(3062)
ஆணல்லன்பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்,
காணலுமாகான் உளனல்லன் இல்லையல்லன்,
பேணுங்கால்பேணுமுருவாகும் அல்லனுமாம்,
கோணை பெரிதுடைத்தெம்மானைக்கூறுதலே.
பதவுரை
|
எம்பெம்மானை கூறுதல் |
– |
எம்பெருமானைப் பற்றிச் சொல்லுவதானது |
|
கோணை பெரிது உடைத்து |
– |
மிகவும் ப்ரயாஸமுடையதாயிருக்கிறது; (ஏனென்னில், அப்பெருமான்) |
|
ஆண் அல்லன் |
– |
ஆணுமல்லன், |
|
பெண் அல்லன் |
– |
பெண்ணுமல்லன் |
|
அல்லா அலியும் |
– |
இவ்விரண்டுமல்லாத நபும் |
|
அல்லன் |
– |
ஸயனுமல்லன் |
|
காணாலும் ஆகான் |
– |
கண்ணாற் பார்க்கவும் முடியாதவன் |
|
உளன் அல்லன் |
– |
உள்ளவனல்லன் |
|
இல்லை அல்லன் |
– |
இல்லாதவனுமல்லன் |
|
பேணுங்கால் |
– |
(அடியார்) விரும்பின காலத்து |
|
பேணும் உரு ஆகும் |
– |
அவர்கள் விரும்பின வடிவை யுடையவனாவன் |
|
அல்லனும் ஆம் |
– |
அப்படியல்லாதவனாயுமிருப்பன் (ஆதலால் என்க) |
ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய
விளக்க உரை
***- (ஆணல்லன்) எம்பெருமானைப் பேசித்தலைக்கட்டுவது மிகவும் ஆயாஸஸாத்யமென்கிறார். ஆணல்லன் பெண்ணல்லன் அல்லா அலியுமல்லன்-ஸகவஸ்து விலக்ஷணன் என்றபடி. ருக்வேத ஆரண்யகத்தில் ஓதப்பட்டுள்ளதையடியொற்றி இந்தப் பாசுரம். இப்பாசுரத்தை பட்டர் இங்ஙனம் உபந்யஸித்துக்கொண்டிருக்கையில் கேட்டிருந்த ஒரு தமிழன், உலகத்திலுள்ள பொருள்கள் ஸ்த்ரிலிங்கபும்லிங்க நபும்ஸகலிங்களிற் சேர்ந்தல்லது இருக்கமாட்டவே; எம்பெருமான் இந்த மூன்றுபடியிலும் சேர்ந்திலன் என்றால் சூத்யம் என்று சொன்னபடியாகுமே; பரப்ரஹமம் சூத்யம் என்றே ஆழ்வாரருளிச் செய்வது? என்று கேட்டானாம். அதற்கு உத்தரமாக பட்டர் அருளிச் செய்தது;- “ஸாமாந்யே நபும்ஸகம” என்றபடி “ஆணல்ல பெண்ணல்ல அல்லா வலியுமல்ல” என்று ஆழ்வார்அருளிச் செய்திருப்பா;. அங்ஙனன்றியே அல்லன் அல்லன் அல்லன் என்றே (ஆண்பாலுக்குரிய அன்விகுதியையிட்டு) அருளிச் செய்திருக்கையாலே ‘எம்பெருமான் ஸாமாந்ய புருஷனல்லன், புரஷோத்தமன்’ என்று தெரிவிக்கப் பட்டதாகாதோ? என்று. இதைப் கேட்டு அவன் மிகவுமுகந்தான்.
காணலுமாகான்-ஆண் பெண் அலி என்கிற இவற்றைக்காணும் பிரமாணங்களினால் காணக்கூடாதவன் என்க. “என்றேனும் கட்கண்ணாற்காணாதவவ்வுரு” என்கிறபடியே மாம்ஸக்கண்ணாற் காணமுடியாதவனென்றவாறு.
உளனல்லன் இல்லையல்லன்- நாஸ்திகர்களுக்கு நாஸ்தி யென்னலாம்படியிருப்பவன், ஆஸ்திகர்களுக்கு அஸ்தி யென்னலாம்படியிருப்பவன் என்றபடி. பேணுங்காற் பேணுமுருவாகும்-“தமருகந்த தெவ்வுருவம் அவ்வுருவந்தானே” என்கிறபடியே அவரவர்கள் விரும்புகிறபடி வடிவு கொள்பவன் என்கை. தேவகி முதலானவர்கள் தன்னை ஆச்ரயித்தால், அவர்களுகந்தபடியே அவர்கட்குப் பிள்ளையாய்ப் பிறப்பவன் என்னவுமாம். பேணுங்கால்-பிரார்த்திக்குமிடத்து, பேணுமுருவாகும்- மறைத்துக் கொள்ள வேண்டும்படியான உருவத்தோடு வந்து பிறப்பவன் என்றது மொன்று.
அல்லனும்ஆம்-பிறந்தவிடந்தன்னிலே விமுகரான கம்ஸ சிசுபாலாதிகளுக்குக் கிட்டவொண்ணாதவன். (ஆக இப்படிப்பட்ட) எம்பெருமானைக் கூறுதல் கோணை பெரிதுடைத்து-எம்பெருமானைத் துதிப்பது ச்ரமஸாத்யம்-ஒருவிதமர்கவும் சொல்லுவதற்கில்லை என்றபடி. கோணை-மிறுக்கு, ஆயாஸம்.
English Translation
My Lord is neither male nor female nor eunuch My Lord cannot be seen; he is not, nor non-existent. He takes the form by which you wish to see him, but he is not it. Describing my Lord is a veritable riddle indeed.
