(3924)
சார்வேதவ நெறிக்குத் தாமோதரன் தாள்தள்,
கார்மேக வண்ணன் கமல நயனத்தன்,
நீர்வானம் மண்ணெர்கா லாய்நின்ற நேமியான்,
பேர்வா னவர்கள் பிதற்றும் பெரு மையனே.
(3925)
பெருமையனே வானத் திமையோர்க்கும் காண்டற்
கருமையனே ஆகத் தணையாதார்க்கு என்றும்
திருமெய் யுறைகின்ற செங்கண்மால் நாளும்
இருமை வினைகடிந்திங்கு என்னையாள் கின்றானே.
(3926)
ஆள்கின்றா னாழியான் ஆரால் குறைவுடையம்?
மீள்கின்ற தில்லைப் பிறவித் துய ர்கடிந்தோம்,
வாள்கெண்டையொண்கண் மடப்பின்னை தன்கேள்வன்,
தாள்கண்டு கொண்டு என் தலைமேல் புனைந்தேனே.
(3927)
தலைமேல் புனைந்தேன் சரணங்கள் ஆலின்
இலைமேல் துயின்றான் இமையோர் வணங்க
மலைமேல்தான் நின்றென் மனத்து ளிருந்தானை
நிலைபேர்க்க லாகாமை நிச்சித் திருந்தேனே.
(3928)
நிச்சித் திருந்தேனென் நெஞ்சம் கழியாமை
கைச்சக் கரத்தண்ணல் கள்வம் பெரிதுடையன்
மெச்சப் படான்பிறர்க்கு மெய்போலும் பொய்வல்லன்
நச்சப் படும்நமக்கு நாகத் தணையானே.
(3929)
நாகத் தணையானை நாள்தோறும் ஞானத்தால்
ஆகத் தணைப்பார்க்கு அருள்செய்யும் அம்மானை
மாகத் திள மதியம் சேரும் சடையானை
பாகத்து வைத்தான் தன் பாதம் பணிந்தேனே.
(3930)
பணிநெஞ்சே! நாளும் பரம பரம்பரனை
பிணியொன்றும் சாரா பிறவி கெடுத்தாளும்
மணிநின்ற சோதி மதுசூதன் என்னம்மான்
அணிநின்ற செம்பொன் அடலாழி யானே.
(3931)
ஆழியா னாழி யமரர்க்கும் அப்பாலான் ஊழியா
னூழி படைத்தான் நிரைமேய்த்தான்
பாழியந் தோளால் வரையெடுத்தான் பாதங்கள்
வாழியென் நெஞ்சே! மறவாது வாழ்கண்டாய்.
(3932)
கண்டேன் கமல மலர்ப் பாதம், காண்டதுமே,
விண்டே ஒழிந்த வினையாயின் எல்லாம்,
தொண்டே செய்து, என்று
தொழுது வழியொழுக,
பண்டே பரமன் பணித்த பணிவகையே.
(3933)
வகையால் மனமொன்றி மாதவனை நாளும்
புகையால் விளக்கால் புதுமலரால் நீரால்
திகைதோ றமரர்கள் சென்றிறைஞ்ச நின்ற
தகையான் சரணம் தமர்கடகோர் பற்றே.
(3934)
பற்றென்று பற்றிப் பரம பரமபரனை
மற்றிண்டோள் மாலை வழுதி வளநாடன்
சொற்றொடையந் தாதியோ ராயிரத்து ளிப்பத்தும்
கற்றார்க்கோர் பற்றாகும் கண்ணன் கழலிணையே.