ஏழாந் திருமொழி
(2965)
பிறவித்துயரற ஞானத்துள் நின்று,
துறவிச்சு டர்விளக்கம் தலைப்பெய்வார்,
அறவனை யாழிப்படை யந்தணனை,
மறவியை யின்றி மனத்துவைப் பாரே.
(2966)
வைப்பாம்மருந்தா மடியரை, வல்வினைத்
துப்பாம் புலனைந்தும் துஞ்சக கொடானவன்,
எப்பால் யவர்க்கும் நலத்தா லுயர்ந்துயர்ந்து,
அப்பால வனெங்க ளாயர் கொழுந்தே.
(2967)
ஆயர் கொழுந்தா யவரால் புடையுண்ணும்,
மாயப் பிரானையென் மாணிக்கச் சோதியை,
தூய அமுதைப் பருகிப்பருகி, என்
மாயப் பிறவி மயர்வறுத் தேனே.
(2968)
மயர்வறவென்மனத்தே மன்னினான் றன்னை,
உயர்வினை யேதரும் ஒண்சுடர்க் கற்றையை,
அயர்வில் அமரர்கள் ஆதிக்கொழுந்தை, என்
இசைவினையென்சொல்லி யான்விடுவேனே.
(2969)
விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
தொடுவேசெய்திள ஆய்ச் சியர்க்கண்ணினுள்,
விடவேசெய்து விழிக்கும்பிரானையே.
(2970)
பிரான்பெருநிலங் கீண்டவன், பின்னும்
விராய்மலர்த்துழாய் வேய்ந்தமுடியன்,
மராமரமெய்த மாயவன், என்னுள்
இரானெனில்பின்னை யானொட்டுவேனோ.
(2971)
யானொட்டியென்னுள் இருத்துவ மென்றிலன்,
தானொட்டி வந்தென் தனிநெஞ்சை வஞ்சித்து,
ஊனொட்டி நின்றென் உயிரில் கலந்து, இயல்
வானொட்டு மோஇனி யென்னை நெகிழ்க்கவே.
(2972)
என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே.
(2973)
அமரர் முழுமுத லாகிய ஆதியை,
அமரர்க் கமுதீந்த ஆயர் கொழுந்தை,
அமர அழும்பத் துழாவியென் னாவி,
அமரர்த் தழுவிற் றினிய கலுமோ.
(2974)
அகலில் அகலும் அணுகில் அணுகும்,
புகலு மரியன் பொருவல்ல னெம்மான்,
நிகரில் அவன்புகழ் பாடி யிளைப்பிலம்,
பகலு மிரவும் படிந்து குடைந்தே.
(2975)
குடைந்துவண் டுண்ணும் துழாய்முடி யானை,
அடைந்த தென் குருகூர்ச்சட கோபன்,
மிடைந்த சொல்தொடை யாயிரத்திப்பத்து,
உடைந்து நோய்களை யோடு விக்குமே.
