(202)
வெண்ணெய் விழுங்கி வெறுங்கலத்தை வெற்பிடை யிட்டுஅத னோசை கேட்கும்
கண்ண பிரான்கற்ற கல்வி தன்னைக் காக்ககில் லோம்உன் மகனைக் காவாய்
புண்ணில் புளிப்பெய்தா லொக்கும் தீமை புரைபுரை யால்இவை செய்ய வல்ல
அண்ணற்கண் ணானோர் மகனைப் பெற்ற அசோதை நங்காய்உன் மகனைக் கூவாய்.
(203)
வருக வருக வருக இங்கே வாமன நம்பீ வருக இங்கே
கரிய குழல்செய்ய வாய்மு கத்துக் காகுத்த நம்பீ வருக இங்கே
அரிய னிவன்எனக்கு இன்று நங்காய் அஞ்சன வண்ணா அசல கத்தார்
பரிபவம் பேசத் தரிக்க கில்லேன் பாவியே னுக்குஇங்கே போத ராயே.
(204)
திருவுடைப் பிள்ளை தான்தீய வாறு தேக்கமொன் றுமிலன் தேசு டையன்
உருக வைத்த குடத்தொடு வெண்ணெய் உறிஞ்சி யுடைத்திட்டுப் போந்து நின்றான்
அருகிருந்தார் தம்மை அநியாயம் செய்வது தான்வ ழக்கோ அசோதாய்
வருகவென்று உன்மகன் தன்னைக் கூவாய் வாழ வொட்டான் மதுசூ தனனே.
(205)
கொண்டல்வண் ணாஇங்கே போத ராயே கோயிற்பிள் ளாய்இங்கே போத ராயே
தெண்திரை சூழ்திருப் பேர்க்கி டந்த திருநார ணாஇங்கே போத ராயே
உண்டுவந் தேன்அம்ம னென்று சொல்லி ஓடி அகம்புக ஆய்ச்சி தானும்
கண்டெதி ரேசென் றெடுத்துக் கொள்ளக் கண்ணபி ரான்கற்ற கல்வி தானே.
(206)
பாலைக் கறந்துஅடுப் பேற வைத்துப் பல்வளை யாள்என் மக ளிருப்ப
மேலை யகத்தே நெருப்பு வேண்டிச் சென்று இறைப் பொழுதுஅங்கே பேசி நின்றேன்
சாளக் கிராம முடைய நம்பி சாய்த்துப் பருகிட்டுப் போந்து நின்றான்
ஆலைக்கரும்பின் மொழி யனைய அசோதைநங் காய்உன் மகனைக் கூவாய்.
(207)
போதர்கண் டாய்இங்கே போதர் கண்டாய் போதரே னென்னாதே போதர் கண்டாய்
ஏதேனும் சொல்லி அசல கத்தார் ஏதேனும் பேசநான் கேட்க மட்டேன்
கோது கலமுடைக் குட்ட னேயா குன்றெடுத் தாய்குட மாடுகூத்தா
வேதப் பொருளே என்வேங்கடவா வித்தக னேஇங்கே போத ராயே.
(208)
செந்நெல் அரிசி சிறு பருப்புச் செய்தஅக் காரம் நறுநெய் பாலால்
பன்னிரண் டுதிரு வோணம் அட்டேன் பண்டும் இப்பிள் ளைபரி சறிவன்
இன்ன முகப்பன்நா னென்று சொல்லி எல்லாம் விழுங்கிட்டுப் போந்து நின்றான்
உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
(209)
கேசவ னேஇங்கே போத ராயே கில்லேனென் னாதுஇங்கே போத ராயே
நேச மிலாதா ரகத்தி ருந்து நீவிளை யாடாதே போத ராயே
தூசனம் சொல்லும் தொழுத்தை மாரும் தொண்டரும் நின்ற விடத்தில் நின்று
தாய்சொல்லுக் கொள்வது தன்மம் கண்டாய் தாமோத ராஇங்கே போத ராயே.
(210)
கன்ன லிலட்டுவத் தோடு சீடை காரெள்ளி னுண்டை கலத்தி லிட்டு
என்னக மென்றுநான் வைத்துப் போந்தேன் இவன்புக்கு அவற்றைப் பெறுத்திப் போந்தான்
பின்னும் அகம்புக்கு உறியை நோக்கிப் பிறங்கொளி வெண்ணெயும் சோதிக் கின்றான்
உன்மகன் தன்னை யசோதை நங்காய் கூவிக் கொள்ளாய் இவையும் சிலவே.
(211)
சொல்லி லரசிப் படுதி நங்காய் சுழலு டையன்உன் பிள்ளை தானே
இல்லம் புகுந்துஎன் மகளைக் கூவிக் கையில் வளையைக் கழற்றிக் கொண்டு
கொல்லையில் நின்றும் கொணர்ந்து விற்ற அங்கொருத் திக்குஅவ் வளைகொ டுத்து
நல்லன நாவற் பழங்கள் கொண்டு நானல் லேனென்று சிரிக்கின்றானே.
(212)
வண்டுகளித் திரைக்கும் பொழில்சூழ் வருபுனல் காவிரித் தென்ன ரங்கன்
பண்டவன் செய்த கிரீடை யெல்லாம் பட்டர் பிரான்விட்டு சித்தன் பாடல்
கொண்டிவை பாடிக் குனிக்க வல்லார் கோவிந்தன் தன்அடி யார்க ளாகி
எண்திசைக் கும்விளக் காகி நிற்பார் இணையடி என்தலை மேல னவே.
