(3535)
பாசற வெய்தியின்னே வினையேனெனை யூழிநைவேன்?,
ஆசறு தூவிவெள்ளைக் குருகே! அருள் செய்யொருநாள்,
மாசறு நீலச்சுடர் முடிவானவர் கோனைக்கண்டு,
ஏசறும் நும்மையல்லால் மறுநோக்கிலள் பேர்த்துமற்றே.
பதவுரை
| ஆக அறு தூவி |
– |
பழிப்பற்ற சிறகையுடைய |
| வெள்ளை குருகே |
– |
பரிசுத்தமான குருகே! |
| வினையேன் |
– |
பாலியான நான் |
| பாசறவு எய்தி |
– |
நிறமழிந்து |
| இன்னே |
– |
இவ்வண்ணமாகவே |
| எனை ஊழி |
– |
எத்தனைகாலம் நைந்துகிடப்பேன்! |
| ஒரு நாள் அருள் செய்து |
– |
ஒருநாள் க்ருபை பண்ணி, |
| மாசு அறு நீலம் சுடர் முடி |
– |
மாசற்ற நீலச்சுடர் பொருந்திய மயிர் முடியையுடையனான |
| வானவர் கோனை கண்டு |
– |
தேவாதிதேவனைக் கண்டு |
| ஏக அறும் தும்மை அல்லால் |
– |
“பழிப்பற்ற உம்மை யொழிய |
| பேர்த்து மற்று மறுநோக்கு இவள் |
– |
பின்னை வேறொரு கதியுடையளல்லன்“ (என்று சொல்லு.) |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பாசறவெய்தி) முன்னே நின்றதொரு குருகைத் தூதுவிடுகிறாள். உலகில் துக்கப்பட்டவர்கள் இஷ்ட ஜனங்களைக் கண்டவாறே துக்கம் மேலிடப்பெற்றுக் கதறியழுமாபோலே, குருகேயென்று விளிப்பதற்கு முன்னமே தன் துக்கமேலிட்டை வெளியிடுகிறாள் முதலடியல் பாசறவு எய்தி – பாசு என்று பசுமையைச் சொல்லிற்றாய், அதன் அறவு –நிறவேறுபாடு என்க. பசலை நிறங்கொண்டு என்றபடி. அதைப் பாசுரமிட்டுச் சொல்லமாட்டாமல் இன்னே என்று படியெடுத்துக் காட்டுகிறாள். என்னுடைய வைவர்ணியமிருக்கும்படியை நீங்களே பார்த்துக் கொள்ளுங்கோ ளென்கிறாள். எந்த விஷயத்திலீடுபட்டு இந்த நிறவேறுபாடு உண்டாயிற்றே அந்த விஷயம் பேச்சுக்கு நிலமானாலன்றோ இதுவும் பேச்சுக்கு நிலமாவது.
வினையேன் –உலகத்தில் ஒரு விஷயம் அருமைப்பட்டதென்று அறியப்பெற்றல் அதைவிட்டுக் கைவாங்கி நிற்கிறோமன்றோ, அப்படியே இந்த எம்பெருமான் அருமைப்படுகிறானென்று அறிந்தவாறே நான் இவனை மறந்து பிழைக்கலாமே, அப்படி மறக்கமாட்டாமல் நீச்சலும் நினைந்து உருகியலற்றும்படியான பாபத்தைப் பண்ணின நான் என்றபடி. எனையூழிகைவேன் ஸம்ச்லேஷம் அல்பகாலத்தளவாக இருப்பதுபோல விச்லேஷமும் அப்படியே யிரக்கலாகாதா? ஸம்ச்லேஷம் ஒரு நொடிப்பொழுதா யிருக்கவேணும், விச்லேஷம் பல பல வூழிகளாயிருக்க வேணும் என்று இப்படியும் ஒரு ஸங்கல்பா? எத்தனை யூழிகாலம் இப்படி நைவேன் என்கிறாள்.
ஆசறுதூவி வெள்ளைக்குருகே – தூவியென்று இறகுக்குப் பெயர் – இறகுகள் நிஷ்கல் மஷமாயிருக்கையாவது ஞானமும் அனுட்டானமுமாகிற இரண்டும் களங்கமற்றிருக்கை. “வெள்ளை“ என்று சுத்தியைச் சொல்லுகிறது. உள்ளும் புறமும் ஒரு படியாக நிர்மலமாயிருக்கப் பெற்ற சுத்தியைச் சொன்னவாறு. * மநஸ்யந்யத் வசஸ்யந்யத் கர்மண்யந்யத் துராத்மநாம் * என்கிறபடியன்றியே * மநஸ்யேகம் வசஸ்யேகம் கர்மண்யேகம் மஹாத்மநாம் * என்கிறபடி மன மொழி மெய்கள் ஒன்றியிருக்கப் பெற்றவர்கள் இங்கு விவக்ஷிதர்கள்.
“அருள் செய்து ஒருநாள்“ என்கிற பாடமே நம்பிள்ளை முதலான ஆசாரியர்களின் காலத்தில் வழங்கிவந்த்து. இப்பாடத்தில் இப்பாட்டுக்கு வினைமுற்று (க்ரியாபதம்) இல்லையாகிறது. “நீ போய்ச் சொல்லவேணும்“ என்கிற ப்ரார்த்தனை இருக்கவேணுமே, அது இப்பாட்டில் இல்லை, ஆனாலும் வருவித்துக் கொள்ளலாமென்று நம்பிள்ளை திருவுள்ளம் பற்றுகிறார். “அருள் செய்து என்று பாடமானபோது “என்று சொல்” என்று வாக்யசேக்ஷமாகக் கடவது“ என்றும் எழுதியுள்ளார். “அருள் செய்து“ என்று வினையெச்சமான பாடமே ப்ரஸித்தம். ஈற்றடியின் முதலிலுள்ள “ஏசறு“ என்பதை வினைமுற்றாகக் கொள்ளுகிற வழியையும் நம்பிள்ளை காட்டியருளுகிறார். ஏசறு – துக்கப்பட்டு என்றபடி. நான் படுகிற துக்கத்தை உன் வடிவிலே ஏறிட்டுக் கொண்டு காட்டு என்று தாற்பரியம்.
“மாசறுநீலச்சுடர்முடி“ என்றவிடத்து நீலச்சுடர் என்ற விசேஷண ஸ்வாரஸ்யத்தினால் முடியென்பது மயிர் முடியையே காட்டுமென்று கொண்டு பிள்ளான் நம்பிள்ளை முதலானார் அப்படியே வியாக்கியானம் செய்தருளுகிறார்கள். “நீலஜ்யோதிர்மய குந்தலபாராலங்க்ருதனாய்“ என்பது ஆறாயிரப்படியருளிச் செயல். தேசிகன் த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் இப்பாசுரத்தை நோக்கி * ஸாம்ராஜ்ய யோகாத் * என்றருளிச் செய்திருக்கையாலே முடியென்பதற்குத் திருவபிஷேகமென்று பொருள் கொண்டமை தெரிகின்றது. நீலமணிகளழுத்தின கிரீடமென்கிற பொருளும் பொருந்தும்.
English Translation
O Perfect-winged white egret, pray help me! How many ages must I suffer thus, bereft of my love? Go see the heedless Lord of spotless hue and radiant crown, and say, “This maiden sees no one save you”.
