(3118)
வழக்கெனநினைமின் வல்வினைமுழ்காது *
அழக்கொடியட்டான் அமர்பெருங்கோயில் *
மழக்களிற்றினம் சேர் மாலிருஞ்சோலை *
தொழக்கருதுவதே துணிவதுசூதே.
பதவுரை
வல் வினை | – | கொடிய பாவங்களிலே |
மூழ்காது | – | அழுந்தாமல் |
வழக்கென நினைமின் | – | (இவ்வுபதேசத்தை) நியாயமென்று கொள்ளுங்கள்; |
அழம் கொடி | – | பேய்ச்சியாகிற பெண்ணை பூதனையை |
அட்டான் | – | முடித்தருளின பெருமான் |
அமர் | – | எழுந்தருளியிருக்கிற |
பெரு கோயில் | – | பெரிய ஸந்நிதியாய், |
மழ களிறு இனம் சேர் | – | இளமைதங்கிய யானைக் கூட்டங்கள் சேருகிற |
மாலிருஞ்சோலை | – | திருமலையை |
தொழ கருதுவது | – | வணங்க வேணுமென்று எண்ணுவதில் |
துணிவதே | – | திடமான அத்யவஸாயங் கொள்வதே |
சூது | – | சிறந்த வுபாயம் |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை
. *திருமலையைத் தொழவேணுமென்கிற திண்ணிய அத்யவஸாயங் கொள்ளு மத்தனையே போதுமென்கிறார். அழக் கொடியட்டான் = அழமென்று பேய்க்குப் பெயர். கொடி யென்பது மாதர்க்கு உவமையாகு பெயர். பெண்ணுருவம் கொண்டுவந்த பேய் என்றபடி, திருவாய்ப்பாடியில் நந்தகோபர் திருமாளிகையில் ஒளித்து வளர்கின்ற கண்ணபிரானைக் கொல்லும் பொருட்டுக் கம்ஸனால் ஏவப் பட்ட அசுரர்களில் ஒருத்தியான பூதனை யென்னும் ராக்ஷஸி நல்ல பெண்ணுரு வத்தோடு இரவில் திருவாய்ப்பாடிக்கு வந்து அங்குத் தூங்கிக்கொண்டிருந்த ஸ்ரீக்ருஷ்ண சிசுவை யெடுத்துத் தனது நஞ்சு தீற்றிய முலையைக் கொடுத்துக் கொல்ல முயல, பகவானான குழந்கை அவ்வரக்கியின் தனங்களைக் கைகளால் இறுகப் பிடித்துப் பாலுண்ணுகிற பாவனையிலே அவளுயிரையும் உறிஞ்சி அவள் பேரிரைச்சலிட்டுக் கதறி உடம்பு நரம்புகளின் கட்டெல்லாம் நீங்கி விழுந்து இறக்கும்படி செய்தனன் என்ற பூதநாஸம்ஹார வரலாறு இங்கு உணரத்தக்கது. (அழம் என்று பிணமாய், அத்தாலே பேய் என்றபடி என்ற வியாக்கியான ஸ்ரீஸூக்தியும் காண்க.)
மழக்களிற்றினஞ்சேர் என்றவிடத்து ஒரு ரஸோக்தி அருளிச் செய்வர் நம்பிள்ளை;- ” லக்ஷணோபேதமாயிருப்பதொருவனை நின்றவிடத்தே ஆயிர மானைகள் வந்து சேராநிற்கும். அங்கு நிற்கிறதோ சோலைமழகளிறு,” என்று. திருமங்கையாழ்வார் அழகரை “சோலை மழகளிறே!” என விளித்தார். தென்னானாய்! என்று தெற்குத் திருமலையில் நிற்கிற யானையே! என்றும் விளித்தார்; அப்படிப்பட்ட யானையினருகே மழக்களிற்றினம் சேர்வது வியப்பன்று என்று நாட்டியவாறு.
English Translation
Think what is fit and do not sink into evil. The lord who dried putana’s breasts lives in maliumsolai amid groves with youthful elephants. Offering worship to him there is the only good.
