(3292)
அணங்குக் கருமருந் தென்றங் கோர் ஆடும்கள் ளும்பராய்
சுணங்கை யெறிந்துநுந் தோள்குலைக்கப்படும் அன்னைமீர்,
உணங்கல் கெடக்கழு தையுதடாட்டம்கண் டென்பயன்?
வணங்கீர்கள் மாயப் பிரான்தமர் வேதம்வல் லாரையே.
பதவுரை
|
அணங்குக்கு |
– |
இப்பெண்பிள்ளைக்கு |
|
அரு மருந்து என்று |
– |
அருமையான மருந்தென்று சொல்லி |
|
அங்கு ஓர் ஆடும் கள்ளும் பராய் |
– |
தேவதாந்தரத்திற்கு ஆடறுக்கவும் கள் நிவேதனம் செய்யவும் பாரித்து |
|
சுணங்கை எறிந்து |
– |
ஒருவகைக் கூத்தாடுதலையும் செய்வித்துக் கொண்டு |
|
நும் தோள் குலைக்க படும் அன்னைமீர் |
– |
தோள்கள் துடிக்கக் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்ற தாய்மார்களே! |
|
(இந்தக் கூத்தாடுதலைக் கண்டு கொண்டிருப்பதும் ஒரு வேடிக்கையோ?) |
||
|
உணங்கல்கெட |
– |
உலர்த்தின நெல் பாழாய்ப் போக |
|
கழுதை உதடு ஆட்டம் கண்டு என் பயன் |
– |
(அதனை மேய்கிற) கழுதையின் உதடு அசைகின்ற அழகைக் கண்டு கொண்டிருப்பதனால் ஒரு பயனுண்டோ? |
|
மாயன் பிரான் |
– |
ஆச்சரிய சக்தியையுடையனான எம்பெருமானுடைய |
|
தமர் |
– |
பக்தர்களான |
|
வேதம் வல்லாரை |
– |
வைதிகர்களை |
|
வணங்கீர்கள் |
– |
வணங்குங்கள். |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- இவளது நோய்க்குப் பரிஹாரமாக தேவதாந்தர பஜனம் பண்ணினால் இவளுக்கு இழவேயாம். இவள் பிழைக்க வேணுமென்றிருந்தீர்களாகில் ஸ்ரீவைஷ்ணவர்களைப் பணிவதே பாங்கு என்கிறாள். ஆடு அறுக்கவும மது நிவேதனம் பண்ணவும் பாரிக்கின்ற பரிஹாரமுறையை வாய்விட்டு நிந்திக்கின்றாள்.
பராய் என்றது பராவியென்றபடி. பராவுதலாவது பாரித்தல். ஒன்பதினாயிரப்படி, இருபத்தினாலாயிரப்படி, முப்பத்தாறாயிரப்படி, பன்னீராயிரப்படி ஆகிய நான்கு வியாக்கியானங்களிலும் இவ்விடத்தில் ஏகரூபமாகவே ஒரு அச்சுப்பிழை புகுந்துள்ளது; அதாவது, “பராவி-பாரித்து” என்றிருக்கவேண்டுவது ‘ப்ரார்த்தித்து’ என்றே விழுந்திட்டது. இங்கு அதுவன்று பொருள்;திருத்திக்கொள்க.
இரண்டாமடியில் “சுணங்கை-எறிந்து” என்றும் “சுணம்-கையெறிந்து”என்றும் கொண்டு பொருள் கூறுவர். சுணங்கையென்பது சுணங்கைக்கூத்தைச் சொன்னபடி: அதாவது கையைத்தட்டி ஆடவதொருகூத்து; தேவதாந்தரஸமாராதனமாகச்செய்யும் செய்கை
களிலே இந்தக் கூத்தாட்டமும் ஒன்றாகக்;கொள்ளத்தக்கது. “துணங்கை யென்று பாடமாய் துணங்கையென்ற கூத்தாகவுமாம்” என்பர் பன்னீராயிரவுரைகாரர். சுணம், கையெறிந்து
என்று பிரிக்குமளவில், சூர்ணமென்னும் வடசொல் சுண்ணமென்றாகி, அது சுணம் என்று தொக்கிக்கிடப்பதாகக்கொண்டு மஞ்சட்பொடி என்று பொருள்கொள்க. மஞ்சள்பொடியை ஒருவர்மேலே ஒருவரெறிந்து ஆடுவதென்பர். நும்தோள் குலைக்கப்படும் அன்னைமீர்!= வெறியாடுகிற காலத்தில் தோள்கள் அசைத்தாடப்படுவதுண்டே, அதனைக் கூறியவாறு. அன்னையருடைய தோள்களுக்கு ஒரு வியாபாரம் இல்லையே; அப்படியிருக்க “நும்தோள் குலைக்க” என்று சொல்லிற்று என்னென்னில்; ப்ரயோஜ்யகர்த்தாக்களிடம் காணப்படும் செயலை ப்ரயோஜக கர்த்தாக்களிடம் ஏறிட்டுச் சொல்லுவதுண்டாதலால் அந்த முறையிற் சொன்னபடி.
இவ்விடத்தில் ஈட்டு ஸ்ரீஸூக்திகாண்மின்;-“பகவத் விஷயத்தில் பண்ணின அஞ்ஜலிமாத்ரமும் சரண்யன் நீர்மையாலே மிகை என்றிருக்கக்கடவ நீங்கள் படும் எளிவரவேயிது.”
