(514)
நாமமாயிர மேத்தநின்ற நாராயணாநர னேஉன்னை
மாமிதன்மக னாகப்பெற்றா லெமக்குவாதைதவிருமே
காமன்போதரு காலமென்றுபங் குனிநாள்கடை பாரித்தோம்
தீமைசெய்யும் சிரீதராஎங்கள் சிற்றில்வந்து சிதையேலே
(515)
இன்றுமுற்றும் முதுகுநோவ இருந்திழைத்தஇச் சிற்றிலை
நன்றும்கண்ணுற நோக்கிநாங்கொளும் ஆர்வந்தன்னைத் தணிகிடாய்
அன்றுபாலக னாகியாலிலை மேல்துயின்றவெம் மாதியாய்
என்றுமுன்றனக் கெங்கள்மேலிரக் கம்மெழாததெம் பாவமே
(516)
குண்டுநீருறை கோளரீமத யானைகோள்விடுத் தாய்உன்னைக்
கண்டுமாலுறு வோங்களைக்கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல்நுண்மணல் தெள்ளியாம்வளைக் கைகளால்சிர மப்பட்டோம்
தெண்டிரைக்கடற் பள்ளியாய்எங்கள் சிற்றில்வந்து சிதையேலே
(517)
பெய்யுமாமுகில் போல்வண்ணாஉன்றன் பேச்சும்செய்கையும் எங்களை
மையலேற்றி மயக்கவுன்முகம் மாயமந்திரந் தான்கொலோ
நொய்யர்பிள்ளைக ளென்பதற்குன்னை நோவநாங்களு ரைக்கிலோம்
செய்யதாமரைக் கண்ணினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
(518)
வெள்ளைநுண்மணல் கொண்டுசிற்றில் விசித்திரப்பட வீதிவாய்த்
தெள்ளிநாங்களி ழைத்தகோல மழித்தியாகிலும் உன்றன்மேல்
உள்ளமோடி யுருகலல்லால் உரோடமொன்று மிலோங்கண்டாய்
கள்ளமாதவா கேசவாஉன் முகத்தனகண்க ளல்லவே
(519)
முற்று இலாத பிள்ளைகளோம் முலை போந்திலா தோமை நாள்தொறும்
சிற்றில் மேல் இட்டுக் கொண்டு நீ சிறிது உண்டு திண்ணென நாம் அது
சுற்றிலோம், கடலை அடைத்து அரக்- கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசல் ஆக்கிய வேகா! எம்மை வாதியேல்.
(520)
பேதநன்கறி வார்களோடிவை பேசினால்பெரி திஞ்சுவை
யாதுமொன்றறி யாதபிள்ளைக ளோமைநீநலிந் தென்பயன்
ஓதமாகடல் வண்ணாஉன்மண வாட்டிமாரொடு சூழறும்
சேதுபந்தம் திருத்தினாயெங்கள் சிற்றில்வந்து சிதையேலே
(521)
வட்டவாய்ச்சிறுகாதையோடு சிறுசுளகும்மணலுங்கொண்டு
இட்டமாவிளையாடுவோங்களைச் சிற்றிலீடழித்தென்பயன்?
தொட்டுதைத்துநலியேல்கண்டாய் சுடர்ச்சக்கரங்கையிலேந்தினாய்
கட்டியுங்கைத் தாலின்னாமை அறிதியேகடல்கண்ணனே.
(522)
முற்றத்தூடு புகுந்துநின்முகங் காட்டிப்புன்முறு வல்செய்து
சிற்றிலோடெங்கள் சிந்தையும்சிதைக் கக்கடவையோ கோவிந்தா
முற்றமண்ணிடம் தாவிவிண்ணுற நீண்டளந்துகொண் டாய்எம்மைப்
பற்றிமெய்ப்பிணக் கிட்டக்காலிந்தப் பக்கம்நின்றவ ரெஞ்சொல்லார்
(523)
சீதைவாயமுதமுண்டாய் எங்கள்சிற்றில்நீசிதையேலென்று *
வீதிவாய்விளையாடும் அயர்சிறுமியர்மழலைச்சொல்லை *
வேதவாய்த்தொழிலாளர்கள்வாழ் வில்லிபுத்தூர் மன்விட்டுசித்தன்றன் *
கோதைவாய்த்தமிழ்வல்லவர் குறைவின்றிவைகுந்தஞ்சேர்வரே.
