இரண்டாந் திருமொழி
(2910)
வீடுமின் முற்றவும் வீடுசெய்து உம்முயிர்
வீடுடை யானிடை வீடுசெய்ம்மினே.
(2911)
மின்னின் நிலையில–மன்னுயி ராக்கைகள்
என்னு மிடத்து இறை–உன்னுமின் நீரே.
(2912)
நீர்நும தென்றிவை, வேர்முதல் மாய்த்து இறை
சேர்மின் உயிர்க்கு அதனேர்நிறை யில்லே.
(2913)
இல்லது முள்ளதும் அல்ல தவனுரு
எல்லையி லந்நலம் புல்குபற் றற்றே.
(2914)
அற்றது பற்றெனில் உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில் அற்றிறை பற்றே.
(2915)
பற்றில னீசனும் முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன் முற்றி லடங்கே.
(2916)
அடங்கெழில் சம்பத்து அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று–அடங்குக வுள்ளே.
(2917)
உள்ள முரைசெயல் உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை யுள்ளிலொ டுங்கே.
(2918)
ஒடுங்க அவன்கண் ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை விடும்பொழு தெண்ணே.
(2919)
எண்பெருக் கந்நலத்து ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன் திண்கழல் சேரே.
(2920)
சேர்த்தடத் தென்குரு கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து ஓர்த்தவிப் பத்தே.
