(862)
வைதுநின்னை வல்லவாப ழித்தவர்க்கும் மாறில்போர்
செய்துநின்னை செற்றதீயில் வெந்தவர்க்கும்
வந்துன்னை எய்தலாகு மென்பராத லாலெம்மாய
நாயினேன் செய்தகுற்றம் நற்றமாக வேகொள்ஞால நாதனே.
(863)
வாள்களாகி நாள்கள்செல்ல நோய்மைகுன்றி மூப்பெய்தி
மாளுநாள தாதலால்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஆளதாகு நன்மையென்று நன்குணர்ந்த தன்றியும்
மீள்விலாத போகம்நல்க வேண்டும்மால பாதமே.
(864)
சலங்கலந்த செஞ்சடைக்க றுத்தகண்டன் வெண்டலைப்
புலன்கலங்க வுண்டபாத கத்தன்வன்து யர்கெட
அலங்கல்மார்வில் வாசநீர்கொ டுத்தவன்ன டுத்தசீர்
நலங்கொள்மாலை நண்ணும்வண்ண மெண்ணுவாழி நெஞ்சமே.
(865)
ஈனமாய வெட்டுநீக்கி யேதமின்றி மீதுபோய்
வானமாள வல்லையேல்வ ணங்கிவாழ்த்தென் நெஞ்சமே
ஞானமாகி ஞாயிறாகி ஞாலமுற்று மோரெயிற்று
ஏனமாயி டந்தமூர்த்தி யெந்தைபாத மெண்ணியே
(866)
அத்தனாகி யன்னையாகி யாளுமெம்பி ரானுமாய்
ஒத்தொவ்வாத பல்பிறப்பொ ழித்துநம்மை யாட்கொள்வான்
முத்தனார்மு குந்தனார்பு குந்துநம்முள் மேவினார்
எத்தினாலி டர்க்கடல்கி டத்தியேழை நெஞ்சமே.
(867)
மாறுசெய்த வாளரக்கன் நாளுலப்ப அன்றிலங்கை
நீறுசெய்து சென்றுகொன்று வென்றிகொண்ட வீரனார்
வேறுசெய்து தம்முளென்னை வைத்திடாமை யால்நமன்
கூறுசெய்து கொண்டிறந்த குற்றமெண்ண வல்லனே.
(868)
அச்சம்நோயொ டல்லல்பல்பி றப்புவாய மூப்பிவை
வைத்தசிந்தை வைத்தவாக்கை மாற்றிவானி லேற்றுவான்
அச்சுதன நந்தகீர்த்தி யாதியந்த மில்லவன்
நச்சுநாக ணைக்கிடந்த நாதன்வேத கீதனே.
(869)
சொல்லினும்தொ ழிற்கணும்தொ டக்கறாத வன்பினும்
அல்லுநன்ப கலினோடு மானமாலை காலையும்
அல்லிநாண்ம லர்க்கிழத்தி நாத பாத போதினை
புல்லியுள்ளம் விள்விலாது பூண்டுமீண்ட தில்லையே.
(870)
பொன்னிசூழ ரங்கமேய பூவைவண்ணமாயகேள்
என்னதாவி யென்னும் வல்வினையினுள்கொ ழுந்தெழுந்து
உன்னபாத மென்னநின்ற வொண்சுடர்க்கொ ழுமலர்
மன்னவந்து பூண்டுவாட்ட மின்றுயெங்கும் நின்றதே
(871)
இயக்கறாத பல்பிறப்பி லென்னைமாற்றி யின்றுவந்து
உயக்கொள்மேக வண்ணன்நண்ணி யென்னிலாய தன்னுளே
மயக்கினான்றன் மன்னுசோதி யாதலாலென் னாவிதான்
இயக்கெலாம றுத்தறாத வின்பவீடு பெற்றதே