(2568)
சுருங்குறி வெண்ணை தொடுவுண்ட கள்வனை, வையமுற்றும்
ஒருங்குர வுண்ட பெருவயிற் றாளனை, மாவலிமாட்டு
இருங்குறள் ஆகி இசையவோர் மூவடி வேண்டிச்சென்ற
பெருங்கிறி யானையல் லால்,அடி யேன்நெஞ்சம் பேணலதே
(2569)
பேணல மில்லா அரக்கர்முந் நீர பெரும்பதி வாய்,
நீணகர் நீளெரி வைத்தரு ளாயென்று, நின்னை விண்ணோர்
தாணிலந் தோய்ந்து தொழுவர்நின் மூர்த்திபல் கூற்றிலொன்று
காணலு மாங்கொலன் றே,வைகல் மாலையுங் காலையுமே.
(2570)
காலைவெய் யோற்குமுன் னோட்டுக் கொடுத்தகங் குற்குறும்பர்
மாலைவெய் யோன்பட வையகம் பாவுவர், அன்னகண்டும்
காலைநன் ஞானத் துறைபடிந் தாடிக்கண் போது,செய்து
மாலைநன் னாவில்கொள் ளார்,நினை யாரவன் மைப்படியே.
(2571)
மைப்படி மேனியும் செந்தா மரைக்கண்ணும் வைதிகரே,
மெய்ப்படி யலுன் திருவடி சூடும் தகைமையினார்,
எப்படி யூர மிலைக்கக் குருட்டா மிலைக்குமென்னும்
அப்படி யானும்சொன் னேன்,அடி யேன்மற்று யாதென்பனே?
(2572)
யாதானு மோராக் கையில்புக்கு,அங்காப்புண்டும் ஆப்பவிழ்ந்தும்
மூதாவி யில்தடு மாறும் உயிர்முன்னமே, அதனால்
யாதானும்பற்றி நீங்கும் விரதத்தை நல்வீடுசெய்யும்
மாதா வினைப்பிது வை,திரு மாலை வணங்குவனே.
(2573)
வணங்கும் துறைகள் பலபல ஆக்கி, மதிவிகற்பால்
பிணங்கும் சமயம் பலபல ஆக்கி, அவையவைதோ
றணங்கும் பலபல ஆக் கிநின் மூர்த்தி பரப்பிவைத்தாய்
இணங்குநின் னோரையில் லாய்,நின்கண் வேட்கை எழுவிப்பனே.
(2574)
எழுவதும் மீண்டே படுவதும் பட்டு,எனை யூழிகள்போய்க்
கழிவதும் கண்டுகண் டெள்கலல் லால்,இமை யோர்கள்குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக்கண் ணாரக்கண்டு
கழிவதோர் காதலுற் றார்க்கும்,உண் டோகண்கள் துஞ்சுதலே?
(2575)
துஞ்சா முனிவரும் அல்லா தவருந் தொடரநின்ற,
எஞ்சாப் பிறவி இடர்கடி வான்,இமை யோர்தமக்கும்
தஞ்சார்வி லாத தனிப்பெரு மூர்த்திதன் மாயம்செவ்வே
நெஞ்சால் நினைப்பரி தால்,வெண்ணெ யூணென்னும் ஈனச்சொல்லே.
(2576)
ஈனச்சொல் லாயினு மாக, எறிதிரை வையம்முற்றும்
ஏனத் துருவாய் இடந்தபி ரான்,இருங் கற்பகம்சேர்
வானத் தவர்க்குமல் லாதவர்க் கும்மற்றெல் லாயவர்க்கும்
ஞானப் பிரானையல் லாலில்லை நான் கண்ட நல்லதுவே
(2577)
நல்லார் நவில்குரு கூர்நக ரான்,திரு மால்திருப்பேர்
வல்லார் அடிக்கண்ணி சூடிய மாறன்விண் ணப்பஞ்செய்த
சொல்லார் தொடையலிந் _றும்வல் லார்அழுந் தார்பிறப்பாம்
பொல்லா அருவினை மாயவன் சேற்றள்ளல் பொய்ந்நிலத்தே