(1577)

(1577)

தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாள்கலி யன்திரு வாலி

நாடன், நன்னறை யூர்நின்ற நம்பிதன் நல்ல மாமலர் சேவடி, சென்னியில்

சூடி யும்தொழு துமெழுந் தாடியும் தொண்டர் கட்கவன் சொன்னசொல் மாலை,

பாடல் பத்திவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம்நில் லாவே.

 

பதவுரை

தோடு

இதழ்களானவை

விண்டு

விரிந்து

அலர்

விகஸிக்கப்பெற்ற

பூ பொழில்

பூஞ்சோலைகளையுடைய

மங்கையர் தோன்றல்

திருமங்கை நாட்டிலுள்ளவர்கட்குத் தலைவரும்

திரு ஆலி நாடன்

திருவாலி நாட்டுக்குப் பிரபுவானவரும்

வாள்

வாளை யுடையவருமான

கலியன் அவன்

அத் திருமங்கையாழ்வார்

நல் நறையூர் நின்ற நம்பி தன்

திருநறையூர் நம்பியினுடைய

நல்ல மா மலர் சே அடி

அழகிய சிறந்த திருவடித்தாமரைகளை

சென்னியில் சூடியும்

(தமது) தலைமே லணிந்துகொண்டும்

தொழுதும்

வணங்கியும்

எழுந்து

எழுந்திருந்து

ஆடியும்

(ப்ரீதிக்குப் போக்கு வீடாகக்) கூத்தாடியும்

தொண்டர் கட்கு

பாகவதர்களுக்கு (உஜ்ஜீவனமாக)

சொன்ன

அருளிச் செய்த

சொல் மாலை

சொல் தொடையாகிய

இவை பத்து பாடல்

இந்தப் பத்துப் பாசுரங்களையும்

தொண்டீர்

எம்பெருமானடியார்களே!

பாடுமின்

நீங்கள் ஓதுங்கள்;

பாட

அங்ஙனம் ஓதவே

நும்மிடை பாவம் நில்லா

உங்களிடத்திற் பாவங்கள் நிற்கமாட்டா.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- இத் திருமொழிகற்றார்க்குப் பயனுரைத்துத் தலைகட்டும் பாசுரம் இது.  கீழ் ஆறாம்பத்தில் “கண்ணுஞ்சுழன்று” என்ற திருமொழி தொடங்கி இத் திருமொழியளவாக நூறு பாசுரங்கள் கொண்ட பத்துத் திருமொழிகளால் திருநறையூர்த் திருப்பதியை மங்களா சாஸநம் செய்தாராயிற்று.  திருநறையூர் நம்பிக்கு அஸாதாரணமாகவுள்ள ஒரு தன்மை இங்குத் தொனி்ககின்றது காண்மின்; – திருநறையூர்க்கு ‘நாச்சியார் கோயில்’ என்னுந் திருநாமமே மிகப்ரஸித்தமாக வழங்கிவருவது.. திருவீதிப் புறப்பாடுகளில் நாச்சியார் முன்னே யெழுந்தருளவும் நம்பி பின்னே யெழுந்தருளவுமான ஒரு ஸம்ப்ரதாயமும் காண்கிறோமங்கு.  எம்பெருமான் தன்னுடைய மேன்மையை அடக்கிக்கொண்டு தன்னடியார்க்கு மேன்மையைப் ப்ரகாசப்படுத்துகிற திருப்பதி இதுவாதலால், இத்திருப்பதியின் பாடலைத் தலைக் கட்டுகின்ற இப்பாசுரத்தில் எம்பெருமானுடைய அத்தன்மை விளங்க, பாசுரம் தொடங்கும் போதே (மற்ற பலச்ருதிப் பாசுரங்களிற் போலல்லாமல்) ஆழ்வார் தம்முடைய திருப்புகழை முற்கொண்டு பேசுகிறபடி காண்மின்.  “தோடு விண்டலர் பூம்பொழில் மங்கையர் தோன்றல் வாட்கலியன் திருவாலி நாடன்” என்னுமளவும் ஆழ்வார் தம்முடைய திருநாம ஸங்கீர்த்தநமேயிறே.

“தொண்டர்க்கு அமுதுண்ணச் சொல் மாலைகள் சொன்னேன்” என்னுமா போலே பக்தர்களுக்கு அம்ருதமாக அருளிச் செய்யப்பட்ட இத்திருமொழியைக் கற்பவர்கள் பக்கலில் பாவமொன்றும் நில்லாது என்றதாயிற்று.

 

English Translation

This garland of songs sung by the Lord of Nectar-groves-around-Tirumangai ruler, wielder-of-the-sharp-spear, Kalikanri, on the lotus feet of Naraiyur Lord, singing, falling and dancing in ecstacy, -those who master it, ye among devotees, -those who master if, ye among devotees, Learn to sing in song, offer it as worship.  Pain and sorrow will never come to you again.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top