(3534)
பூவைகள் போல்நிறத்தன் புண்டரீகங்கள் போலும்கண்ணன்,
யாவையும் யாவருமாய் நின்றமாயனென் ஆழிபிரான்,
மாவைவல் வாய்பிளந்த மதுசூதற்கென் மாற்றம்சொல்லி,
பாவைகள் தீர்க்கிற்றிரே வினையாட்டியேன் பாசறவே.
பதவுரை
| பாவைகள் |
– |
எனது லீலோபகரணங்களான மாப்பாச்சிகளே! |
| பூவைகள் போல நிறத்தன் |
– |
பூவைப்பூவண்ணனும் |
| புண்டரீகங்கள் போலும் கண்ணன் |
– |
புண்டரீகாக்ஷனும் |
| யாவையும் யாவரம ஆய்நின்ற |
– |
ஸகல சேதநாசேதந ஸ்வரூபியும் |
| மாயன் |
– |
ஆச்சர்ய சக்தியுக்தனும் |
| என் ஆழி பிரான் |
– |
கையுந்திருவாழியுமான அழகை எனக்குக் காட்டித்தந்தவனும் |
| மாவை வல் வாய் பிளந்த |
– |
குதிரை வடிவுகொண்டு நலியவந்த கேசியென்னு மகரனுடைய வலியவாயைக்கீண்டு அவனை முடித்தவனுமான |
| மதுசூதற்கு |
– |
மதுஸூதநனுக்கு |
| வினையாட்டியேன் பாசறவு |
– |
பாலியான என்னுடைய நிறக்கேட்டை |
| தீர்க்கிற்றிரே |
– |
தீர்க்க வல்லிகோளோ? (தீர்க்க வேணும் என்றபடி) |
காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (பூவைகள் போல்) இப்பாட்டுக்கு விளி ஈற்றடியிலேயுள்ளது. “பாவைகள்“ என்றது அண்மைவிளியாகையாலே பாவைகாள்! என்றபடி. பாவையாவது மரப்பாச்சி, அறிவில்லாமைக்கு எல்லைநிலமான பாவைகளையும் பார்த்து இரக்கிறாள். வரமசேதநனான ஸர்வேச்வரனோ உபேக்ஷித்துக் கைவாங்கி நின்றான், சிறிது சைதந்யமுள்ள பக்ஷிகளோ பறந்து போவனவும் அந்யவரங்களுமாயிருந்தன, இனி அசேத்னங்களைக்கொண்டு காரியம் பார்க்கையே உற்றதென்று நினைத்தாள் போலும்.
“அசேதநமுங்கூட வெழுந்திருந்து காரியஞ் செய்ய வேண்டும்படி காணும் இவளவஸ்தை“ என்பது ஈட்டு ஸ்ரீஸூக்தி.
எம்பெருமான் உபேக்ஷித்திருந்தால் இவள் வாளா கிடக்கலாகாதோ என்று நாட்டார் சொல்லுவர்கள், அந்தோ! அப்படி என்னாலிருக்கப் போகிறதில்லையே! அவனுடைய திருமேனி நிறமும் திருக்கண்ணழகும் மற்றுமுள்ள ப்ரபாவமும் குணசேஷ்டிதங்களும் நினைக்க நினைக்க வாளா விருக்க வொண்ணுமோ? என்கிறாள்.
பூவைகள்போல் நிறத்தன் – “ஆண் பெண்ணாம்படியான நிறம் படைத்தவன்“ என்பர் நம்பிள்ளை. வால்மீகி பகவான் ஸ்ரீராமபிரானைப் பற்றிப் பேசுமிடத்தில் “ஸர்வேஷாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்“ என்னலாமாயிருக்க, அங்ஙனம் சொல்லாது “பும்ஸாம் த்ருஷ்டி சித்தாபஹாரிணம்“ என்றான். ஆண்களையுங்கூட ஆகர்ஷிக்கும் வடிவு படைத்தவன் என்றபடி. பாஞ்சாலியைக் கண்ட பெண்டிர்கள் * பும்பாவம மநஸா யயு, * என்னும்படி ஆண்மையை விரும்பினது போல, என் திருமாலைக் காணுமவர்கள் ஆண்களாயிருந்தாலும் பெண்ணுடையுடுக்கும்படியாகு மென்கிறாளென்க.
புண்டரீகங்கள் போலுங்கண்ணன் – ஒரு பூவின்மேலே மற்றொரு பூ உண்டாகுமதிசயம் எங்குங்கண்டதில்லை, திருமேனியோ பூவைப்பூ, திருக்கண்களோ அந்தப்பூவில் தோன்றிய புண்டரீகங்கள் என்று வியந்து சொல்லுகிறபடி. “காயாம்பூவிலே தாமரை பூத்தாற்போலே யிராநின்றது“ என்பது ஈடு.
யாவை யாவருமாய் நின்றமாயன் – எந்த வஸ்துவோடு அவன் கலக்கப்புகுந்தாலும் வேறுபாடு தோற்றாமே ஏகவஸ்து வென்னலாம்படி கலக்கவல்லவன் என்பது இங்கு விவக்ஷிதம். என்னாழிப்பிரான் – சக்கரம் வந்தவிடத்தே சங்கும் வருமாகையாலே, இங்கு ஆழயைச் சொன்னது சங்குக்கும் உபலக்ஷணமாகி, திவ்யாயுதச் சேர்த்தியழகைக் காட்டி என்னை யீடுபடுத்திக் கொண்டவனென்றவாறு.
எவ்வளவு பேசினாலும் அவதார சேஷ்டிதங்களையும் கூடவே பேசினாலல்லது தரிப்பில்லாமையாலே கேசி நிரஸந, மதுகைடப ஸம்ஹார வ்ருத்தாந்தங்களை மூன்றாமடியிற் பேசுகிறபடி. அப்படிப்பட்ட எம்பெருமானுக்கு என் வார்த்தைகளைத் தெரிவித்து என் துக்கத்தைத் தீர்க்கமாட்டீர்களா? என்றாளாயிற்று.
English Translation
O My pet dolls! Would you not go to Madusudana,-who ripped the horse’s jaws, -deliver my message, and end my sorry plight? My Lord is dark like the Prvai flower, he has eyes like lotus petals, he is the discus-Lord who stands as everyone and everything.
