(3181)

(3181)

தோற்றக் கேடவை யில்ல வனுடை யான வனொரு மூர்த்தியாய்,

சீற்றத் தோடருள் பெற்ற வனடிக் கீழ்ப்பு கநின்ற செங்கண்மால்,

நாற்றத் தோற்றச் சுவையொ லிஊ றல் ஆகி நின்ற,எம் வானவர்

ஏற்றை யேயன்றி மற்றொ ருவரை யானி லேனெழு மைக்குமே.

 

பதவுரை

தோற்றம் கேடு அவை

ஜனன மரணங்களாகிற அவைகள்

இல்லவன்

இல்லாதவனும்

உடையான்

அவற்றையுடையவனும்

அவன்

ப்ரமாண ப்ரஸித்தனும்,

ஒரு மூர்த்தி ஆய்

ஒப்பற்ற நரசிங்க மூர்த்தியாய்

சீற்றத்தோடு அருள் பெற்றவன்

சீறியிருக்கும் நிலைமையிலேயே கருணைக்கு இலக்கான ப்ரஹ்ராதன்

அடி கீழ் புக நின்ற

தன் திருவடிவாரத்தில் கூசாது நிற்கப்பெற்றவனும்,

செம் கண் மால்

சிவந்த திருக்கண்களையும் ஆச்ரித பக்ஷபாதத்தையுமுடையவனும்

நாற்றம் தோற்றம் சுவை ஒலி உறல் ஆகி நின்ற

கந்தம் ரூபம் ரஸம் சப்தம் ஸ்பர்சம் என்கிற பஞ்ச விஷயங்களுமாய் நிற்பவனும்

எம் வானவர் ஏற்றையே அன்றி

தேவாதி தேவனுமான எம்பெருமானையே யன்றி

எழுமைக்கும்

எல்லாக் காலத்திலும்

மற்று ஒருவரை

வேறொருவரை

யான் இலேன்

நான் புகலாகவுடையேனல் லேன்.

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***-  ஆச்ரித விஷயத்தில் எல்லைகடந்த வாத்ஸல்யமுடைய நரஸிம்ஹ மூர்த்தியை யொழிய மற்றொருவரை யானுடையேனல்லேனென்கிறார். தோற்றாமாவது உற்பத்தி; கேடாவது விநாசம்; இவையிரண்டும் பகவத்ஸ்வரூபத்தில் இல்லாமையாலே தோற்றக்கேடவையில்லவன் என்றது. இவை ஸ்வரூபத்திலில்லாவிடினும்,  *எந்நின்றயோனியுமாயப் பிறந்தாய்* என்கிறபடியே ஸ்வேச்சையாலே பரிக்ரஹிக்கும் திருமேனிகளுக்கு உத்பத்தி விநாசங்கள் உள்ளனபோல் தோற்றுகையாலே ‘உடையான்’ என்றும் சொல்லிற்று. தோற்றக்கேடவையுடையான் என்றபடி. இப்பொருளைவிட, உடையான்  என்றதற்கு ஸ்வாமியென்கிற பொருள் சிறக்கும்; இதுவே பதார்த்தங்களை யடையத் தனக்கு சேஷமாக வுடையான். நிருபாதிக சேஷி” என்பது ஈடு.

அவனொரு மூர்த்தியாய்  கருமம் காரணமான பிறப்பு இல்லாதவன் அடியார்களுக்காக விகரஹ பரிக்ரஹம் செய்பவனாய் என்றபடி.

சீற்றத்தோடு அருள்பெற்றவன் = இது ப்ரஹ்லாதாழ்வானைச் சொன்னபடி; நரஸிம்ஹ பகவானுக்கு இரணியன்மேல் அளவு கடந்த சீற்றம் ஒருபுறம் செல்லா நிற்க, ப்ரஹ்லாதாழ்வான் குளிர்ந்த நோக்கத்திற்குப் பாத்திரமாயினன். – எம்பெருமானாரைச் சிலர் கேட்டார்களாம்; நரசிங்கமூர்த்திக்குச் சீற்றம் அளவுமீறிப் பொங்கிச் செல்லுகையில் சிறுக்கன் எங்ஙனே அணுகிநிற்கவல்லவனாயினன்? என்று. அதற்கு அவர் அருளிச்செய்தவிடை – “ஸிம்ஹம் ஆனைமேலே சீறினாலும் குட்டிக்கு முலையுண்ணலாம்படி யிருக்குமிறே” என்றாம். இவ்விடத்திற்குப் பொருத்தமாக “இழவுதரியாத தோரீற்றுப்பிடி யிளஞ்சீயந் தொடர்ந்து முடுகுதலும், குழவியிடைக் காலிட்டெதிர்ந்து பொருங் கோவர்த்தன மென்னுங் கொற்றக்குடையே” என்ற பெரியாழ்வார் திருமொழி நோக்கத்தகும்.

செங்கண்மால் = இரணியன் பக்கல் சீற்றத்தாலும் கண் சிவந்திருக்கும்; ப்ரஹ்லாதாழ்வான் பக்கல் வாத்ஸல்யத்தாலும் சிவந்திருக்கும். மால்=“மாலே பெருமை கருமை மையலுமாம்” என்ற நிகண்டின்படி பெருமையும் மையலும் இங்குக் கொள்ளத்தகும்: இரணியன் பக்கலில் பெருமை காட்டப்பட்டது; ப்ரஹ்லாதாழ்வான் பக்கலில் மையல் காட்டப்பட்டது. (மையல்-வியாமோஹம்; அன்பு.)

நாற்றத்தோற்றமித்யாதி. சப்தாதி விஷயங்கள் ஸம்ஸாரிகளுக்கு வேறாயிருக்கும்; தமக்கு அவையெல்லாம் எம்பெருமானேயா யிருப்பன் என்கிறது.

 

English Translation

Through seven lies I have none but my Krishna,  He is my smell and form and taste and sound and touch.  The birthless, deathless, Lord with lotus eyes came as a big man-lion and gave refuge to Prahiada, the child-devotee of his feet.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top