(254)
தழைகளும் தொங்கலும் ததும்பி எங்கும் தண்ணுமை எக்கம்மத் தளிதாழ் பீலி
குழல்களும் கீதமு மாகி எங்கும் கோவிந்தன் வருகின்ற கூட்டம் கண்டு
மழைகொலோ வருகின்ற தென்று சொல்லி மங்கைமார் சாலக வாசல் பற்றி
நுழைவனர் நிற்பன ராகி எங்கும் உள்ளம் விட்டுஊண் மறந்தொழிந் தனரே.
(255)
வல்லிநுண் இதழன்ன ஆடை கொண்டு வசையறத் திருவரை விரித் துடுத்து
பல்லிநுண் பற்றாக உடைவாள் சாத்திப் பணைக்கச் சுந்திப் பலதழை நடுவே
முல்லை நல்நறு மலர்வேங் கைமலர் அணிந்து பல்லா யர்குழாம் நடுவே
எல்லியம் போதாகப் பிள்ளை வரும்எதிர் நின்று அங்கினவளை இழவேன் மினே.
(256)
சுரிகையும் தெறிவில்லும் செண்டு கோலும் மேலாடையும் தோழன் மார்கொண் டோட
ஒருகையால் ஒருவன்தன் தோளை யூன்ற ஆநிரை யினம்மீளக் குறித்த சங்கம்
வருகையில் வாடிய பிள்ளை கண்ணன் மஞ்சளும் மேனியும் வடிவும் கண்டாள்
அருகேநின் றாள்என்பெண் நோக்கிக் கண்டாள் அதுகண்டுஇவ் வூர்ஒன்று புணர்க் கின்றதே.
(257)
குன்றெடுத்து ஆநிரை காத்த பிரான் கோவல னாய்க்குழ லூதி யூதி
கன்றுகள் மேய்த்துத் தன்தோ ழரோட கலந்துடன் வருவானைத் தெருவில்
கண்டு என்றும் இவனையொப் பாரை நங்காய் கண்டறி யேன்ஏடி வந்து காணாய்
ஒன்றும்நில் லாவளை கழன்று துக லேந்திள முலையும்என் வசமல் லவே.
(258)
சுற்றி நின்றுஆ யர்தழை களிடச் சுருள்பங்கி நேத்திரத் தால்அ ணிந்து
பற்றி நின்றுஆ யர்கடைத் தலையே பாடவும் ஆடக்கண் டேன்அன் றிப்பின்
மற்றொரு வர்க்குஎன்னைப் பேச லொட்டேன் மாலிருஞ் சோலைஎம் மாயற் கல்லால்
கொற்றவ னுக்குஇவ ளாமென் றெண்ணிக் கொடுமின் கள்கொடீ ராகில்கோ ழம்பமே.
(259)
சிந்துர மிலங்கத் தன்திரு நெற்றிமேல் திருத்திய கோறம் பும்திருக் குழலும்
அந்தர முழவத் தண்தழைக் காவின்கீழ் வருமாய ரோடுஉடன் வளைகோல் வீச
அந்தமொன் றில்லாத ஆயப் பிள்ளை அறிந்தறிந்து இவ்வீதி போது மாகில்
பந்துகொண் டானென்று வளைத்து வைத்துப் பவளவாய் முறுவலும் காண்போம் தோழீ.
(260)
சாலப்பல் நிரைப்பின் னேதழைக் காவின் கீழ்தன் திருமேனி நின்றொளி திகழ
நீல நல்நறுங் குஞ்சி நேத்திரத் தால ணிந்துபல் லாயர்குழாம் நடுவே
கோலச் செந்தா மரைக்கண் மிளிரக் குழலூதி யிசைபா டிக்குனித்து ஆயரோடு
ஆலித்து வருகின்ற ஆயப் பிள்ளை அழகு கண்டுஎன் மகளயர்க் கின்றதே.
(261)
சிந்துரப் பொடிக்கொண்டு சென்னி யப்பித் திருநாம மிட்டங்கோ ரிலையந் தன்னால்
அந்தர மின்றித் தன்னெறி பங்கியை அழகிய நேத்திரத் தால ணிந்து
இந்திரன் போல்வரு மாயப் பிள்ளை எதிர்நின்றங் கினவளை இழவே லென்ன
சந்தியில் நின்று கண்டீர் நங்கை தன்துகி லொடுசரி வளைகழல் கின்றதே.
(262)
வலங்காதின் மேல்தோன்றிப் பூவ ணிந்து மல்லிகை வனமாலை மெளவல் மாலை
சிலிங்காரத் தால்குழல் தாழ விட்டுத் தீங்குழல் வாய்மடுத் தூதி யூதி
அலங்காரத் தால்வரு மாயப் பிள்ளை அழகுகண்டு என்மகள் ஆசைப் பட்டு
விலங்கிநில் லாதுஎதிர் நின்று கண்டீர் வெள்வளை கழன்று மெய்ம்மெலி கின்றதே.
(263)
விண்ணின் மீதுஅம ரர்கள்விரும் பித்தொழ மிறைத்துஆயர் பாடியில் வீதியூடே
கண்ணங் காலிப்பின் னேஎழுந் தருளக் கண்டுஇளவாய்க் கன்னிமார் காமுற்ற
வண்ணம் வண்டமர் பொழில்புது வையர்கோன் விட்டு சித்தன் சொன்ன மாலைபத்தும்
பண்ணின்பம் வரப்பாடும் பத்த ருள்ளார் பரமான வைகுந்தம் நண்ணுவரே.
