(3497)
கரைகொள் பைம்பொழில் தண்ப ணைத்தொலை வில்லி மங்கலம் கொண்டுபுக்கு,
உரைகொ ளின்மொழி யாளை நீருமக் காசை யின்றி அகற்றினீர்,
திரைகொள் பெளவத்து சேர்ந்த தும்திசை ஞாலம் தாவி யளந்ததும்,
நிரைகள் மேய்த்தது மேபி தற்றி நெடுங்கண் ணீர்மல்க நிற்குமே.
பதவுரை
| அன்னைமீர் |
– |
தாய்மார்களே! |
| கரை கொள் பைம்பொழில் கண்பணை |
– |
தாமிரபரணிக்கரையைக் கபளீகரிக்கின்ற பரந்த சோலைகளையும் குளிர்ந்த நீர்நிலங்களையுமுடைத்தான |
| துலை வில்லிமங்கலம் |
– |
இரட்டைத்திருப்பதியிலே |
| உரை கொள் இன்மொழியாளை நீர்கொண்டு புக்கு |
– |
புகழ்மிக்க இன்சொல்லை யுடையளான இப்பெண்பிள்ளையை நீங்கள் அழைத்துக்கொண்டு சென்று |
| உமக்கு ஆசை இன்றி அகற்றினீர் |
– |
மறுபடியும் நீங்கள் இவளோடு உறவு பண்ணுகைக்கு ஆசையில்லாதபிடி உறவறுத்துக்கொண்டீர்கள்(அது எங்ஙனம் தெரிகிறதென்றால்) |
| (இவள்) |
– |
இப்பெண்பிள்ளையானவள் |
| திரை கொள் பௌவத்து சேர்ந்ததும் |
– |
அலைகளைக் கொண்ட திருப்பாற்கடலிலே (ஆச்ரித ரக்ஷணார்த்தமாக) வந்து சேர்ந்தபடியையும் |
| திசை ஞாலம் தாவி அளந்ததும் |
– |
திசைகளோடு கூடின பூமியை முழுவதும் தாவி அடிக்கீழிட்டுக் கொண்டபடியையும் |
| நிரைகள் மேய்த்ததுமே |
– |
பசுக்கூட்டங்களை மேய்த்தபடியையுமே |
| பிதற்றி |
– |
வாய்வெருவி |
| நெடு கண் நீர் மல்க நிற்கும் |
– |
தனது நெடிய கண்களில் நீர்பெருக நிற்கின்றாள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (கரைகொள்) இப் பெண்பிள்ளையைத் துலைவில்லித் திருப்பதிக்கு அழைத்துச் சென்றவர்கள் அவ்விடத்துச் சோலையின் வாய்ப்பையும் நீர் நிலங்களின் வளங்களையும் இவளுக்கு காட்டி கொடுக்கவேணுமோ? தாமிரபர்ணியின் கரையை விளாக்குலைகொண்டிருக்கின்ற இவள் அத்திருப்பதிதன்னிலேயே யீடுபட்டு உங்களோடு உறவு அறும்படியானாள், க்ஷீரஸாகர சயனத்தையும் த்ரிவிக்கரமாபதானத்தையும் ஆநிரைமேய்த்தபடியையுமே பிதற்றிக்கொண்டு கிடக்கிறவளை இனி நீங்கள் உங்கள் மகளென்று அபிமானிக்க ப்ராப்தியுண்டோ வென்று அன்னையர்க்குத் தோழிமார் உரைக்கின்றார்கள்.
“கரைகொள்பைம்பொழில்“ என்றவிடத்திற்குத் தாத்பர்யார்த்த மருளிச்செய்கிறார் நம்பிள்ளை –“அத்திருச் சோலைய உங்களுடைய ஹிதவசனத்தாலே பேர்த்துக்கொடுப்போமன்று அன்றோ இவள் நிலையை உங்களால் பேர்க்கலாவது“ என்று. ஆற்றங்கரையிலே சோலைகளையும் அத்தலத்தலே பொருந்திவிட்டாள், அச்சோலைகளைக்குறித்து ஹிதவசனம் எப்படிப் பயன்படாதோ அப்படியே இவளைக்குறித்தும் இனி ஹிதவசனம் பயன்படாது என்றவாறு.
உரைகொள் இன்மொழியாள் என்று இங்கு ஆழ்வார்க்கு அமைந்த கீர்த்தியாய், கீர்த்திவாய்ந்த மொழியையுடையவள், (அல்லது) அர்த்தத்தினுள்ளே இழியவேண்டாதே சப்தந்தானே மிக இனிதாயிருக்கப்பெற்றவள், (அல்லது) அர்த்தத்தினுள்ளே இழியவேண்டாதே சப்தந்தானே மிக இனியதாயிருக்கப்பெற்றவள், (அல்லது) வியாக்கியானங்கொள்ளும் மொழியை யுடையவள். உரை என்று வியாக்கியானத்திற்குப் போராதலால், எத்தனை வியாக்கியானங்கள் அவதரித்தாலும் போராத ஸ்ரீஸூக்தியையுடையளென்கிறது. ஆறாயிரம் ஒன்பதினாயிரம் பன்னீராயிரம் இருப்பத்தினாலாயிரம் ஈடுமுப்பத்தாறாயிரம் என்றிப்படி எத்தனை வியாக்கியானங்கள் அவதரித்தாலும் போராத ஸ்ரீஸூக்தியையுடையளென்கிறது. ஆறாயிரம் ஒன்பதினாயிரம் பன்னீராயிரம் இருபத்தினாலாயிரம் ஈடுமுப்பத்தாயிரம் என்றிப்படி எத்தனை வியாக்கியானங்கள் அவதரித்தாலும் இன்னமும் வியாக்கியான மிடவேண்டியன்றோ ஸ்ரீஸூக்திவைபவயிருப்பது.
திரைகொள்பௌவைத்துச் சேர்த்தம் – ஆர்த்தர்களின் – கூக்குரல் கேட்கைக்காகத் திருப்பாற்படலில் அவதாரகந்தமாக வந்து சாயந்தருளினபடியைக் குறித்துவெகு ஆராய்ச்சியமாகப் பேசா நின்றாள். திசை ஞாலம் தாவியளந்த்தும் – மாவலியிடத்தே மாணுருவாய்ச் சென்று அடியை மூன்றை யிரந்து அங்கேநின்று ஆழ்கடலும் மண்ணும் விண்ணும் முடிய ஈரடியால் முடித்துக்கொண்டபடியை மிக அற்புதமாகப் பேசுகின்றாள். நிரைகள் பசுக்களையும் கன்றுகளையும் மேய்த்துத் திரிந்தபடி என்னே! என்று ஸௌலப்ய ஸௌசீல்யங்களை வாய்வெருவுகின்றாள். அவ்வளவோடும் நில்லாமல் (நெடுங்கண்ணீர்மல்கநிற்கும்) தாரை தாரையாய்க் கண்ணீர் பெருக நிற்கின்றாள், இங்ஙனம் அவ்விஷயத்திலே அவகாஹித்த இவளை இனி நீங்கள் மீட்கப் பார்க்க வழியுண்டோ வென்கை.
English Translation
You took this sweetly chirping girl to Tulavilli-Mangalam, filled with cool green bowers, then left her heartlessly. She now stands with tear-filled eyes and only mutters incoherently about grazing cows, measuring the Earth and reclining on waters.
