(3294)

(3294)

கீழ்மையினா லங்கோர் கீழ்மகனிட்ட முழவின்கீழ்,

நாழ்மை பலசொல்லி நீரணங்காடும்பொய் காண்கிலேன்,

ஏழ்மைப் பிறப்புக்கும் சேமமிந் நோய்க்குமீ தேமருந்து,

ஊழ்மையில் கண்ணபி ரான்கழல் வாழ்த்துமின் உன்னித்தே.

 

பதவுரை

(அன்னை மீர்)

தாய்மார்களே!

கீழ்மையினால்

உங்கள் நீசத்தனத்தினால்

அங்கு ஓர் கீழ்மகன் இட்ட முழவின் கீழ்

நீசனான சண்டாளனொருவன் நடத்திப்

போரும் வாத்யகோஷத்தின் சார்பாக-

பல நாழ்மை சொல்லி

தப்பு வார்த்தைகள் பலவற்றையுஞ் சொல்லி

நீர் அணங்கு ஆடும் பொய்

நீங்கள் வெறியாடுகின்ற விந்த வம்புவெலையை

காண்கிலேன்

நான் கண்கொண்டு காணமாட்டேன்:

(சிரமமாகச் செய்யவேண்டிய காரியம் என்னவென்றால்)

ஊழ்மையின்

முறைப்படியே

கண்ணபிரான்

க்ருஷணபகவானுடைய

கழல்

திருவடிகளை

உன்னித்து

சிந்தித்து

வாழ்த்துமின்

மங்களாசாஸநம் பண்ணுங்கள்:

ஈதே

இந்த மங்களாசாஸநமே

ஏழ்மை பிறப்புக்கும்

ஏழேழ் பிறவிக்கும்

சேமம்

க்ஷேமகரம்:

இ நோய்க்கும்

இந்த நோய் தீருவதற்கும்

ஈதே மருந்து

இதுதான் மருந்து.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- நீங்கள் அணங்காடுவதை நான் கண்கொண்டு காணமாட்டேன்; இவள் பிழைக்கவேணுமென்றிருந்தீர்களாகில் கண்ணபிரானுடைய திருவடிகளை நினைத்துவாழ்த்துங்கோள் என்கிறாள். ஒரு சண்டாளன் ஏதோ வாத்யம் முழங்குவதாம்; அவ்விடத்தைச் சுற்றிப்பலர் இருந்துகொண்டு தேவதாந்தரங்களின் மேலே சில கட்டுக்கதைகளைச் சொல்லிப்பாடுவதாம்;  இதனிடையே வேலன் தலை விரித்தாடுவதாம்;  ஆகவிப்படி நீங்கள் செய்து போருகிற தப்புக்காரியங்களை என் கண்ணால் பார்க்க ஸஹிக்கின்றிலேன் என்கிறாள் முன்னடிகளில்.

ரஜோகுணத்திற்கும் தமோகுணத்திற்கும் வசப்பட்டிருக்குந் தன்மையை இங்குக் கீழ்மை என்கிறது.  நாழ்மைபல சொல்லுவதாவது-அவற்றுக்கு இல்லாத ஏற்றங்கள் பலவும் சொல்லுகை.  காழ்-அவத்யம்.

இப்பரிஹார முறைகளைத் தவிர்ந்து கண்ணபிரானது கழல் வாழ்த்துவதே எற்றைக்குமேழேழ் பிறவிக்கும் நன்மைபயக்கு மென்கிறது பின்னடிகளில். ஏழ்பிறப்பென்றது-கால முள்ளதனையம் என்றபடி.  சேமம்-க்ஷேமம். ஊழ்மையின்-முறைப்படியே என்றபடி.

இந்நோய்க்குமீதே மருந்து என்பதற்குமுன்னே ஈட்டில் ‘சம்பறுத்து ஆர்க்கைக்குப் போக வேணுமோ?” என்றொருவாக்கியம் காண்கிறது. இதன் பொருளாவது-நெல்முதலிய அறுத்தால் அதை ஒரு கட்டாகக்கட்டுவதற்குக் கயிறு தேடப்போகவேணும்;  சம்பு அறுத்

தால் அதைக்கொண்டே அதைக் கட்டலாமாகையாலே வேறொரு கயிறு தேடப்போகவேண்டியதில்லை;  அதுபோல இங்குக் கண்ணபிரான் கழல்வாழ்த்துவது தவிரவேறொருமருந்து தேடப் போக வேண்டாவென்கை. “சம்பறுத்தார் ஆர்க்கைக்குப் போகவேணுமோ?” என்றும் பாடாந்தரம் காண்கிறது.  பொருள் ஒன்றே. ஆர்க்கைக்கு-கட்டுவதற்கு போகவேணுமோ-கயிறு தேடப்போகவேணுமோ?.

 

English Translation

I cannot stand and witness you heaping hollow praises on some lowly god, and wastefully dancing to cheap music.  praise the feet of Krishna with taste and discrimination, that alone is cure for this disease, and tonic for seven lives to come

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top