(2432)
எனக்காவா ராரொரு வரேஎம் பெருமான்
தனக்காவான் தானேமற் றல்லால -புனக்காயா
வண்ணனே. உன்னைப் பிறரறியார்,என்மதிக்கு
விண்ணெல்லா முண்டோ விலை.
(2433)
விலைக்காட் படுவர் விசாதியேற் றுண்பர்,
தலைக்காட் பலிதிரிவர் தக்கோர் – முலைக்கால்
விடமுண்ட வேந்தனையே வேறாஏத் தாதார்,
கடமுண்டார் கல்லா தவர்.
(2434)
கல்லா தவரிலங்கை கட்டழித்த, காகுத்தன்
அல்லா லொருதெய்வம் யானிலேன், – பொல்லாத
தேவரை தேவரல் லாரை, திருவில்லாத்
தேவரைத் தேறல்மின் தேவு.
(2435)
தேவராய் நிற்குமத் தேவும்,அத் தேவரில்
மூவராய் நிற்கும் முதுபுணர்ப்பும், – யாவராய்
நிற்கின்ற தெல்லாம் நெடுமாலென் றோராதார்,
கற்கின்ற தெல்லாம் கடை.
(2436)
கடைநின் றமரர் கழல்தொழுது நாளும்
இடைநின்ற இன்பத்த ராவர், – புடைநின்ற
நீரோத மேனி நெடுமாலே, நின்னடியை
யாரோத வல்லா ரவர்.
(2437)
அவரிவரென் றில்லை அனங்கவேள் தாதைக்கு,
எவரு மெதிரில்லை கண்டீர், – உவரிக்
கடல்நஞ்ச முண்டான் கடனென்று, வாணற்
குடனின்று தோற்றா னொருங்கு.
(2438)
ஒருங் கிருந்த நல்வினையும் தீவினையு மாவான்,
பெருங்குருந் தம் சாய்த்தவனே பேசில், – மருங்கிருந்த
வானவர்தாம் தானவர்தாம் தாரகைதான், என்னெஞ்சம்
ஆனவர்தா மல்லாக தென்.
(2439)
என்னெஞ்ச மேயான் இருள்நீக்கி யெம்பிரான்,
மன்னஞ்ச முன்னொருநாள் மண்ணளந்தான், – என்னெஞ்ச
மேயானை யில்லா விடையேற்றான், வெவ்வினைதீர்த்
தாயனுக் காக்கினேன் அன்பு.
(2440)
அன்பாவாய் ஆரமுதம் ஆவாய், அடியேனுக்
கின்பாவாய் எல்லாமும் நீயாவாய், – பொன்பாவை
கேள்வா கிளரொளியென கேசவனே, கேடின்றி
ஆள்வாய்க் கடியேன்நான் ஆள்.
(2441)
ஆட்பார்த் துழிதருவாய் கண்டுகொள் என்று,நின்
தாட்பார்த் துழிதருவேன் தன்மைய – கேட்பார்க்
கரும்பொருளாய் நின்ற அரங்கனே, உன்னை
விரும்புவதே விள்ளேன் மனம்.