வாழாட்பட்டு நின்றீ ருள்ளீரேல் வந்து மண்ணும் மணமும்கொண்மின்
கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்
ஏழாட் காலும் பழிப்பிலோம் நாங்கள் இராக்கதர் வாழ்இலங்கை
பாழாளாகப் படைபொருதானுக்குப் பல்லாண்டு கூறுதமே
பதவுரை
வாழ் ஆள் பட்டு |
– |
உஜ்ஜீவிப்பதற்கு உறுப்பான (எம்பெருமானுடைய) அடிமைத் தொழிலில் ஈடுபட்டு |
நின்றீர் |
– |
நிலைத்து நின்றவர்கள் |
உள்ளீர் எல் |
– |
இருப்பீர்களாகில் |
வந்து |
– |
(நீங்கள் எங்களோடே) வந்து சேர்ந்து |
மண்கொள்மின் |
– |
(எம்பெருமானுடைய உத்ஸவார்த்தமான (திருமுளைத் திருநாளுக்குப்) புழுதி மண் சுமவுங்கள்; |
மணமும் கொள்மின் |
– |
(அந்த உத்ஸவத்துக்கு) அபிமாகிகளாகவும் இருங்கள்; |
கூழ் ஆள்பட்டு நின்றீர்களை |
– |
சோற்றுக்காக (ப் பிறரிடத்தில்) அடிமைப்பட்டிருப்பவர்களை |
எங்கள் குழுவினில் |
– |
எங்களுடைய கோஷ்டியிலே |
எங்களுடைய கோஷ்டியிலே |
– |
அங்கீகரிக்க மாட்டோம்; (எங்களுக்குள்ள சிறப்பு என்ன வென்கிறீர்களோ,) |
நாங்கள் |
– |
நாங்களோவென்றால் |
ஏழ் ஆள் காலும் |
– |
ஏழு தலைமுறையாக |
பழிப்பு இலோம் |
– |
ஒருவகைக் குற்றமும் இல்லாதவர்கள் |
(எங்களுடைய தொழிலோவென்னில்) |
||
இராக்கதர் வாழ் இலங்கை |
– |
ராக்ஷஸர் வஹிக்கிற லங்கையிலிருந்த |
ஆள் |
– |
ஆண் புலிகள் யாவரும் |
பாழ் ஆக |
– |
வேரோடே அழிந்து போம்படி |
படை |
– |
(வாநர) சேனையைக் கொண்டு |
பொருதானுக்கு |
– |
போர் செய்த பெருமாளுக்கு |
பல்லாண்டு கூறுதும் |
– |
பல்லாண்டு பாடுகிறவர்களாய் இருக்கின்றோம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
*** – இவ்வாழ்வார் தனியராயிருந்து மங்களாசாஸநம் பண்ணுவதில் த்ருப்திபெறாமலும், ‘போக்யமான வஸ்துவைத் தனியே அநுபவிப்பது தகாது’ என்கிற நியாயத்தைக் கொண்டும் இன்னும் பல பேர்களையும் மங்களாசாஸநத்திற்குத் துணைகூட்டிக் கொள்ளவேணுமென்று நினைத்தார். உலகத்தில் எத்தனை வகையான அதிகாரிகள் இருக்கிறார்களென்று ஆராய்ந்து பார்த்தார். செல்வத்தை விரும்புமவர்கள், ஆத்மாநுபவக்கிற கைவல்யத்தை விரும்புமவர்கள், எம்பெருமானுடைய அநுபவத்தை அபேக்ஷிப்பவர்கள் என்றிப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதைக் கண்டார்; இம்மூவகை யதிகாரிகளில் செல்வத்தை விரும்புமவர்களும் கைவல்யத்தை விரும்புமவர்களும் ப்ரோஜநாந்தரபரர்களாயிருந்தாலும், அந்த அற்ப பலனுக்காகவாவது எம்பெருமானைப் பணிந்து பிரார்த்திக்கின்றார்கள் ஆகையால் அவர்களையும் திருத்திப் பணிகொள்ளலாம் என்று ஆழ்வார் நிச்சயித்து மேற்சொன்ன மூவகை அதிகாரிகளையும் மங்களாசாஸநத்துக்கு அழைக்கவிரும்பி, முதல்முதலாக, எம்பெருமானுடைய அநுபவத்தையே விரும்புமவர்களான ஜ்ஞாநிகளை அழைக்கிறார். ‘‘அப்யர்ஹிதம் பூர்வம்’’ (எது சிறந்ததோ, அது முற்படும்) என்கிற நியாயத்தாலே ச்ரேஷ்டர்களான ஞானிகளுக்கு முதல் தாம்பூலம் கொடுக்கிறார்போலும்.
