(1055)

(1055)

சேயனணியன் சிறியன் பெரிய னென்பது சிலர்ப்பேசக் கேட்டிருந்தே,

என் னெஞ்சமென் பாய் எனக் கொன்று சொல்லாதே,

வேய்கள் நின்றுவெண் முத்த மேசொரி வேங்க டமலை கோயில் மேவிய,

ஆயர் நாயகற் கின்றடி மைத்தொழில் பூண்டாயே.

 

பதவுரை

(பரமபதநாதனைத் தொழுங்கள் என்றால்)

சேயன் என்பது

(அவன்) வெகு தூரத்திலுள்ளவன் (அவனை எப்படி தொழ முடியும்) என்று சொல்லுவதும்,

(அர்ச்சாரூபியான எம்பெருமானைத் தொழுங்கள் என்றால்)

அணியன்  என்பது

(இவன்) இதோ இருக்கிறானே (இவனையா தொழுவது) என்று சொல்லுவதும்,

(ஸ்ரீ கிருஷ்ணனைத் தொழுங்கள் என்றால்)

சிறியன் என்பது

(இவன்) இழிகுலத்திலே பிறந்தவனாயிற்றே (இவனையோ தொழுவது) என்று சொல்லுவதும்,

(வ்யூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் தொழுங்கள் என்றால்)

பெரியன் என்பதும்

கைக்கு எட்டாதவனை எப்படி தொழுவது? என்று சொல்லுவதுமாய் (ஆக இப்படியெல்லாம்)

சிலர் பேச

சில துர்ப்பாக்கியசாலிகள் பேசாநிற்க,

என் நெஞ்சம் என்பாய்

ஓ மனமே!

கேட்டிருந்தே

(அந்த குத்ஸிதவாதங்களை நீ) ;கேட்டு வைத்தும்

(அந்த துர்வாதிகளின் திரளில் புகாமல்)

எனக்கு ஒன்று சொல்லாதே

என்னிடத்திலும் ஒரு வார்த்தை சொல்லாமல்,

வேய்கள்

மூங்கில்களானவை

நின்று

ஒரு படிப்பட நின்றுகொண்டு

வெண்முத்தமே சொரி

வெளுத்த முத்துக்களைச் சொரியுமிடமான

வேங்கடம் மலை

திருமலையை

கோயில் மேவிய

கோயிலாக விரும்பிய

ஆயர்நாயகற்கு

ஸ்ரீ கோபால கிருஷ்ணனுக்கு

இன்று அடிமைத்தொழில் பூண்டாயே-

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- “சேயன், அணியன், சிறியன், பெரியன்” என்கிற வார்த்தைகள் பகவத் விஷயத்தில் இழியமாட்டாத ஸம்ஸாரிகள் சொல்லும் வார்த்தைகளாம்;  பரவாஸூதேவன் எட்டாநிலத்திலே உள்ளவனாகையாலே வெகு தூரஸ்தனான அவனை ஆச்ரயிக்கப் போகாது என்பர் சிலர்; அர்ச்சாவதாரங்கள் ஸமீபத்திலுள்ளவை யாகையாலே அலக்ஷியம் தோற்றப் பேசுவர் சிலர்; ராமகிருஷ்ணாதி விபவாவதாரங்களில் ஸௌலப்ய குணத்தில் ஈடுபடாதே சிறுமைகளைச் சொல்லி ஏசுவர் சிலர்; வியூஹவாஸூதேவனையும் அந்தர்யாமியான பெருமானையும் உபாஸிக்கச் சொன்னால் நெஞ்சுக்கு மெட்டாத அப்பெரிய வுருவை எப்படி உபாஸிப்பதென்று சொல்லி யொழிவர் சிலர்; ஆக விப்படி அவரவர்கள் மனம்போனபடி பேசி பகவத் விஷயத்தில் அவகாஹிக்க மாட்டாதே ஸம்ஸாரிகளாய் உண்டுடுத்துத் திரியாநிற்கக் காண்கிறோம். எம்பெருமானுடைய சேய்மைமையக் சிலர் குற்றமாகக் கூறுவர்;  அவனுடைய அண்மையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்; அவனுடைய பெருமையைச் சிலர் குற்றமாகக் கூறுவர்;  ஆகவே அவனுடைய குணங்களெல்லாம் இகழ்ச்சிக்கு உறுப்பாகிக் கிடக்கும்போது, அப்படி இகழ்வாருடைய திரளில் புகாதே நெஞ்சே! நீ என்னோடும் ஒரு வார்த்தை சொல்லாதே திடீரென்று திருவேங்கமுடையான் விஷயத்தில் அடிமைத் தொழில்பூண்டு நின்றாயே! என்று உகந்து பேசினாராய்த்து.

மதயானைகளின் கும்பஸ்தலத்தினும் மூங்கில்களினும் முத்துக்கள் உண்டாவனவாகக் கவிகள் சொல்லுவர்களாதலால் “வேய்கள் நின்று வெண்முத்தமே சொரி வேங்கடம்” எனப்பட்டது. “வெண் தரளங்கள் வேய்விண்டுதிர் வேங்கடமாமலை” என்றார் கீழ்த் திருமொழியிலும்.  மூங்கில்களானவை வெளுத்த முத்துக்களைச் சொரிய, அவற்றின் ஒளியானது வழிகாட்ட, அப்பன் திருமலையிலே வந்து புகுந்தானென்று ரஸோக்தியருளிச் செய்வர்.

 

English Translation

O Heart! You have heard our Lord being spoken of as the one afar, and the one near, the big one, and the small one. The cowherd-Lord resides in Venkatam hills. His temple is surrounded by bamboo thickets which spill white pearls without a word. Today you too have entered into his service.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top