இரண்டாந் திருமொழி
(2062)
பட்டுடுக்கும் அயர்ந்திரங்கும் பாவை பேணாள் பனிநெடுங்கண் ணீர்ததும்பப் பள்ளி கொள்ளாள்,
எட்டனைப்போ தெங்குடங்கால் இருக்க கில்லாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்
மட்டுவிக்கி மணிவண்டு முரலும் கூந்தல் மடமானை இதுசெய்தார் தம்மை, மெய்யே
கட்டுவிச்சி சொல், என்னச் சொன்னாள் நங்காய் கடல்வண்ண ரிதுசெய்தார் காப்பா ராரே?
(2063)
நெஞ்சுருகிக் கண்பனிப்ப நிற்கும் சோரும் நெடிதுயிர்க்கும் உண்டறியாள் உறக்கம் பேணாள்,
நஞ்சரவில் துயிலமர்ந்த நம்பீ என்னும் வம்பார்பூம் வயலாலி மைந்தா என்னும்,
அஞ்சிறைய புட்கொடியே யாடும் பாடும் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
எஞ்சிற கின் கீழடங்காப் பெண்ணைப் பெற்றேன் இருநிலத்து ஓர்பழிபடைத் தேன்ஏ பாவமே.
(2064)
கல்லெடுத்துக் கல்மாரி காத்தாய் என்றும் காமருபூங் கச்சியூ ரகத்தாய். என்றும்,
வில்லிறுத்து மெல்லியல் தோள் தோய்ந்தாய் என்றும் வெஃகாவில் துயிலம ர்ந்த வேந்தே. என்றும்,
அல்லடர்த்து மல்லரையன் றட் டாய் என்றும், மாகீண்ட கத்தலத்தென் மைந்தா என்றும்,
சொல்லெடுத்துத் தங்கிளியைச் சொல்லே என்று துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
(2065)
முளைக்கதிரைக் குறுங்குடியுள் முகிலை மூவா மூவுலகும் கடந்தப்பால் முதலாய் நின்ற,
அளப்பரிய ஆரமு தை அரங்கம் மேய அந்தணனை அந்தணர்தம் சிந்தை யானை,
விளக்கொளியை மரகதத்தைத் திருத்தண் காவில் வெஃகாவில் திருமாலைப் பாடக் கேட்டு
வளர்த்ததனால் பயன்பெற்றேன் வருக என்று மடக்கிளியைக் கைகூப்பி வங்கி னாளே.
(2066)
கல்லுயர்ந்த நெடுமதிள்சூழ் கச்சி மேய களிறென்றும் கடல்கிடந்த கனியே என்றும்,
அல்லியம்பூ மலர்ப்பொய்கைப் பழன வேலி அணியழுந்தூர் நின்றுகந்த அம்மான் என்றும்,
சொல்லுயர்ந்த நெடுவீணை முலைமேல் தாங்கித் தூமுறுவல் நகையிறையே தோன்ற நக்கு,
மெல்விரல்கள் சிவப்பெய்தத் தடவி யாங்கே மென்கிளிபோல் மிகமிழற்றும் என்பே தையே.
(2067)
கன்றுமேய்த் தினிதுகந்த காளாய். என்றும், கடிபொழில்சூழ் கணபுரத்¦ தன் கனியே என்றும்,
மன்றமரக் கூத்தாடி மகிழ்ந்தாய் என்றும்,வடதிருவேங் கடம்மேய மைந்தா என்றும்,
வென்றசுரர் குலங்களைந்த வேந்தே என்றும், விரிபொழில்சூழ் திருநறையூர் நின்றாய் என்றும்,
துன்றுகுழல் கருநிறத்தென் துணையே என்றும் துணைமுலைமேல் துளிசோரச் சோர்க்கின் றாளே.
(2068)
பொங்கார்மெல் லிளங்கொங்கை பொன்னே பூப்பப் பொருகயல்கண் ணீரரும்பப் போந்து நின்று
செங்கால மடப்புறவம் பெடைக்குப் பேசும் சிறுகுரலுக் குடலுருகிச் சிந்தித்து, ஆங்கே
தண்காலும் தண்குடந்தை நகரும் பாடித் தண்கோவ லூர்ப்பாடி யாடக் கேட்டு,
நங்காய் நங் குடிக்கிதுவோ நன்மை? என்ன நறையூரும் பாடுவாள் நவில்கின் றாளே.
(2069)
கார்வண்ணம் திருமேனி கண்ணும் வாயும் கைத்தலமும் அடியிணையும் கமல வண்ணம்,
பார்வண்ண மடமங்கை பித்தர் பித்தர் பனிமலர்மேல் பாவைக்குப் பாவம் செய்தேன்,
ஏர்வண்ண என்பேதை எஞ்சொல் கேளாள் எம்பெருமான் திருவரங்க மெங்கே? என்னும்,
நீர்வண்ணன் நீர்மலைக்கே போவேன் என்னும் இதுவன்றோ நிறையழிந்தார் நிற்கு மாறே?
(2070)
முற்றாரா வனமுலையாள் பாவை மாயன் மொய்யகலத் துள்ளிருப்பாள் அஃதும் கண்டும்
அற்றாள்,தன் நிறையழிந்தாள் ஆவிக் கின்றாள் அணியரங்க மாடுதுமோ தோழீ என்னும்,
பெற்றேன்வாய்ச் சொல்லிறையும் பேசக் கேளாள் பேர்ப்பாடித் தண்குடந்தை நகரும் பாடி,
பொற்றாம ரைக்கயம்நீ ராடப் போனாள் பொருவற்றா ளென்மகள்உம் பொன்னும் அஃதே.
(2071)
தோராளும் வாளரக்கன் செல்வம் மாளத் தென்னிலங்கை முன்மலங்கச் செந்தீ ஒல்கி,
பேராள னாயிரம் வாணன் மாளப் பொருகடலை யரண்கடந்து புக்கு மிக்க
பாராளன், பாரிடந்து பாரை யுண்டு பாருமிழ்ந்து பாரளந்து பாரை யாண்ட
பேராளன், பேரோதும் பெண்ணை மண்மேல் பெருந்தவத்தள் என்றல்லால் பேச லாமே?