பகவத் விஷயம் தவிர மற்ற விஷயங்களில் செய்கிற கைங்கரியம் எல்லாம் செய்வதற்குக் கஷ்டமாயும், கஷ்டப்பட்டுச் செய்தாலும் அந்த தேவதைக்கு த்ருப்திகரமல்லாமலும், ஒருவாறு த்ருப்திகரமானாலும் அற்பபலனைக் கொடுப்பனவாயும் இருப்பதால் அவை துயரத்தையே விளைக்கும்; பகவத் விஷயத்தில் செய்யும் கைங்கரியமோ, எளிதாகச் செய்யக் கூரியதாயும், விரைவில் எம்பெருமானை உவப்பிக்க வல்லதாயும், சாச்வதமான பலனையளிப்பதாயும் இருப்பதால் அப்படிப்பட்ட பகவத் கைங்கரியத்தில் ஊன்றி யிருப்பவர்களை ‘‘வாழாட்பட்டு நின்றீர்’’ என்றழைக்கிறார். அப்படிப்பட்ட அதிகாரிகள் மிகவும் அருமைப்படுவர்கள் என்பதைக் காட்டுகிறார் ‘‘உள்ளீரேல்’’ என்று.
(மண்ணும் மணமும் கொண்மின். ) மண் கொள்ளுகையாவது -மஹோத்ஸவத்தில் அங்குரார்ப்பணத்திற்குப் புழுதி மண்சுமப்பது. மணங் கொள்ளுகையாவது – அந்த மஹோத்ஸவத்தினிடத்தில் அபிமாநங்கொண்டிருப்பது. முற்காலத்தில் அடிமை யோலை யெழுதும்போது ‘‘மண்ணுக்கும் மணத்துக்கும் உரியேனாகக் கடவேன்’’ என்றெழுதுவது வழக்கமாம்.
முதலடியில் ‘‘உள்ளீரேல்’’ என்று ஆழ்வார் உரக்கக் கூவினபடியைக் கேட்ட பலபேர்கள் அவரழைத்த வாசியறியாமல் ஓடிவந்தார்கள். அவர்களில் வயிற்றுப் பிழைப்புக்காக நீச ஸேவைபண்ணி ஜீவிப்பவர்களும் சேர்ந்திருந்தபடியால் அவர்களை விலக்கித் தள்ளுகிறார் இரண்டாமடியால். பகவத் ஸமபந்தத்தால் தமக்கு உண்டாயிருக்கிற பெருமையும், தம்முடைய காலக்ஷேப க்ரமத்தையும் அருளிச் செய்கிறார் பின்னடிகளில்.
(ஏழாட்காலும்) முன்னே மூன்று, பின்னே மூன்று, நடுவில் ஒன்று; ஆக ஏழு தலைமுறையிலும் என்றபடி அன்றி, முன்னேழு, பின்னேழு, நடுவேழு என்று கொண்டு (அதாவது முன்னே பத்து, பின்னே பத்து, நடுவில் தான் ஒன்று என்று கொண்டு) இருபத்தொரு தலைமுறையைச் சொன்னதாகவுமாம். நாங்கள் அநாதிகாலமாக எம்பெருமானையே உபாயமாகவும் உபேயமாகவுங் கொண்டு, அப்பெருமான் என்றைக்கோ செய்தருளின ராவணஸம்ஹாரத்திற்கு இன்றிருந்து மங்களாசஸநம் பண்ணுகிறோம் ஆகையாலே பரமவிலக்ஷணர்களாயுள்ள எங்களுடைய கோஷ்டியில் நீங்கள் பிரவேசிக்கலாகாதென்று வயிறு வளர்க்கும் வம்பர்களை விலக்கித் தள்ளினாராயிற்று.
English Translation
You that stand and suffer life, come! Accept talc paste and fragrances. We shall not admit into our fold those who are slaves of the palate. For seven generations, pure hearted, we have sung the praises of Kodanda Rama who launched an army and destroyed Lanka, the demon’s haunt.