முதல் திருமொழி
(1952)
குன்ற மொன்றெடுத் தேந்தி,
மாமழை அன்று காத்தவம் மான்,
அ ரக்கரை வென்ற வில்லியார் வீர மேகொலோ,
தென்றல் வந்துதீ வீசு மென்செய்கேன்.
(1953)
காரும் வார்பனிக் கடலும் அன்னவன்,
தாரு மார்வமும் கண்ட தண்டமோ,
சோரு மாமுகில் துளியி னூடுவந்து ஈர
வாடைதான் ஈரு மென்னையே.
(1954)
சங்கு மாமையும் தளரு மேனிமேல்,
திங்கள் வெங்கதிர் சீறு மென்செய்கேன்,
பொங்கு வெண்டிரைப் புணரி வண்ணனார்,
கொங்க லார்ந்ததார் கூவு மென்னையே.
(1955)
அங்கொ ராய்க்குலத் துள்வ ளர்ந்துசென்று,
அங்கொர் தாயுரு வாகி வந்தவள்,
கொங்கை நன்சுண்ட கோயின் மைகொலோ,
திங்கள் வெங்கதிர் சீறு கின்றதே.
(1956)
அங்கொ ராளரி யாய்,அவுணனைப்
பங்க மாவிரு கூறு செய்தவன்,
மங்குல் மாமதி வாங்க வேகொலோ
பொங்கு மாகடல் புலம்பு கின்றதே.
(1957)
சென்று வார்சிலை வளைத்துஇ லங்கையை,
வென்ற வில்லியார் வீர மேகொலோ,
முன்றில் பெண்ணைமேல் முளரிக் கூட்டகத்து,
அன்றி லின்குரல் அடரு மென்னையே.
(1958)
பூவை வண்ணனார் புள்ளின் மேல்வர,
மேவி நின்றுநான் கண்ட தண்டமோ,
வீவி லைங்கணை வில்லி யம்புகோத்து,
ஆவி யேயிலக் காக எய்வதே.
(1959)
மால்இ னந்துழாய் வருமென் னெஞ்சகம்,
மாலின் அந்துழாய் வந்தென் னுள்புக,
கோல வாடையும் கொண்டு வந்தது,
ஓர் ஆலி வந்ததால் அரிது காவலே.
(1960)
கொண்டை யொண்கணும் துயிலும்,
என்நிறம் பண்டு பண்டுபோ லொக்கும்,
மிக்கசீர்த் தொண்ட ரிட்டபூந் துளவின் வாசமே,
வண்டு கொண்டுவந் தூது மாகிலே.
(1961)
அன்று பாரதத் தைவர் தூதனாய்,
சென்ற மாயனைச் செங்கண் மாலினை,
மன்றி லார்ப்புகழ் மங்கை வாள்கலி
கன்றி,சொல்வல்லார்க் கல்ல லில்லையே.
