |
அடியேன் |
|
கடி பொழில் சூழ் கடல்மல்லைத் தலசயனத்தே கண்டுகொண்டேன். |
||
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
‘ஆயார்’ என்றது ஆனார் என்றபடி; தொண்டராக ஆனவர்கள்-“ஒழிவில் காலமெல்லா மூடனாய் மன்னி, வழுவிலா வடிமை செய்யவேண்டும் நாம்”; என்றிருப்பவர்கள்; அப்படிப்பட்டவர்களால் போற்றப்படும் திருவடிகளை யுடையவன்; நம் உடைமையை நாம் இழக்கலாகாது’ என்று தானே தன் திருவடிகளைக் கொண்டுவந்து எல்லார் தலையிலும் வைத்து ஸத்தை பெறுவித்த சிறந்த குணத்தில் ஈடுபட்டு ஆட்படாமல் மார்பு நெறித்திருந்த இராவணனுடைய உடலை நாயும் நரியும் கழுகும் முதலிய மிருகங்கள் தின்னும்படி அம்புகளைச் செலுத்தி முடித்தவன்; ஆத்துமாக்கள் தன்னைப் பணிந்து உய்ந்துபோவதற்காகப் பலவகைப்பட்ட சாஸ்த்ரங்களையும் அநுஷ்டாநங்களையும் ஏற்படுத்தினவன்; இப்படிப்பட்ட பெருமானை அடியேன் இன்று திருக்கடல் மல்லையிலே ஸேவிக்கப்பெற்றேன்.
முதலடியில், தாளாளற்கு என்றது – தளாளனாகிய தனக்கு என்றவாறு.
ஐந்து வேள்விகளாவன; – பிரமயஜ்ஞம், தேவயஜ்ஞம், புதயஜ்ஞம், பித்ருயஜ்ஞம், மநுஷ்யயஜ்நு மென்பனவாம். பிரமயஜ்ஞமாவது- வேதத்தில் நித்தியம் ஒரு ப்ரச்நமோதுவது தேவயஜ்ஞமாவது;அக்நிஹோத்ரஞ் செய்வது; புதயஜ்ஞமென்பது – பிராணிகட்குப் பலியிடுவது; பித்ருயஜ்ஞமென்பது -பித்துக்களை யுத்தேசித்துத் தர்ப்பணம் விடுவது; மநுஷ்யயஜ்ஞமென்பது விருந்தாளிகளுக்கு உணவு முதலியன கொடுப்பது.
மநுஸ்மிருதி பராசரஸ்மிருதி முதலிய ஸ்மிருதிகள் கேள்வி யெனப்படும். அன்றியே “கேள்வியோ டங்கமாறும்” என்று சேர்த்து அந்வயித்து, உபதேச பரம்பரையாலே வருகிற ஆறு அங்கங்களும் என்று பொருள் கொள்ளவுமாம். சீக்ஷா, வியாகரணம், சந்தஸ், நிருக்தம், ஜ்யோதிஷம், கல்பம் என்பன ஆறு அங்கங்களாம்.
English Translation
Devotees worship the Lord’s feet, the feet that strode the Earth. The Rakshasa Ravana, king of Lanka would never offer worship. The lord killed him with hot arrows. He is the substance of the four Vedas, the five sacrifices, the six Angas, and this devotee’s very own. Amid cool fragrant groves, I have seen Him in Talasayanam at Kadal Mallai.
