(3145)

(3145)

அண்ணல் மாயன் அணிகொள்செந் தாமரைக்

கண்ணன், செங்கனி வாய்க்கரு மாணிக்கம்,

தெண்ணி றைச்சுனை நீர்த்திரு வேங்கடத்து,

எண்ணில் தொல்புகழ் வானவ ரீசனே.

 

பதவுரை

அணிக்கொள்

அழகுபொருந்திய

செம் தாமரை கண்ணன்

செந்தாமரை மலர் போன்ற திருக்கண்களையுடையவனும்

செம் கனிவாய்

சிவந்த கனிபோன்ற அதரத்தையுடையவனும்

கருமாணிக்கம்

நீலரத்னம்போல் திருமேனி விளக்கத்தை யுடையவனும்

தென் நிறை சுனை நீர்

தெளிவையும் நிறைவையுமுடைய சுனைநீர் பொருந்திய

திருவேங்கடத்து

திருமலையில்

எண் இல் தொல் புகழ்

எண்ணிறந்த நித்திய கல்யாண குணங்களையுடையவனும்

வானவர் ஈசன்

நித்யஸூரிகட்குத் தலைவனுமான எம்பெருமான்

அண்ணல்

நமக்கு ஸ்வாமியும்

மாயன்

ஆச்சரிய சேஷ்டிதங்களையுடையவனுமானவன்

 

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய

விளக்க உரை

***- -ஆழ்வீர்! திருமலையில் அடிமை செய்யவேணுமென்று நீர் பாரிக்கின்றீர்; இஃது உமக்கு வாய்க்குமோ வென்ன; எண்ணிறாத நித்ய ஸித்தபுருஷர்களெல்லார்க்கும் தன்னை அநுபவிக்கக் கொடுத்துக்கொண்டிருக்கிறானோரு புரமோபகாரகனல்லானோ அவன்; அன்னவன் நமக்கும் தன்னைத் தந்தருளமென்கிறார்.

(எம்பெருமான் ஸ்வாநுபத்தை நமக்குத் தந்தருள்வன் என்பது இப்பாசுரத்தில் கூறப்பட்டிருக்கவில்லையே என்னவேண்டா; எண்ணில் தொல்புகழ்வானவ ரீசனே என்ற ஈற்றடியில் இக்கருத்து உறைந்து நிற்கும். நமக்குத் தந்தருளாதொழிந்தனாகில் தொன்புகழுடைமை தேறுமோ என்றவாறு.)

அண்ணல் என்றதற்குப் பொருளருளிச் செய்யாநின்ற நம்பிள்ளை “குறிஞ்சி நிலத்தில் தலைமகனென்னுதல், ஸர்வஸ்வாமி யென்னுதல்” என்றருளிச் செய்துள்ளார். அண்ணலென்கிறசொல் பொதுவாக ஸ்வாமியைச் சொல்லக் கடவதென்றும்; சிறப்பாகக் குறிஞ்சிநிலத் தலைமகனைச் சொல்லக்கடவதென்றும், தமிழர் கூறுவர். இரண்டுவகையான பொருளும் அவ்விடத்திற்கு ஒக்கும். மலையும் மலை சார்ந்த இடமும் குறிஞ்சி நிலமென்க. தொல்காப்பியத்தில் பொருளதிகாரத்தில் இருபதாவது ஸூத்திரத்தின் உரையில், அண்ணல் என்பதற்கு முல்லை நிலத்தலைவன் என்ற பொருளும் கூறப்பட்டுள்ளது.

மாயன் = ஆச்சரியமான வடிவழகு முதலியவற்றையுடையவன் என்றபடி, அவற்றில் ஒன்றை யெடுத்துரைக்கிறார் அணிகொள் செந்தாமரைக்கண்ணன் என்று, “இக் கண்ணழகு உடையவனுக்கு வேறொரு அலங்காரம் வேண்டா” என்னும்படியிருப்பதாய், தனக்குத்தானே ஆபரணமாய், விகாஸம் செவ்வி குளிர்த்தி நறுமணங்களினால் தாமரையை ஒருவகைக்கு ஒப்பாகக் கொள்ளுமதான கண்ணழகையுடையவன் என்க. அடியார்க்களை முந்துற முன்னம் திருக்கண்களாலே கடாக்ஷித்து, பிறகு சோதிவாய் திறந்து வார்த்தை சொல்லுவனாதலால், திருக்கண்ணுக்கு அடுத்தபடியாக செங்கனிவாயை அநுபவிக்கிறார். அபிமத ஜநதர்நாநந்த வேகத்தாலே அர்ச்சாவதார ஸமாதியைக் கடந்து விம்மி வெளிலிழுக்கின்ற அவ்யக்த மதுர மந்தஹாஸ விரைஸந்தன்னை அநுபவித்து அருளிச் செய்கிற வார்த்தை இது.

செங்கனிவாய் என்றதன் வியாக்கியானத்தில் (ஈட்டில்) “முறுவலாலேயாயிற்று இவரை யெழுதிக்கொண்டது” என்கிற ஸ்ரீஸூக்தி காணப்படுதலால் “அணிகொள் செந்தாமரைக்கண், என் செங்கனிவாய்” என்று பாடம் நம்பிள்ளை திருவுள்ளம் பற்றியதாகுமென்று அழகியமணவாளச்சீயர் (அஸ்டுமஸ்தாசார்யா) அருளிச்செய்யக் கேட்டிருக்கை. எண் என்றோ எம் என்றோ வருகிற விடங்களில் இங்ஙனம் வியாக்கியானிப்பது வழக்கமாதலால் இந்த ஊஹம் உரியதே.

கருமாணிக்கம் = இதனால் திருமேனியை நினைக்கிறது; உவமையாகுபெயர்.

தெண்ணிறைச்சுனைநீர் = இங்குப் பன்னீராயிரப்படி யுரைகாரரொருவர் மாத்திரம். “தெண்ணிறச் சுனைநீர்” என்று பாடங்கொண்டு ‘தெளிந்த நிறத்தையுடைய’ என்று பொருள் பணிக்கின்றார்; மற்ற வியாக்கியானங்களில் நிறை என்று பாடமே கொள்ளப்பட்டது. இப்பாடத்தில் “நிறைகனை” என இயல்பாக வேண்டியிருக்க “நிறைச்சுனை” என்று சகர மிரட்டித்தது எங்ஙனேயென்னில்; நிறை என்பதை வினைப்பகுதியாகக் கொள்ளாமல் முதனிலைத் தொழிற்பெயராகக் கொண்டு ‘நிறைதலையுடைய’ என்று பொருள்கொள்ளுமளவில் வல்லொற்று மிகுதல் பொருந்துமென்ப.

 

English Translation

The cool-springs venkatam Lord of countless glories has beautiful lotus-eyes, a black gem-hue and coral lips.

Leave a Comment

Your email address will not be published.

Dravidaveda

back to top