(3638)
மாயா! வாமன னே! மது சூதா! நீயருளாய்,
தீயாய் நீராய் நிலனாய் விசும்பாய்க் காலாய்,
தாயாய் தந்தையாய் மக்களாய் மற்றுமாய் முற்றுமாய்,
நீயாய் நீநின்ற வரீவை யென்ன நியாயங்களே.
பதவுரை
|
மாயா |
– |
ஆச்சரியமான செய்கைகளையுடையவனே! |
|
வாமனனே |
– |
வாமநாவதாரஞ் செய்தவனே! |
|
மதுசூதா |
– |
மதுகைடபர்களைத் தொலைத்தவனே! |
|
நீ அருளாய் |
– |
உன்படிகளை நீயே அருளிச் செய்யவேணும்; |
|
தீ ஆய் நீர் ஆய் நிலன் ஆய் விசும்பு ஆய்; கால் ஆய் |
– |
பஞ்ச பூதங்களுமாய் |
|
தாய் ஆய் தந்தை ஆய் |
– |
மாதா பிதாக்களாய் |
|
மக்கள் ஆய் |
– |
வயிற்றில் பிறந்த பிள்ளைகளாய் |
|
மற்றும் ஆய் |
– |
அல்லாதவையுமாய் |
|
முற்றும் ஆய் |
– |
சொல்லிச் சொல்லாத எல்லாமுமாய் |
|
நீ ஆய் |
– |
அவதாரணமான தன்மை வாய்ந்த நீயாய் |
|
நீ நின்ற ஆறு இவை |
– |
நீ நிற்கிற இந்தச் தன்மைகள் |
|
என்ன நியா யங்கள் |
– |
என்னவகைகளோ! |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மாயாவாமனனே) விசித்திரமான காரியங்களையும் காரணங்களையுமெல்லாம் விபூதியாகவுடைனாயிருக்கிறபடியை யநுஸந்தித்து இவையென்ன படிககிற ஆச்சரியங்களுக்கெல்லாம் ஸங்க்ரஹமாக, தொடங்கும்போதே மாயா! என்று விளிக்கிறார். அதற்கொரு லக்ஷியங்காட்டுகிறார் வாமனனே! என்று. அன்றே பிறந்து அன்றே வளர்ந்து மாவலிபக்கலிலே சென்று அவன் முன்னேநின்று தான் சொன்னவையெல்லாம் செய்யவேண்டும்படி வார்த்தை சொல்லி. சிற்றடியைக் காட்டிப் நமுசியை வானிற் சுழற்றி இப்படி செய்த செயல்களொவ்வொன்றும் ஆச்சரியமன்றோ மதுசூதா-விரோதிநிரஸனத்தில் வந்தால் மதுகைடபர்களைக் கொன்றது ஆச்சரியமான செயலாயிருக்கும். ஒரு ஸமய விசேஷத்திலே மதுகைடபர்கள் எம்பெருமானை யெதிர்த்துப் பெரும்போர் புரிய, எம்பெருமான் இவர்களைத் துடையாலிடுக்கிக் கொன்றருளினானென்று ப்ரஸித்தம். ஆழ்வான் ஸூந்தரபாஹூ ஸ்தவத்தில் திருமாலிருஞ்சோலையழகருடைய திருத்துடைகளுக்கு விசேஷணமிடும்போது “பிஷ்ட துஷ்டமதுகைடபகிடௌ” என்றார். பட்டரும் ஸ்ரீரங்கராஜஸ்வத்திலே அழகியமணவாளனுடைய திருத்துடைகளை வர்ணிக்கும்போது “மதமிவ மதுகைட ரங்ககுஞ்ஜரோர்வோ: என்றருளிச்செய்தார். இது வொரு ஆச்சரியமான செயலாதலால் இங்கு மதுசூதா! என்றது.
நீயருளாய் என்றது – நீ க்ருபைபண்ணவேணு மென்றபடியன்று; எனக்குக் தெளிய வருளிச்செய்யவேணு மென்றபடி. மேலிற் பாசுரங்களிலு மிப்படியே பொருள் காண்க.
தீயாய் நீராய் நிலனாய் – தீயாயிருப்பது நீராயிருக்க முடியாது; நீராயிருப்பது தீயாயிருக்க முடியாது. அவ்வவற்றின் தன்மை வெவ்வேறுபட்டதாதலால் ஒன்று வேறென்றாயிருக்க முடியாது. என்னும், எம்பெருமானொருவனே தீயாயும் நீராயும் நிலனாயும் விசும்பாயும் வாயுவாயுமிருப்பது ஆச்சரியமே. இப்படியே, தாயாயிருப்பவள் தந்தையாயிருக்கமுடியாது; தந்தையாயிருப்பவன் தாயாயிருக்கமுடியாது இவர்கள் தாம் மக்களாயிருக்கமுடியாது; என்னும் எம்பெருமானொருவனே தாயாயும் தந்தையாயும் மக்களாயும் ஸகலவித பந்துக்களாயுமிருப்பது ஆச்சரியமே.
நீ நீயாய் நின்றவாறு—தீயாயும் நீராயும் தாயாயும் தந்தையாயுமிருக்கிற விருப்பு ஸாராரணாகாரமெனப்படும். அஸாதாரணவிக்ரஹத்தோடு கூடியிருக்கும் திவியமான விருப்பானது நீயாய் நின்றவாறு என்ப்படுகிறது. ஈடு—“ பாமபத்திலே ஸூரிபோக்யனாயிருக்கிற விருப்போடு ஜகதாகாரனாய் நிற்கிற நிலையோடு வாசியற போக்யமாம்படியிறே இவர்க்குப் பிறந்த ஜ்ஞாநவைசத்யம்.
இவை என்ன நியாயங்களே! இது விஸ்மயப்பட்டுச் சொல்லுகிற வார்த்தை இது இன்னபடியென்று எனக்குத் தெரிகிறதில்லையே; தெரிகிறதில்லையே; தெரியவருளிச் செய்யவேணுமென்றாராயிற்று.
English Translation
O wondrous Lord, Vamana!, Madhusudana! Tell me. You stand as Earth, Fire, Water, Sky and Wind, then as Mother, Father, Children and relatives, as all else, and as you; what do these mean?