என்பதாம். ஆயாஸரூபமான காரியங்களைச் செய்யப்பொறாத பகவத்விஷயத்திலே வாஸநை பண்ணிப்போருகின்ற நீங்கள் இப்படிப்பட்ட ஆபாஸகருமங்களை ஏறிட்டுக்கொள்வதே ! என்று வெறுக்கிறபடி.
தோழி இங்ஙனே சொல்லச் செய்தேயும், வெறியாடுகிறவது ஒருவேடிக்கையான காரியமாக இருப்பதனால் தாய்மார்கள் அதைப்பார்த்து அதிசயப்பட்டுக்கொண்டிருக்க,
அந்தோ! இதென்ன வேடிக்கைபார்த்தல்!; நம்முடைய சரக்கு நடமாகிறபடியை அறிந்து கொள்ளாமல் இங்ஙனே வேடிக்கை பார்த்திருப்பது தகுதியோ என்று க்ஷேபிக்க நினைத்த
தோழி ஒரு லோகோக்தியை எடுத்துக்காட்டுகின்றாள். (உணங்கல் கெடக் கழுதையுதடாட்டம் கண்டு என்பயன்?) தெருவிலே உலர்த்தப்படுகிற நெல்முதலானவை உணங்கல் எனப்படும்: அதைக் கழுதை மேய்ந்து விடுவது உண்டு; அது மேயும்போது உதடு அசைகிற அதிசயமானது வேடிக்கைபார்க்கிறவர்களுக்கு விரும்பிக் காணத்தக்கதாகவே இருக்கும் (ஆனாலும் நெல் நடமாவதைக்கண்டு அக்கழுதையை அடித்துத்துரத்த வேண்டியதாயருக்க, அது செய்யாதே உதடாடுகிற அதிசயத்தைக் கண்டுகொண்டிருப்போமென்று பார்ததுக் கொண்டிருந்தார்களாகில்; அன்னவருடைய விவேகத்தை என் சொல்லுவோம்! அவவண்ணமாகவன்றோ உங்களுடைய அவிவேகமிருப்பது என்றவாறு.
இங்கே ஈடு-“ஜீவநஸாதனமான வ்ரிஹியானது நசித்துப்போம்படிக்கீடாக அத்தைத் தின்கிற கழுதையினுடைய உதட்டின் வியாபாரம் கண்டிருந்தால் என்ன ப்ரயோஜனமுண்டு?
அப்படியே, இவளைக்கொண்டு ஜீவிக்கவிருக்கிற நீங்கள் இவள் விநாசத்தை அஸிப்பபிப்பதான தேவதாந்தரஸ்பர்சமுடையார் வ்யாபாரம் கண்டிருக்கிறவித்தால் என்ன ப்ரயோஜநமுண்டு? ப்ரயோஜ்நமில்லாமையேயன்றுஇ விநாசமேயாயிற்று பலிப்பது.” என்பதாம்.
ஐயன் திருக்குருகைப் பெருமாளரையர் என்கிற வொருஸ்வாமி மற்றொருவகையாகவும் மூன்றாமடியை நிர்வஹிப்பராம்; அதாவது, உணங்கல் கெட=இப்பெண்பிள்ளையினுடைய இளைப்பு தீருவதற்காக இகழுதை=பேயினுடைய, உதடாட்டம் கண்டு என்பயன்? =நீங்கள்
ஆடுங்கள்ளும் பாரித்துக்கொடுக்க அத்தை அது விநியோகம் கொள்ளும்போது அதனுடைய உதடு ஆடுமே; அதைக்கண்டு கொண்டிருப்பதனால் என்ன பயனுண்டு? என்பதாம். கழுது
என்று பேய்க்குப் பெயர். “காலார் மருதும் காய்சினத்தகழுதும்” என்றும் “வஞ்சப்பகுவாய்க் கழுதுக்கு இரங்காது” என்றும் திருமங்கையாழ்வாரும் பிரயோகித்தருளினர். கழுதை என்றது கழுதினுடைய என்றபடி. வேலன் ஆராதிக்கிற தேவதாந்தரத்தை இங்குக்கழுதாகச் சொன்னபடி.
அடைவுபடச் செய்யவேண்டிய பரிஹாரமுறையை உணர்த்துவது ஈற்றடி: வேதம் வல்லவர்களான ஸ்ரீவைஷ்ணவர்களை வணங்குவதே இதற்குப்பரிஹாரமென்று உணர்த்தியபடி. …. ஸகல வேதங்களுக்கும் பொருள் நானே என்று கீதையில் அவன் தானே யருளிச்செய்தபடியும், ….. என்று உபநிஷத்துதானே ஒதினபடியும் இதர தெய்வங்களுக்குத் தனித்து ஒரு சக்தியில்லையென்றும், “இறுக்குமிறையிறுத்துண்ண-எவ்
வுலகுக்குந்தன் மூர்த்தி, நிறுத்தினான் தெய்வங்களாக அத்தெய்வ நாயகன்தானே’ என்கிறபடியே ஸ்ரீமந்நாராயணனே இவற்றுக்கு உயிர்நிலையென்றும் உணர்ந்த பரமைகாந்திகளை
வணங்குங்கோள் என்றதாயிற்று.
English Translation
To cure her spirits. You sacrifice a goat and pour toddy, strike your hands and shake your shoulders, what use, Ladies?, -like watching the donkey’s lips twitch while the grains disappear! Listen, go seek the Vedic seers and devotees of the Lord, now
