(3529)
மையமர் வாள்நெடுங்கண் மங்கைமார்முன்பென் கையிருந்து,
நெய்யம ரின்னடிசில் நிச்சல்பாலோடு மேவீரோ,
கையமர் சக்கரத்தென் கனிவாய்ப்பெரு மானைக்கண்டு
மெய்யமர் காதல்சொல்லிக் கிளிகாள்!விரைந் தோடிவந்தே?
பதவுரை
| கிளிகாள் |
– |
கிளிகளே! |
| கை அமர் சக்கரம் |
– |
திருக்கையில் அமர்ந்த திருவாழியையுடையனும் |
| கனி வாய் |
– |
கொவ்வைக்கனிபோன்ற அதரத்தை யுடையனுமான |
| என் பெருமானைகண்டு |
– |
எம்பெருமானைச் சேவித்து |
| மெய் அமர் காதல் சொல்லி |
– |
உடம்போடே அணையவேண்டும்படி எனக்குண்டாயிருக்கிற என் காதலைத் தெரிவித்து |
| விரைந்து ஓடி வந்து |
– |
உடனே இவ்விடம் வந்து சேர்ந்து |
| மை அமர் வாள் நெடு கண் |
– |
மையணிந்து அழகிய நீண்ட கண்களையுடைய |
| மங்கைமார் முன்பு |
– |
தோழிமார் முன்னிலையிலே |
| என் கை இருந்து |
– |
என் கையிலே வீற்றிருந்து |
| நெய் அமர் இன் அடிசில் |
– |
நெய்யோடு பொருந்திய இனிய இடிசிலை |
| பாலோடு |
– |
பாலோடுங்கூட |
| நிச்சல் மேலீர் |
– |
நித்யமாக ஸ்லீகரிக்க வேணும். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (மையமர்வாள்) என்னுடைய ஆற்றாமையை எம்பெருமானுக்கு அறிவித்துவந்து, நானும் என் தோழிமாரும். கொண்டாட அத்தை அங்கீகரிக்க வேணுமென்று சில கிளிகளை நோக்கி வேண்டுகின்றாள். தலைவிதான் செய்ய நினைத்திருக்கும் கைம்மாறுதன்னை முந்துற முன்பாகவத ஸத்காரமே தனக்குப் பரமோத்தேச்யமென்னுமிடம் காட்டப்பட்டது. கீழ்ப்பாட்டிலே உபயவிபூதியையும் கொடுப்பதாகச் சொல்லியற்ற பிறகு இனிமேல் கொடுக்கக்கூடியது என்ன இருக்கிறது? என்று சிலர் சங்கிக்க நேரும். அதற்குப் பரிஹாரமாக நம்பிள்ளை யபதம் தேடிக்கொடுக்கிறாள் இப்பாட்டில். அவன் பதமாகிறது உபயவிபூதியுமிறே. அதுக்கு மேலான பதமாகிறது அவனாலே விரும்பப்படும் தன்னைக் கொடுக்கை. தன்னைக் கொடுக்குமிடத்திலும் பின்னை முன்னே யென்னாதே எல்லாருங் காணக் கைமேலேயிறே கொடுக்கப்புகுகிறது.“
மையமர்வாள் நெடுங்கண் மங்கைமார்முன்பு –இவ்வாக்கியம் அவசியம் வேணுமோ? “என் கையிருந்து“ என்றால் போராதோ? என்னில், பரிஜனங்களோடே கூடிக்குலாவி ஸத்கரிக்க வேணுமென்று ஆசையாகையாலே அது தன்னைக் காட்டுகிறபடி. மையணிந்த நெடுங்கண்களையுடைய மங்கைமார்களென்றதற்கு அழகிய ஸ்வாபதேசார்த்தம் குறிக்கொள்க. * மநஸி விலஸதாக்ஷ்ணா பக்திஸித்தாஞ்ஸநேந * என்று பட்டரும், * ஸித்தாஞ்ஜநேந பவதைவ விபூஷி தாக்ஷா * என்று தேசிகனும் பணித்தபடியே பக்தியை மையென்கிறது. கண் என்கிறது ஞானத்தை பக்தி பரிகார்மிதமான ஞானத்தையுடையார் என்றபடி.
நெய்யமரின்னடிசில் நிச்சல்பாலோடுமேவீரோ? நெய் அடிசில் பால் என்று மூன்றைச் சொன்னது தத்வ ஹித புருஷார்த்தங்களைச் சொன்னபடி. * போதயந்த பரஸ்பரம் * என்ற கணக்கிலே இவற்றை உபகரிக்க நினைத்தபடி. பகவத்வைபவம், பாகவத வைபவம், ஆசார்ய வைபவம் என்ற மூன்றையும் சொல்லிற்றாகவுமாம். இப்பேற்றுக்கு நாங்கள் என்ன செய்ய வேணுமென்ன, அவை செய்யவேண்டிய காரியத்தைச் சொல்லுவன பின்னடிகள். கிளிகளே! ஒரு தாமரையிலே ஒரு தாமரை பூத்தாற்போலே திருக்கையும் திருவாழியும் சேர்ந்திருக்கிற வழகாலும், திருவாழியைக் கண்ட வுகப்பாலே புதுக்கணித்த திருப்பவளத்தினழகாலும் என்னையடிமை கொண்டவனுடைய அழகைக்கண்டு நீங்கள் உள்ளம்பூரித்து என்னுடைய காதனை அவனுக்கு வெளியிட்டு, அவனருளிச்செய்யும் வார்த்தைகளை விரைந்தோடிவந்து எனக்குச்சொல்லி என்னைத்தரிப்பித்து நெய்யமரின்னடிசில் நிச்சல் பாலொடு மேவிரோ.
மெய்யமர் காதல் – “அவளுக்கு உன்பக்கலுள்ள ஸ்நேஹம் மெய்யான ஸ்நேஹமென்று அவனுக்குச் சொல்லி“ என்பது ஆறாயிரப்படி யருளிச்செயல். “திருமேனியிலே அனையவேண்டும் படியான காதலென்னுதல், என்னுடம்போடே யணையவேண்டும் படியான காதலென்னவுமாம்.“ என்பது ஈட்டு ஸ்ரீஸூத்தி.
கிளிகாள்! – கிளி வலையில் அகப்படுமாபோலே * மாதார்கயற்கணென்னும் வலையுள்படாதே * தாமரைத் தடங்கண் விழிகளின் அகவலைப்படுப்பான் * என்றபடியே எம்பெருமானது திருக்கண்ணோக்கவலையில் அகப்பட்டும், கிளி வளர்த்தெடுப்பாருடைய கைவசமாயிருப்பதைச் சொல்லுமாம் கிளிப்பிள்ளை * என்கிறப்படியே கிளி கற்பித்ததையே சொல்லுமாபோலே * முன்னோர்மொழிந்த முறைதப்பாமல் கேட்டுப் பின்னோர்ந்து தாமதனைப் பேசுமவர்களாயுமுள்ளவர்கள் கிளியாக விவக்ஷிதர்கள்.
English Translation
O My parrots, before Vel-eyed damsels I swear, I will give you sweet butter-filled pudding with my hands, Pray seek my discus-bearing lord of berry lips. Tell him of my love and come back to me quickly.
