(1522)

(1522)

கல்லார் மதில்சூழ் கடியிலங்கைக் காரரக்கன்

வல்லாகங் கீள வரிவெஞ் சரம்துரந்த

வில்லானை, செல்வவிபீடணற்கு வேறாக

நல்லனை நாடி நறையூரில் கண்டேனே.

 

பதவுரை

கல் ஆர் மதிள் சூழ் கடி

கற்களால் கட்டப்பட்ட மதிள்களால் சூழப்பட்ட

இலங்கை கார் அரக்கன்

அருணுடைத்தான லங்காபுரியிலுள்ள நீசனான ராக்ஷஸராஜனுடைய

வல் ஆகம் கீள

மிடுக்குடைய சரீரம் தொலையும்படி

வரி வெம் சரம் துரந்த

அழகிய வெவ்விய அம்புகளைப் பிரயோகித்த

வில்லானை

சார்ங்கத்தை யுடையவனும்

செல்வம் விபீடணற்கு

ஸ்ரீமானான விபீஷணாழ்வானுக்கு

வேறுஆக

விலக்ஷணமாக

நல்லானை

அன்பனுமான எம்பெருமானை

நாடி, நறையூரில் கண்டேன்-.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- அஸத்துக்களைத் தண்டித்து ஸத்துக்களைக் கைக்கொள்ளுமியல்வினன் என்பது பிரஸித்தமாகும்படி லங்காதிபதியான ராவணனைக் கொன்றொழித்தது ஸ்ரீவிவீஷணாழ்வானைப் பரிக்ரஹித்தருளின பெருமானைத் திருநறையூரில் காணப்பெற்றே னென்கிறார்.

செல்வவிபீடணற்கு = இலங்கைச் செல்வம் முழுவதையும் உதறிவிட்டு வந்து சேர்ந்த விபீஷணனைச் செல்வவிபீடண னென்றது அழியாச்செல்வமாகிய பகவத்பக்தியுடைமைபற்றியென்க.  வால்மீகி முனிவனும், இலங்கைச் செல்வமனைத்தையும் விட்டிட்டுப் புகலற்று வானத்திலே வந்து நின்ற இவ்விபீஷணாழ்வானைப்பற்றிப் பேசும்போது அந்தரிக்ஷகத : ஸ்ரீமாந்” என்றார்; அப்போது விபீஷணனிடத்து இருந்த ஸ்ரீயாவது ஸ்ரீவைணவ ஸ்ரீயேயாம்.  இளையபெருமாள் விஷயத்திலும் கஜேந்திராழ்வான் விஷயத்திலும் இங்ஙனமே சொல்லப்பட்டதுண்டு; அயோத்திச் செல்வமனைத்தையும் துறந்து இராமபிரான் பின்னே காட்டுக்குப் புறப்பட்ட இளையபெருமாள் “லக்ஷ்மணோ வக்ஷ்மிஸம்பந்ந :” எனப்பட்டார்; அப்போது லக்ஷ்மணனுக்கிருந்த வக்ஷ்மியாவது கைங்கரியருசியாகிற வக்ஷிமியேயாம்.  முதலையின் வாயிலகப்பட்டுத் துடியாநின்ற கஜேந்திராழ்வான் “ஸது நாகவர : ஸ்ரீமாந்” என்னப்பட்டான்; அப்போது கஜேந்திராழ்வானுக்கிருந்த ஸ்ரீயாவது – ‘பறித்த பூ செவ்விகுலைவதற்கு முன்னே எம்பெருமான் திருவடியில் ஸமர்ப்பிக்கப் பெறவேணுமே’ என்றிருந்த அபிநிவேசமாகிற செல்வமேயிறே.

(விபீடணற்கு வேறாக நல்லானை) விபீஷணன் வந்துசேர்ந்தபோது அங்குள்ள வாநரமுதலிகள் ‘சத்ருபக்ஷத்தில் நின்றும் வருகின்ற இவனைச்சேர்த்துக் கொள்ளலாகாது; சேர்த்துக்கொண்டால் மஹத்தான கெடுதிவினையும் ‘என்று சொல்லித் தகைய, அவனைக்கைக்கொண்டே தீர்வேன்; ஒருகாலும் கைவிடமாட்டேன்’ என்று பெருமான் அருளிச்செய்ய, ‘அப்படியாகில் அடியோங்கள் கிஷ்கிந்தைக்கு மீளுகிறோம்’ என்று வாநர முதலிகள் சொல்ல ‘நீங்கள் இஷ்டப்படி செய்யலாம்; விபீஷணனைக் கைக்கொள்வதை மாத்திரம் ஒருபடியாலும் தவிரமாட்டேன்’ என்று சிக்கென அருளிச்செய்து விபீஷணாழ்வான் இடத்தில் விசேஷகடாக்ஷம் பண்ணினமை அறியத்தக்கது.

 

English Translation

The Lord came as a bow-wielder and killed the mighty Ravana king of ocean-girdled Lanka He is the benevolent one, good to the young vibhishana.  I have found him in Naraiyur.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top