(2292)
நன்கோது நால்வேதத் துள்ளான் நறவிரியும்
பொங்கோ தருவிப் புனல்வண்ணன், – சங்கோதப்
பாற்கடலான் பாம்பணையின் மேலான், பயின்றுரைப்பார்
நூற்கடலான் நுண்ணறிவி னான்.
(2293)
அறிவென்னும் தாள்கொளுவி ஐம்புலனும் தம்மில்,
செறிவென்னும் திண்கதவம் செம்மி, – மறையென்றும்
நன்கோதி நன்குணர்வார் காண்பரே, நாடோறும்
பைங்கோத வண்ணன் படி.
(2294)
படிவட்டத் தாமரை பண்டுலகம் நீரேற்று,
அடிவட்டத் தாலளப்ப நீண்ட – முடிவட்டம்,
ஆகாய மூடறுத் தண்டம்போய் நீண்டதே,
மாகாய மாய்நின்ற மாற்கு.
(2295)
மாற்பால் மனம்சுழிப்ப மங்கையர்தோள் கைவிட்டு,
நூற்பால் மனம்வைக்க நொய்விதாம்,- நாற்பால
வேதத்தான் வேங்கடத்தான் விண்ணோர் முடிதோயும்,
பாதத்தான் பாதம் பணிந்து.
(2296)
பணிந்துயர்ந்த பெளவப் படுதிரைகள் மோத,
பணிந்த பணிமணிக ளாலே – அணிந்து,அங்
கனந்தன் அணைக்கிடக்கும் அம்மான், அடியேன்
மனந்த னணைக்கிடக்கும் வந்து.
(2297)
வந்துதைத்த வெண்டிரைகள் செம்பவள வெண்முத்தம்
அந்தி விளக்கும் அணிவிளக் காம், – எந்தை
ஒருவல்லித் தாமரையாள் ஒன்றியசீர் மார்வன்,
திருவல்லிக் கேணியான் சென்று.
(2298)
சென்றநாள் செல்லாத செங்கண்மா லெங்கள்மால்,
என்றநா ளெந்நாளும் நாளாகும், – என்றும்
இறவாத எந்தை இணையடிக்கே யாளாய்,
மறவாது வாழ்த்துகவென் வாய்.
(2299)
வாய்மொழிந்து வாமனனாய் மாவலிபால், மூவடிமண்
நீயளந்து கொண்ட நெடுமாலே, – தாவியநின் எஞ்சா
இணையடிக்கே ஏழ்பிறப்பும் ஆளாகி,
அஞ்சா திருக்க அருள்.
(2300)
அருளா தொழியுமே ஆலிலைமேல், அன்று
தெருளாத பிள்ளையாய்ச் சேர்ந்தான், இருளாத
சிந்தையராய்ச் சேவடிக்கே செம்மலர்தூய்க் கைதொழுது,
முந்தையராய் நிற்பார்க்கு முன்.
(2301)
முன்னுலக முண்டுமிழ்ந்தாய்க்கு, அவ்வுலக
மீரடியால் பின்னளந்து கோடல் பெரிதொன்றே? – என்னே
திருமாலே செங்க ணெடியானே, எங்கள்
பெருமானே நீயிதனைப் பேசு.