(2635)
மனவாளும் ஓரைவர் வன்குறும்பர் தம்மை,
சினமாள்வித் தோரிடத்தே சேர்த்து-புனமேய
தண்டுழா யானடியே தான்காணும் அஃதன்றே,
வண்டுழாம் சீராக்கு மாண்பு.
(2636)
மாண்பாவித் தஞ்ஞான்று மண்ணிரந்தான், மாயவள்நஞ்
சூண்பாவித் துண்டான தோருருவம்,-காண்பான்நங்
கண்ணவா மற்றொன்று காணுறா, சீர்பரவா
துண்ணவாய் தானுறுமோ ஒன்று.
(2637)
ஒன்றுண்டு செங்கண்மால். யானுரைப்பது,
உன்னடியார்க் கெஞ்செய்வ னென்றே யிரித்திநீ,-நின்புகழில்
வைகும்தம் சிந்தையிலும் மற்றினிதோ, நீயவர்க்கு
வைகுந்த மென்றருளும் வான்.
(2638)
வானோ? மறிகடலோ? மாருதமோ? தீயகமோ?
கானோ? ஒருங் கிற்றும் கண்டிலமால்,- ஆனீன்ற
கன்றுயரத் தாமெறிந்து காயுதிர்த்தார் தாள்பணிந்தோம்,
வன்துயரை யாவா! மருங்கு.
(2639)
மருங்கோத மோதும் மணிநா கணையார்,
மருங்கே வரவரிய ரேலும்,-ஒருங் கே
எமக்கவரைக் காணலா மெப்போது முள்ளால்,
மனக்கவலை தீர்ப்பார் வரவு.
(2640)
வரவாறொன் றில்லையால் வாழ்வினிதால், எல்லே!
ஒருவாறொருவன் புகவாறு,-உருமாறும்
ஆயவர்தாம் சேயவர்தாம் அன்றுலகம் தாயவர்தாம்,
மாயவர்தாம் காட்டும் வழி.
(2641)
வழித்தங்கு வல்வினையை மாற்றானோ நெஞ்சே,
தழீஇக்கொண்டு போரவுணன் றன்னை,-சுழித்தெங்கும்
தாழ்விடங்கள் பற்றிப் புலால்வெள்ளம் தானுகள,
வாழ்வடங்க மார்விடந்த மால்.
(2642)
மாலே. படிச்சோதி மாற்றேல், இனியுனது
பாலேபோல் சீரில் புழுத்தொழிந்தேன்,-மேலால்
பிறப்பின்மை பெற்றடிக்கீழ்க் குற்றேவ லன்று,
மறப்பின்மை யான்வேண்டும் மாடு.
(2643)
மாடே வரப்பெறுவ ராமென்றே, வல்வினையார்
காடானும் ஆதானும் கைகொள்ளார்,- ஊடேபோய்ப்
போரோதம் சிந்துதிரைக் கண்வளரும், பேராளன்
பேரோதச் சிந்திக்கப் பேர்ந்து.
(2644)
பேர்ந்தொன்று நோக்காது பின்னிற்பாய் நில்லாப்பாய்
ஈன்துழாய் மாயனையே என்னெஞ்சே,- பேர்ந்தெங்கும்
தொல்லைமா வெந்நரகில் சேராமல் காப்பதற்கு
இல்லைகாண் மற்றோர் இறை.