முதல் திருமொழி
(2052)
மின்னுருவாய் முன்னுருவில் வேதம் நான்காய் விளக்கொளியாய் முளைத்தெழுந்த திங்கள் தானாய்,
பின்னுருவாய் முன்னுருவில் பிணிமூப் பில்லாப் பிறப்பிலியாய் இறப்பதற்கே எண்ணாது, எண்ணும்
பொன்னுருவாய் மணியுருவில் பூதம் ஐந்தாய்ப் புனலுருவாய் அனலுருவில் திகழுஞ் சோதி,
தன்னுருவாய் என்னுருவில் நின்ற எந்தை தளிர்ப்புரையும் திருவடி யென்தலை மேலவே.
(2053)
பாருருவில் நீரெரிகால் விசும்பு மாகிப் பல்வேறு சமயமுமாய்ப் பரந்து நின்ற,
ஏருருவில் மூவருமே யென்ன நின்ற, இமையவர்தந் திருவுருவே றெண்ணும் போது,
ஓருருவம் பொன்னுருவம் ஒன்று செந்தீ ஒன்றுமா கடலுருவம் ஒத்து நின்ற,
மூவுருவும் கண்டபோ தொன்றாம் சோதி முகிலுருவம் எம்மடிகள் உருவந் தானே.
(2054)
திருவடிவில் கருநெடுமால் சேயன் என்றும திரேதைக்கண் வளையுருவாய்த் திகழ்ந்தா னென்றும்,
பொருவடிவில் கடலமுதம் கொண்ட காலம் பெருமானைக் கருநீல வண்ணன் றன்னை,
ஒருவடிவத் தோருருவென் றுணர லாகா ஊழிதோ றூழிநின் றேத்தல் அல்லால்,
கருவடிவில் செங்கண்ண வண்ணன் றன்னைக் கட்டுரையே யாரொருவ ர் காண்கிற் பாரே?
(2055)
இந்திரற்கும் பிரமற்கும் முதல்வன் றன்னை இருநிலம்கால் தீநீர்விண் பூதம் ஐந்தாய்,
செந்திறத்த தமிழோசை வடசொல் லாகித் திசைநான்கு மாய்த்திங் கள் ஞாயி றாகி,
அந்தரத்தில் தேவர்க்கும் அறிய லாகா அந்தணனை அந்தணர்மாட் டந்தி வைத்த
மந்திரத்தை, மந்திரத்தால் மறவா தென்றும் வாழுதியேல் வாழலாம் மடநெஞ் சம்மே.
(2056)
ஒண்மிதியில் புனலுருவி ஒருகால் நிற்ப ஒருகாலுங் காமருசீர் அவுணன் உள்ளத்து,
எண்மதியுங் கடந்தண்ட மீது போகி இருவிசும்பி னூடுபோ யெழுந்து மேலைத்
தண்மதியும் கதிரவனும் தவிர ஓடித் தாரகையின் புறந்தடவி அப்பால் மிக்கு,
மண்முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை மலர்புரையும் திருவடியே வணங்கி னேனே.
(2057)
அலம்புரிந்த நெடுந்தடக்கை அமரர் வேந்தன் அஞ்சிறைப்புள் தனிப்பாகன் அவுணர்க் கென்றும்,
சலம்புரிந்தங் கருளில்லாத் தன்மை யாளன் தானுகந்த வூரெல்லாம் தந்தாள் பாடி,
நிலம்பரந்து வரும்கலுழிப் பெண்ணை யீர்த்த நெடுவேய்கள் படுமுத்த முந்த வுந்தி,
புலம்பரந்த பொன்விளைக்கும் பொய்கை வேலிப் பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
(2058)
வற்புடைய வரைநெடுந்தோள் மன்னர் மாள வடிவாய மழுவேந்தி யுலக மாண்டு,
வெற்புடைய நெடுங்கடலுள் தனிவே லுய்த்த வேள்முதலா வென்றானூர் விந்தம் மேய,
கற்புடைய மடக்கன்னி காவல் பூண்ட கடிபொழில்சூழ் நெடுமறுகில் கமல வேலி,
பொற்புடைய மலையரையன் பணிய நின்ற பூங்கோவ லூர்த்தொழுதும் போது நெஞ்சே.
(2059)
நீரகத்தாய் நெடுவரையி னுச்சி மேலாய் நிலாத்திங்கள் துண்டகத்தாய். நிறைந்த கச்சி
ஊரகத்தாய், ஒண்துரைநீர் வெஃகா வுள்ளாய் உள்ளுவா ருள்ளத்தாய், உலக மேத்தும்
காரகத்தாய் கார்வானத் துள்ளாய் கள்வா காமருபூங் காவிரியின் தென்பால் மன்னு
பேரகத்தாய், பேராதென் நெஞ்சி னுள்ளாய் பெருமான்உன் திருவடியே பேணி னேனே.
(2060)
வங்கத்தால் மாமணிவந் துந்து முந்நீர் மல்லையாய்மதிள்கச்சி யூராய். பேராய்,
கொங்கத்தார் வளங்கொன்றை யலங்கல் மார்வன் குலவரையன் மடப்பாவை யிடப்பால் கொண்டான்,
பங்கத்தாய் பாற்கடலாய் பாரின் மேலாய் பனிவரையி னுச்சியாய் பவள வண்ணா,
எங்குற்றாய் எம்பெருமான் உன்னை நாடி ஏழையேன் இங்கனமே ஊழிதரு கேனே.
(2061)
பொன்னானாய். பொழிலேழும் காவல் பூண்ட புகழானாய் இகழ்வாய தொண்ட னேன்நான்,
என்னானாய்? என்னானாய்? என்னல் அல்லால் என்னறிவ னேழையேன், உலக மேத்தும்
தென்னானாய் வடவானாய் குடபா லானாய் குணபால தாயினாய் இமையோர்க் கென்றும்
முன்னானாய் பின்னானார் வணங்கும் சோதி திருமூழிக் களத்தானாய் முதலா னாயே.