மூன்றாந் திருமொழி
(2921)
பத்துடை யடியவர்க் கெளியவன், பிறர்களுக் கரிய
வித்தகன் மலர்மகள் விரும்பும்நம் அரும்பெற லடிகள்
மத்துறு கடை வெண்ணெய் களவினில் உரவிடை யாப்புண்டு
எத்திறம் உரலினோ டிணைந்திருந் தேங்கிய எளிவே.
(2922)
எளிவரு மியல்வினன் நிலைவரம் பிலபல பிறப்பாய்,
ஒளிவரு முழு நலம் முதலில கேடில வீடாம்,
தெளிதரும் நிலைமைய தொழிவிலன் முழுவதும், மிறையோன்,
அளிவரு மருளினோ டகத்தனன், புறத்தன னமைந்தே..
(2923)
அமைவுடை யறநெறி முழுவது முயர்வற வுயர்ந்த,
அமைவுடை முதல்கெடல் ஒடிவிடை யறநில மதுவாம்,
அமைவுடை யமரரும் யாவையும் யாவரும் தானாம,
அமைவுடை நாரணன் மாயையை யறிபவர் யாரே?
(2924)
யாருமோர் நிலைமைய னெனவறி வரிய வெம்பெருமான்,
யாருமோர் நிலைமைய னெனவறி வெளியவெம் பெருமான்,
பேருமோ ராயிரம் பிறபல வுடையவெம் பெருமான்,
பேருமோ ருருவமு முளதில்லை யிலதில்லை பிணக்கே.
(2925)
பிணக்கற அறுவகைச் சமயமும் நெறியுள்ளி யுரைத்த,
கணக்கறு நலத்தனன் அந்தமி லாதியம் பகவன்,
வணக்குடைத் தவநெறி வழிநின்று புறநெறி களைகட்டு,
உணக்குமின் பசையற அவனுடை, யுணர்வுகொண் டுணர்ந்தே.
(2926)
உணர்ந்துணர்ந் திழிந்தகன் றுயர்ந்துரு வியந்தவிந்நிலைமை,
உணர்ந்துணர்ந் துணரிலும் இறைநிலையுணர்வரி துயிர்காள்,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் தரியய னரனென்னுமிவரை,
உணர்ந்துணர்ந் துரைத்துரைத் திறைஞ்சுமின் மனப்பட்டதொன்றே.
(2927)
ஒன்றெனப் பலவென அறிவரும் வடிவினுள் நின்ற,
நன்றெழில் நாரணன் நான்முகன் அரனென்னு மிவரை,
ஒன்றநும் மனத்து வைத் துள்ளிநும் இருபசை யறுத்து,
நன்றென நலஞ்செய்வ தவனிடை நம்முடை நாளே.
(2928)
நாளு நின் றடு நமபழ மையங் கொடுவினையுடனே
மாளும், ஓர் குறைவில்லை மனனக மலமறக் கழுவி,
நாளூநந் திருவுடை யடிகள்தம் நலங் கழல் வணங்கி,
மாளுமோ ரிடத்திலும் வணக்கொடு மாள்வது வலமே.
(2929)
வலத்தனன் திரிபுர மெரித்தவ னிடம்பெறத் துந்தித்
தலத்து, எழுதிசைமுகன் படைத்தநல் லுலகமும் தானும்
புலப்பட பின்னும்தன் உலகத்தி லகத்தனன் தானே
சொலப்புகில் இவைபின்னும் வயிற்றுள இவையவன் துயக்கே.
(2930)
துயக்கறு மதியில்நல் ஞானத்துள் அமரரைத் துயக்கும்,
மயக்குடை மாயைகள் வானிலும் பெரியன வல்லன்,
புயற்கரு நிறத்தனன் பெரு நிலங் கடந்தநல் லடிப்போது ,
அயர்ப்பில னலற்றுவன் தழுவுவன் வணங்குவ னமர்ந்தே.
(2931)
அமரர்கள் தொழுதெழ அலைகடல் கடைந்தவன் றன்னை,
அமர்பொழில் வளங்குரு கூர்ச்சடகோபன் குற்றேவல்கள்,
அமர்சுவை யாயிரத் தவற்றினு ளிவைபத்தும் வல்லார்
அமரரோ டுயர்விற்சென் றறுவர்தம் பிறவியஞ் சிறையே.
